கா.சு.வேலாயுதன்
ஒரு சிலரது எழுத்துகளை வாசிக்கும்போது, “அப்படியே... அனுபவிச்சு எழுதியிருக்கார் மனுஷன்” என்று சிலாகித்துச் சொல்வோம். அப்படித்தான் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை உண்மையிலேயே அனுபவித்து எழுதிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன். காரணம், இவரும் ஒரு கைத்தறி நெசவாளி!
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெகுஜன இதழ்கள், வானொலி, சிற்றிதழ்களில் கவிதை, துணுக்கு, விமர்சனங்களை எழுதிவருகிறார் சீனிவாசன். நெசவாளர்களின் வாழ்வியலைப் பாடும் இவரது ‘நெசவதிகாரம்’ கவிதைத் தொகுப்பு விருதுகளையும் ரொக்கப் பரிசுகளையும் பெற்றுக் குவித்திருக்கிறது. வலைதளத்தில் இவர் எழுதிவரும்‘ஜரிகை மீன்கள்’ எனும் நாவல் 20 அத்தியாயங்களைக் கடந்து இணைய வாசகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த மனிதரைப் பற்றி இன்னும் கொஞ்சம் படிக்கலாமே என்பதற்காக சேலத்திலுள்ள அவரது வீட்டுக்கே சென்றேன். வீட்டை நெருங்கும்போதே தறிநாடா ஓசை தடதடக்கிறது. ‘ராஜலட்சுமி மரச் செக்கு எண்ணெய், சுத்தமாகவும் தரமாகவும் ஆட்டித் தரப்படும். 100 சதவீதம் இயற்கையானது’ என்று பளிச்சிடும் விளம்பரப் பலகை ஒன்றும் அந்த வீட்டின் வாசலில் என்னை வரவேற்கிறது.