என்.சுவாமிநாதன்
குமரி மாவட்டம், வில்லுக்குறியில் மருத்துவமனை நடத்திவரும் பிசியான மருத்துவர் ஜாக்சன். அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களையும் நடத்தும் இவர், அதற்காகவே ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி என்ற கட்சியையும் நடத்துகிறார். “சும்மா போராட்டங்களை மட்டும் நடத்திக்கிட்டிருந்தா எப்படி?” என்று யாராவது கேட்டிருப்பார்களோ என்னவோ... கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் களம் கண்டார். இந்த முறை குமரி நாடாளுமன்றத் தொகுதியில் பொன்னாரை எதிர்த்து களத்துக்கு வந்துவிட்டார் ஜாக்சன்!
பிரச்சாரத்தில் பிசியாக இருந்த ஜாக்சனிடம் பேசினேன். “சின்ன வயசுல வீட்ல அடிக்கடி சிவாஜி பாட்டு ஓடும். ’தங்கங்களே நாளை தலைவர்களே…நம் தாயும் மொழியும் கண்கள்’ன்னு பாட்டைக் கேட்டு வளர்ந்த புள்ள நான். அதுவே தலைவனா வரணும்கிற எண்ணத்தை எனக்குள்ள விதைச்சிருச்சு. என்னதான் அறிவாளியா இருந்தாலும் பதவிக்கு வர ஒரு வயசு வேணும் இல்லியா... அதான் 40 வயசுக்காகக் காத்திருந்தேன்!
சட்டமன்றத் தேர்தல்ல நாகர்கோவில் தொகுதியில் நின்னு 1,411 ஓட்டு வாங்கினேன். பெரிய பெரிய கட்சிகளை எல்லாம் கடந்து எனக்கு உளப்பூர்வமா விழுந்த வாக்குகள் இவை” என்று சொன்னவரை இடைமறித்து, “பொன்.ராதாகிருஷ்ணன், வசந்தகுமார் எனப் பிரபலங்கள் நிற்கும் இந்தத் தேர்தல்ல என்ன நம்பிக்கையில் போட்டி போடுறீங்க?” என்று கேட்டேன்.