கே.கே.மகேஷ்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் (ஆர்.கே.நகர்), அமைச்சர் ஜெயக்குமார் (ராயபுரம்) ஆகியோரைத் தேர்ந்தெடுத்த சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளே வருவதால் வட சென்னை விஐபி தொகுதிக்கான அந்தஸ்தைப் பெறுகிறது. திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி சின்னச் சின்ன சந்துகளையும் விடாமல் வாக்குக் கேட்கிறார். ``திமுகவில் வாரிசுக்கு சீட் கொடுத்திருக்கிறார்களா?” என்று கேட்பவர் களுக்கு, “கழகம் என்பது ஒரு குடும்பம். அப்படிப் பார்க்கையில் திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களுமே வாரிசுகள் தான்” என்று அழகாக பதில் சொல்லுகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட ஆற்காடு வீராசாமியும் ஒரு சில இடங்களில் பிரச்சார வாகனத்தில் மகனுக்காகக் கைகூப்புகிறார். “தலைவர் கலைஞரின் உற்ற துணையாக 25 ஆண்டுகள் விளங்கிய ஆற்காட்டாரின் அன்புப் புதல்வர் கலாநிதி வீராசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள். வேட்பாளர் கலாநிதி பிரச்சாரத்தில் அதிகம் பேசுவதேயில்லை.
எப்போதாவது மைக் பிடித்து, “நான் ஒரு மருத்துவர். முகச்சீரமைப்பு (பிளாஸ்டிக் சர்ஜன்) வல்லுநர். நான் வென்றால் வட சென்னையின் முகத்தையே அழகாக்கிவிடுவேன்” என்று சொல்வது நன்றாக எடுபடுகிறது. கூட்டணிக் கட்சியினர் நன்கு கவனிக்கப்படுவதால், இவருடன் கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் உற்சாகமாய் உடன் வருகிறார்கள். தொகுதியில் கணிசமாக உள்ள நாடார் வாக்குகளைக் குறிவைத்து எர்ணாவூர் நாராயணனின் கட்சியினரையும் கூடவே அழைத்துச் செல்கிறார் கலாநிதி.