ஹாட் லீக்ஸ்: மறுத்தார் தங்கம், மடக்கினார் தினகரன்!


ஒரு நோட்டு... ஒரு ஓட்டு!

சூலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் தெ.பிரபாகரன், மணல் திருட்டு மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். டெல்லிக்கே சென்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடியவர். தனது போராட்டங்களால் தனக்கென ஒரு இளைஞர் படையைத் தக்கவைத்திருக்கும் இவர், ‘வேட்பாளர் காப்புத் தொகைக்காக வங்கிக்கணக்கில் ஒரு ரூபாயும் ஓட்டுப் பெட்டியில் ஒரு வாக்கும் போட்டு உதவுங்கள்’ என்று தனது வங்கிக்கணக்கு எண்ணையும் பதிவிட்டு சமூக வலைதளங்களில் நூதன பிரச்சாரம் செய்து வருகிறார்.

ரிசல்ட் வந்ததும் ரிவிட் நிச்சயம்!

திருச்சி தொகுதியில் களம் கண்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், தேர்தல் செலவுக்காக உள்ளூர் அதிமுக அமைச்சர்களின் கையைப் பெரிதாக எதிர்பார்த்தாராம். அவர்களோ, “நீங்க பணம் கொடுத்தா நாங்க வேலை செய்யுறோம்” என்று ஜகா வாங்கிக்கொண்டார்களாம். இதனால், செலவுக்குப் பணமில்லாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் இளங்கோவன். இதையடுத்து, “இப்படியே போனால் உள்ளாட்சி உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்தல்களிலும் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும்” என உளவுத்துறை அபாய மணி அடித்ததாம். இதையடுத்து கொங்கு அமைச்சர் ஒருவர் ‘10 சி’ படியளந்து, “இத வெச்சு சமாளிச்சு கட்சி மானத்தை காப்பாத்துங்கப்பா” என்றாராம். ஆனால், மேலிருந்து கீழ் வரை பங்கு வைக்கப்பட்ட இந்தப் பணத்தில் பத்தில் ஒரு பங்குதான் வாக்காளர்கள் கைக்குப் போய்ச்சேர்ந்ததாம். இந்தத் தகவலையும் கட்சித் தலைமையின் கவனத்துக்கு தட்டிவிட்டிருக்கிறது உளவுத்துறை. ரிசல்ட் வந்ததும் திருச்சி அதிமுகவில் பலருக்கும் ரிவிட் நிச்சயம் என்கிறார்கள்.

x