ஓபிஎஸ்ஸின் தூக்கத்தைக் கெடுத்த தேனியில் திணறும் ஈவிகேஎஸ்!


எம்.சோபியா

வெற்றி தோல்வி யாருக்கென்றே யூகிக்க முடியாத அளவுக்குக் கடும் போட்டியும், எதிர்பார்ப்பும் நிலவும் தொகுதி தேனி. இங்கு இந்தத் தேர்தலில் மக்கள் சாதி ரீதியாக இரண்டாகப் பிரிந்து நிற்கிறார்கள்.

பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் கண்ணை மூடிக்கொண்டு தங்கதமிழ்செல்வனை (டிடிஎஸ்) ஆதரிக்கிறார்கள். ஊருக்கு ஊர் அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அரசியலுக்குச் சம்பந்தமில்லாதவர்களும் சாதி பாசத்தில் திரள்கிறார்கள். இவருக்குப் பெருகும் ஆதரவைப் பார்த்து, “தங்கதமிழ்செல்வன் ஜெயித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றும் ஆங்காங்கே பேச்சுக் கேட்கிறது.

“நானும் ஓபிஎஸ்ஸும் ஒண்ணாத்தான் டிடிவி தினகரனோடு இருந்தோம். எனக்கு எம்எல்ஏ-வைத் தாண்டி எந்தப் பதவியும் கிடைக்கல. மாவட்டச் செயலாளர் பதவியைக்கூட கொடுப்பாங்க, பிடுங்குவாங்க. ஆனா, ஓபிஎஸ்ஐ எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர்னு ஆக்குனாங்க சின்னம்மா. கூடவே, தன்னோட தம்பியை நகராட்சித் தலைவர், ஆவின் சேர்மன், சம்பந்தியை உயர் நீதிமன்ற தலைமை வழக்கறிஞர், மருமகனை சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆக்குனாரு ஓபிஎஸ். இப்ப மகனையும் மத்திய மந்திரி ஆக்கப் பார்க்கிறாரு. நம்மள ஒதுக்கிவிட்டுட்டாங்க. என் மகனும்தான் படிச்சிட்டு வேலையில்லாம இருக்கான். நான் நினைச்சிருந்தா ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல்ல அவனை வேட்பாளராக்கியிருக்கலாம்ல.. ஆனா, நான் நம்ம சமூகத்துல இன்னொரு தம்பிக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கேன். இது மானப்பிரச்சினை. என்னையும், டிடிவி.தினகரனையும் ஆதரியுங்க” என்று தங்கதமிழ்செல்வன் பேசப்பேச கூட்டம் உணர்ச்சிப் பிழம்பாகிறது.

x