சினிமாவாகும் அரசியல் தலைவர்கள் தேர்தலை மையம் கொள்ளும் ‘பயோபிக்’ புயல்!


எஸ்.எஸ்.லெனின்

இந்தியாவில் அரசியலையும் சினிமாவையும் பிரித்துப் பார்ப்பது சிரமம். இரண்டுக்கும் இடையிலான நெருக்கமான உறவுக்கு மறுக்க முடியாத உதாரணமாக தமிழ்நாட்டை சுட்டிக்காட்டுவார்கள். தமிழக அரசியலுக்கு அப்பாலும் தற்போது தேசிய மற்றும் பிராந்திய அரசியலில், அரசியல்வாதிகள் தங்களின் புகழ்பாடவும், எதிர்தரப்புக்கு பதிலடி தரவும் முன்னெப்போதையும் விட சினிமாவை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

சர்ச்சையைக் கிளப்பிய மன்மோகன் சினிமா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தை கதைக்களமாகக்கொண்டு ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற திரைப்படம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. மன்மோகனின் ஊடக செயலராகப் பணியாற்றிய சஞ்சயா பாரு எழுதி 2014ல், வெளியான நூலினைத் தழுவி இப்படம் உருவானது. மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடித்த இப்படத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து காங்கிரஸார் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், சர்ச்சைக்குள்ளான அளவுக்கு மக்களிடம் அந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

x