ஸ்ரீபெரும்புதூர் கள நிலவரம்... பயமில்லாமல் இருக்கலாம் பாலு


கரு.முத்து

திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தொடர்ச்சியாக நான்கு முறை  மகுடம் தரித்த தொகுதி தென் சென்னை.  இந்தத் தொகுதியின் மூன்று சட்டமன்றத் தொகுதிகள், தொகுதி சீரமைப்பில் ஸ்ரீபெரும்புதூருக்குள்  வந்ததால், 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு வந்தார்  டி.ஆர்.பாலு. அந்தத் தேர்தலில் சொற்ப ஓட்டில் வென்றாலும், அடுத்த தேர்தலில் சொந்த மண்ணில் கால்பதித்துப் பார்க்கலாமே என்ற திட்டத்தில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டார். அங்கே உள்ளடி வேலைகள் தனது வெற்றிக்கு உலை வைத்ததால், மீண்டும் பெரும்புதூருக்கே இடம் பெயர்ந்திருக்கிறார்!

பாலுவிடம் பலம் காட்டி ஜெயிக்க முடியாது என்பதால் இந்தத் தொகுதியைக் கூட்டணித் தோழன் பாமகவுக்குத் தந்திரமாகத் தந்துவிட்டது அதிமுக. இருந்தாலும், 2009 தேர்தலில் சுமார் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாலுவிடம் தொகுதியை இழந்த பாமக, இந்த முறை பெருத்த நம்பிக்கையுடன் களத்துக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்த்துவிடக் கூடாது என்பதற்காக சொந்தக் கட்சியினர் மட்டுமல்லாது அதிமுக உள்ளிட்ட கூட்டணி பார்ட்னர்களும் கண் துஞ்சாது உழைக்கிறார்கள். ஆனாலும் இந்த உழைப்பெல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமும் அவர்களுக்குள் இருக்கிறது. அதற்குக் காரணம், பாமக வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கம் தொகுதி மக்களுக்கு அறிமுகமில்லாதவராக இருப்பது!

என்றாலும் எப்படியாவது பாலுவை வீழ்த்தி பாமகவை ஜெயிக்க வைக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டிருப்பதால் அமைச்சர் பெஞ்சமினும் முன்னாள் எம்பி-யான சிட்லபாக்கம் ராஜேந்திரனும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். எனினும் தொகுதியை பாமகவுக்கு விட்டுகொடுத்ததில் அதிமுகவுக்குள் அடிக்கும் அதிருப்தி அலைகள் இன்னும் ஓயவில்லை!

x