பேசும் படம் - 18: விமானத்தில் நடந்த பதவியேற்பு விழா!


பதவியேற்பு விழாக்கள் என்றாலே ஒருவித பிரம்மாண்டம் நம் கண்முன் வந்துபோகும். அதிலும் உலகின் வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒருவர் பதவியேற்கிறார் என்றால், அந்நிகழ்ச்சி எத்தனை பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால், அப்படி எந்த ஆடம்பரங்களும் இல்லாமல் 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஒரு விமானத்துக்குள் பதவியேற்றுள்ளார் லிண்டன் ஜான்சன் (Lyndon B. Johnson). இதைப் படம்பிடித்த ஒரே நபர், அமெரிக்க புகைப்படக் கலைஞரான செசில் ஸ்டோக்டன்.

அமெரிக்கர்கள் மத்தியில் பிரபலமான ஜனாதிபதிகளில் ஒருவர் ஜான் எஃப். கென்னடி. 1961-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற தலைவராக விளங்கினார். இந்நிலையில் 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி டல்லஸ் (Dallas) நகரில் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் கென்னடி. அவரது மனைவி ஜாக்குலின் பின்னிருக்கையில் அமர்ந்து வர, சாலையோரம் நின்றிருந்த மக்களின் வாழ்த்துகளை கென்னடி ஏற்க வசதியாக, அவரது கார் மெதுவாகச் சென்றது. அந்தக் காரை பின்தொடர்ந்து சென்ற மற்றொரு காரில், அந்நாட்டின் துணை ஜனாதிபதியான லிண்டன் ஜான்சன் இருந்தார்.

அந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராத அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. காரில் இருந்த கென்னடியை, எங்கிருந்தோ சீறிப் பாய்ந்துவந்த 3 துப்பாக்கி குண்டுகள் தாக்கின. தலையிலும், கழுத்திலும் துப்பாக்கி குண்டுகள் பாய, ரத்த வெள்ளத்தில் சரிந்தார் கென்னடி. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

கென்னடி கொல்லப்பட்டதால், அமெரிக்காவே பரபரப்பானது. ஒருபுறம் கென்னடியின் உடல் அடக்கத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட, மறுபுறம் துணை ஜனாதிபதியான லிண்டன் ஜான்சனை, புதிய ஜனாதிபதியாக பதவியேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. புதிய ஜனாதிபதி உடனடியாக பதவியேற்க வேண்டியிருப்பதால், பதவியேற்பு நிகழ்ச்சியை உடனடியாக நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

பதவியேற்பு விழாவுக்கு இடம் தேடி நேரத்தை வீணடிக்க யாரும் தயாராக இல்லை. அதனால் டல்லஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரபூர்வ விமானமான ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’னிலேயே அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கத் திட்டமிடப்பட்டது. இது முடிவானதும் லிண்டன் ஜான்சனின் குடும்பத்தினருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் உள்ள ஸ்டேட் ரூமில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லிண்டன் ஜான்சனின் விருப்பப்படி அவரது நீண்டகால நண்பரும், பெடரல் மாவட்ட நீதிபதியுமான சாரா டி. ஹியூஜஸ் புதிய ஜனாதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க அழைக்கப்பட்டார்.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையிலும், கென்னடியின் மனைவி ஜாக்குலின் வந்த பிறகுதான் பதவிப்பிரமாணம் செய்துகொள்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார் லிண்டன் ஜான்சன். ஜாக்குலினோ தன் கணவரின் உடலோடுதான் டல்லஸ் நகரில் இருந்து புறப்படுவேன் என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியில் கணவர் கென்னடியின் உடலுடன் ஜாக்குலின் விமானத்தில் ஏற, பதவியேற்பு விழா தொடங்கியது.

விமானத்தில் உள்ள சிறிய அறையில் நடந்த பதவியேற்பு விழாவில் 27 பேர் பங்கேற்றனர். போதிய காற்றோட்டம் இல்லாமல் அனைவருக்கும் வியர்த்தது. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஜாக்குலினின் ஆடையில், கென்னடியின் ரத்தக் கறை படிந்திருந்தது. ஜாக்குலின் கென்னடி உள்பட இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட அனைவரும் சோகமயமாகவே காட்சியளித்தனர். மொத்தத்தில் பெரிய அளவில் உற்சாகம் ஏதும் இல்லாமல் ஒரு சம்பிரதாய சடங்காக இந்தப் பதவியேற்பு விழா நடந்தது.

செசில் ஸ்டோக்டன்
(Cecil Stoughton)

செசில் ஸ்டோக்டன், 1920-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள அயோவாவில் பிறந்தார். இரண்டாம்  உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தின் சிக்னல் பிரிவில் பணியாற்றிய செசில், பின்னர் ராணுவத்தில் இருந்து விலகி புகைப்படக்காரராக மாறினார். அமெரிக்க அதிபராக கென்னடி இருந்த போது  அவரது  தனிப்பட்ட  புகைப்படக்காரராக  இருந்த செசில், பல அரிய புகைப்படங்களை எடுத்துள்ளார். இக்காலகட்டத்தில் கென்னடி மற்றும் அவரது குடும்பம் சார்ந்த சுமார் 8,000 புகைப்படங்களை இவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லிண்டன் ஜான்சன் விமானத்தில் பதவியேற்றதைப் படம் பிடித்த ஒரே புகைப்படக்காரர் என்ற  புகழைப் பெற்ற செசில், 2008-ல், புளோரிடாவில் காலமானார்.
 

x