பிரிவினைக்கு இடம் கொடாதிருப்போம்!


முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்த மாநிலங்களில் சராசரியாக 60 சதவீதத்துக்கும் கூடுதலாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் ஏதுமின்றி முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்திருந்தாலும், ஆந்திராவில் நடந்த மோதலில் இரண்டு உயிர்கள் பலியாகியிருப்பது வேதனையளிக்கிறது.

நமக்கான மக்கள் பிரதிநிதிகளை நாமே தேர்ந்தெடுக்க ஜனநாயகம் நமக்குத் தந்திருக்கும் அடிப்படை உரிமை தேர்தல் களம். ஆனால், இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் தேர்தல் களத்தைத் தங்களின் சுயபலன்களை வென்றெடுப்பதற்கான வேட்டைக்களமாகவே மாற்றிவிட்டன. அதனால், எப்படியாவது எதையாவது செய்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வேட்கை அரசியல்வாதிகளுக்கு வந்துவிடுகிறது. இது, தேர்தல் நெருங்க நெருங்க சிலருக்கு வெறியாகவே மாறிவிடுகிறது. அதனால், வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.

இப்படிக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை வெறியாட்டங்களால், நேற்றுவரைக்கும் அண்ணன் தம்பிகளாய் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். கலவரத்தைத் தூண்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. அவர்களுக்குத் தேவை அரசியல் லாபம் மட்டுமே. இதனால் தேர்தல் முடிந்த பிறகும் பல இடங்களில் பகை முற்றிப்போய் நிற்கிறது. தேர்தல் சமயத்தில் நம் வீட்டு நாய்க்கு சுகமில்லை என்றாலும் நலம் விசாரிக்க நாலு பேர் ஓடிவருவார்கள். தேர்தல் முடிந்த பின்போ, வானமே இடிந்து விழுந்தாலும் வாய் திறந்து ஒர் ஆறுதல் வார்த்தைகூட சொல்ல மாட்டார்கள்!

இதெல்லாம் நன்கு தெரிந்திருந்தும் யாரையோ அரியணை ஏற்றுவதற்காக எங்கிருந்தோ வருபவர்கள், நம்மையே ஆயுதமாக்கி நமக்குள்ளே வன்முறையை ஏவிவிடுவதை நாம் உணர மறுக்கிறோம். இதைப் புரிந்துகொண்டால் தேர்தலுக்காக யாரும் நம் மீது வன்முறையை ஏவவும் முடியது; தாயாய் பிள்ளையாய் பழகிக்கொண்டிருக்கும் நமக்குள்ளே எந்தப் பிரிவினையையும் ஏற்படுத்தவும் முடியாது!

x