பொன்முடியின் மகனா... பொன்முடியின் மகனா... கடும் போட்டியில் கள்ளக்குறிச்சி!


கரு.முத்து

கள்ளக்குறிச்சியில் கடந்த முறை களம் கண்டு அதிமுகவிடம் தோற்ற விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணியுடன் மீண்டும் இங்கே மோதுகிறார்.

கட்சிக்குள் கடும் எதிர்ப்பு இருந்தும் மகனுக்காகப் போராடி  இந்தத் தொகுதியைப் பெற்றார் பொன்முடி. அதனால், பிரச்சார பொறுப்பை மகனிடம் விட்டுவிட்டு சொந்தக் கட்சியினரின் அதிருப்திகளைச் சமாளிக்க அவர்களை எல்லாம் வீடு தேடிப் போய் சந்தித்து சமாதானப்படுத்தி வருகிறார். இவரது முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதால் உடன் பிறப்புகள் அதிருப்திகளை ஒத்திவைத்துவிட்டு உற்சாகத்துடன் களத்தில் நிற்கிறார்கள். சொந்தக் கட்சியினரைச் சமாதானம் செய்வதோடு மட்டுமில்லாது அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் ஒதுங்கியிருக்கும் பொறுப்பாளர்களோடும் ரகசிய சந்திப்புகளை நடத்தி மகனுக்கு ஆதரவு திரட்டி வருகிறார் பொன்முடி.

இவரது அரசியல் நகர்வுகளை நன்கு உணர்ந்திருக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம், “பொன்முடி எப்போதும் தன் கட்சிக்காரர்களை நம்ப மாட்டார். எதிர்க்கட்சிக்காரர்களை நம்பியே அரசியல் செய்யக்கூடியவர். அதனால் நமது தொண்டர்கள் யாரும் விலை போய்விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். ஆனால், சுதீஷ் முகாமில் பணத்தை இறக்க யோசிப்பதால், அதிமுக தரப்பில் அமைச்சர் சொல்வதை எல்லாம் யாரும் கேட்பதாய் இல்லை. ஆங்காங்கே ஊடாடல் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

x