லைக்குகள் விற்பனைக்கு!- போலி கணக்குகள்... புகுந்து விளையாடும் கட்சிகள்!


ஆர்.ஷபிமுன்னா

காங்கிரஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக 687 போலிக் கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் நீக்கியது. இவற்றில் சுமார் 100 கணக்குகள் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுள்ளன. இது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று எழுந்த புகாரைச் சமாளிக்க மறுநாள், பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் ஆதரவளித்த 15 போலிக் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், உண்மையில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு தேர்தல் ஆதாயம் பார்க்கும் போலி வலைதள கணக்குகளின் எண்ணிக்கை பல கோடிகளைத் தொடும் என்கிறார்கள். இதில் எந்தக் கட்சிக்கு முதலிடம் என்பது ஒருபுறம் இருக்க... இந்தப் போலிக் கணக்குகளின் செயல்பாடுகள் அதிர்ச்சிக்குரியதாக உள்ளன.

அடிப்படையில் போலிக் கணக்குகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனமும் தன் தொழில்நுட்ப முறைகளால் தானாக முன்வந்து உதவுகிறதே தவிர, அவற்றின் உண்மைத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை. அந்தக் கணக்குகளிலும் விளம்பரங்களை வெளியிட்டு ஃபேஸ்புக் காசு பார்ப்பதே இதற்கு முக்கியக் காரணம்.

இப்படிப்பட்ட போலிக் கணக்குகளை மதம் சார்ந்த சில அமைப்புகளும், வியாபார நிறுவனங்களும் அணுகுகின்றனர். இவர்கள் போலிக் கணக்காளரிடம் பேசி அவருடைய போலிக் கணக்கை விலைக்கு வாங்கித் தங்கள் கருத்தையும் விளம்பரங்களையும் அவற்றில் வெளியிட்டுப் பலனை அடைகின்றனர். இந்தப் பதிவுகளை வேண்டாவெறுப்பாகப் படிப்பவர்களில் பலரும் அவற்றின் ஈர்ப்புகளுக்கு பலியாகிவிடுவது உண்டு. பல வருடங்களாக நிலவும் இந்தச் சூழலை உணர்ந்த சமூக விரோதிகள் இத்தகைய போலிக் கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் போலிக் கணக்குகள் சர்வதேச சந்தையாகவே மாறிவிட்டன. இந்தியாவில் இந்தச் சந்தை வளர்ந்து வந்தாலும் பெரும்பாலும் இது வெளிநாடுகளிலிருந்து நிர்வாகிக்கப்படுகிறது.

x