தள்ளாடும் தமாகா முன்னேறும் திமுக!


எம்.கபிலன்

காங்கிரஸும் திமுகவும் தலா 7 முறை மகுடம் சூட்டிய தொகுதி தஞ்சை. இரண்டு முறை வென்ற அதிமுக இந்த முறை கூட்டணி கோச்சில் கடைசியாக வந்து தொற்றிய தமாகாவுக்குத் தொகுதியைத் தாரை வார்த்திருக்கிறது.

கடந்த முறை திமுக சார்பில் இங்கே களமிறங்கக் கனவு கண்டார் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். ஆனால், அவரது கனவை கலைத்த கட்சித் தலைமை, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவைக் கொண்டுவந்து தஞ்சையில் நிறுத்தியது. அதனால் ஏற்பட்ட குழப்பங்களாலும் உள்ளடி பஞ்சாயத்துகளாலும் மிக சாதாரண வேட்பாளரான பரசுராமனிடம் தொகுதியை இழந்தது திமுக. இந்த முறை கச்சிதமாகக் காய்ந நகர்த்தி தொகுதியைத் தனக்காக வாங்கிவிட்டார் பழனிமாணிக்கம். பாலுவும் பிரச்சினை இல்லாமல்  ஸ்ரீபெரும்புதூர் பக்கம் போய்விட்டார். இதனால், பழனிமாணிக்கத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோதே பாதி வெற்றி எனக் கொண்டாடிய திமுக, இப்போது களத்தில் இரட்டை இலை என்றதும் “வெற்றி எங்களுக்கே எங்களுக்கு” என உற்சாகத் துள்ளல் போடுகிறது.

பழனிமாணிக்கம் நான்கு முறை தஞ்சையை வென்றவர் என்பதால் அறிமுகத்துக்குப் பஞ்சமில்லை. பதவியில் இல்லாதபோதும் மக்களோடு தொடர்பில் இருப்பது இவரது சுபாவம் என்பதால் அதுவும் இப்போது கைகொடுக்கிறது. கஜா புயல் தஞ்சையைப் புரட்டிப் போட்ட சமயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவரும் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா எம்எல் ஏ-வும் பம்பரமாய் சுழன்றார்கள். அதனால் தேர்தலுக்காக மக்களைச் சந்திப்பது திமுகவுக்கு எளிதான காரியமாக இருக்கிறது.

x