கண்ணான கண்ணே..! - 08: காலை வேளையில் பாக்கெட் உணவுகளா?


எது சரியான உணவு, பசியறிந்து உண்ணுதல், நேரத்துக்கு உண்ணுதல், அளவாக உண்ணுதல் போன்ற பழக்கங்களை இயல்பாக்கிக் கொள்வதற்கான எளிய ஆலோசனைகளைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். உணவை ஐம்புலன்களையும் ஈடுபடுத்தி உண்ணும்போது உட்கொள்ளும் அளவு அதிகமாகவும் வாய்ப்பில்லை; குறையவும் வாய்ப்பில்லை என்று அறிந்துகொண்டோம். லெப்டின் என்ற ஹார்மோன் நம் வயிறு நிறைந்ததை உணர்த்த வேண்டும் என்றால், நமது உணவுப் பழக்கவழக்கம் சீராக இருக்க வேண்டும்.

இந்த அத்தியாயத்தில், ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய சீரான உணவுப் பழக்கங்களைப் பற்றி பார்க்கவுள்ளோம். நான்கு பழக்கங்களை உங்கள் குழந்தைகள் புரிதலோடு ஏற்றுக்கொள்ள வையுங்கள்.

1. காலை உணவுக்கு பாக்கெட் பதார்த்தங்கள் கூடாது...

காலை உணவுக்கு, உணவுத் தொழிற்சாலைகளால் உற்பத்தி செய்யப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஓட்ஸ், சீரில்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், டப்பாக்களில் அடைக்கப்பட்ட ஜூஸ், பிரெட், நூடுல்ஸ் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. காரணம், இவற்றின் தரம். அத்துடன் இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம். HFCS எனப்படும் சோள சிரப்புகள், ரசாயனப் பொருட்கள், எமல்ஸிஃபையர் எனப்படும் பால்மமாக்கிகள் உள்ளன. இவை உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல; மனவளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடும். அதுமட்டுமல்லாமல் நாம் கடந்த அத்தியாயத்தில் பார்த்த உணவுக்கான மூன்று பரிசோதனைகளில் ஒன்றில்கூட வெற்றி பெறாது. எனவே, இத்தகைய உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

காலையில் வீட்டில் சுடச்சுடத் தயாராகும் உணவுகளைச் சாப்பிடுவதே உகந்தது. இட்லி, தோசை, சப்பாத்தி, சப்ஜி என உங்கள் ஊருக்கு ஏற்ற உணவு, உங்களுக்குப் பழக்கப்பட்ட உணவு மட்டுமே காலை உணவாக இருக்கட்டும். வீட்டு உணவுதான் பருவகாலத்துக்கு ஏற்ப சமைக்கப்பட்டதாக இருக்கும்.

ஒருவேளை உங்கள் குழந்தை காலையில் சீக்கிரமாகவே பள்ளி செல்ல நேர்ந்தால், அந்த வேளையில் சிற்றுண்டி தயாராகவில்லை என்றால் ஒரு குவளை பால், அத்துடன் கொஞ்சம் உலர் பழம் சாப்பிடக் கொடுக்கலாம். ஆனால், பால் டெட்ரா பேக்கில் அடைக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அதேசமயம் இதையே தினமும் பழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.

2. பிளாஸ்டிக் டப்பா, பாட்டில்கள் வேண்டாம்...

பிளாஸ்டிக் மனித வாழ்வில் பல்வேறு தருணங்களில் தவிர்க்க முடியாத பொருளாக, சில நேரங்களில் சரியான நுகர்பொருளாகக்கூட பயன்படலாம். ஆனால், உணவு விஷயத்தில் பிளாஸ்டிக் எந்த ஒரு இடத்திலும் நன்மை செய்வதாக இல்லை. சந்தையில், கண்கவர் வண்ணங்களில் வடிவங்களில் பிளாஸ்டிக் டப்பாக்களாக, பாட்டில்களாகக் கிடைக்கின்றன. உலகத்தரம் வாய்ந்தது என்ற விளம்பர அறைகூவலுடன் கடைகளில் அவை அணிவகுத்து இருக்கின்றன. ஆனால், அத்தகைய பொருட்களில் அடைத்து உங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கு உணவு, தண்ணீர் கொடுத்துவிடாதீர்கள். அப்படிச் செய்வது நமக்குள் இருக்கும் பரந்துபட்ட நுண்ணுயிர்ச்சூழகத்துக்கு நாம் இழைக்கும் அநீதி. நம் குடலில் லட்சக்கணக்காண நட்பு பாக்டீரியாக்கள் இருக்கின்றன. உணவில் பிளாஸ்டிக் பொருட்களின் தன்மை கலக்கும்போது அது உடலுக்குள் செனோஈஸ்ட்ரோஜென்ஸ் (Xenoestrogens) என்ற வேதிப்பொருளைக் கடத்துகிறது. இது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் போன்ற வேதிக்கூறுகள் கொண்டது. இதனால் உடலில் குளறுபடி ஏற்படுகிறது. குடலுக்கு உகந்த பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இன்சுலின் சுரப்பதில்கூட சிக்கல் ஏற்படுத்துகிறது. இதேபோல், அலுமினியம் ஃபாயிலில் சப்பாத்தியை சுற்றிக்கொண்டு ரயில் பயணங்களில் கொரிப்பதை பகட்டாகக் கருதுகிறோம். உண்மையில் இந்த அலுமினியமானது உடலுக்கு அத்தியாவசியமான ஜிங்க் என்ற தாதுப்பொருளை கிரகிக்கவிடாமல் தடுக்கிறது.

அப்படியென்றால் எதைத்தான் பயன்படுத்துவது எனக் கேட்கிறீர்களா? கண்ணாடி தட்டுக்கள், எவர்சில்வர் தட்டுக்கள், வெண்கலத் தட்டுக்களைப் பயன்படுத்தலாம்.

இந்தியக் கலாச்சாரத்தில் குழந்தைக்கு முதன்முதலில் திட உணவு புகட்டும்போது தாய்மாமனோ அல்லது அத்தையோ வெள்ளியில் தட்டு, கரண்டி வாங்கித்தரும் பழக்கம் இருக்கிறது. வெள்ளி உலோகத்துக்கு ஆன்டிபயாடிக் தன்மை உள்ளது. அதனால் வெள்ளிப் பொருட்களில் குழந்தைகளுக்கு உணவு புகட்டுவது சிறந்தது. வெள்ளிக்கு மாற்றாக கண்ணாடி, எவர்சில்வர், வெண்கலப் பொருட்களையும் பயன்படுத்தலாம். வீட்டில் சமைக்கப்பட்ட உணவை இது போன்ற உலோகங்களால் ஆன பாத்திரங்களில் சாப்பிடும்போது குடல் வாழ் நல்ல பாக்டீரியாக்கள் சீராக இயங்கும்.

3. மொபைல் போன் ஒன்றும் தொடுகறி அல்ல...

உணவு உண்ணும்போது ஒரு கையில் சாப்பாடு இன்னொரு கையில் மொபைல் என பிஸியாக இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். ஏன் நாமும்கூட அப்படிப்பட்ட பழக்கம் கொண்டவராக இருக்கலாம். மொபைல் போன் ஒன்றும் தொடுகறி அல்ல. சாப்பிடும்போது மொபைல் பார்ப்பது, டிவி பார்ப்பது, கணினியை இயக்குவது இதெல்லாம் உடற்பருமனுக்கு உலகம் முழுவதும் கூறப்படும் முக்கியக் காரணங்கள்.

நாம் கைக்குழந்தையாக இருந்தபோது நம் அம்மா ஆர்வ மிகுதியில் கொஞ்சம் கூடுதலாக பாலோ இல்லை வேறு உணவோ புகட்ட முயன்றிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் அதை விளையாட்டாக உமிழ்ந்து அவர் ரசிக்கும் தோல்வியாக அதை நாம் அவருக்குப் பரிசளித்திருப்போம்.

ஒரு குழந்தைக்கு அதன் வயிறு நிரம்பிய பின் எவ்வளவு முயன்றாலும் உணவைப் புகட்ட முடியாது. ஆனால், வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு நாம் சாப்பிடும் உணவின் அளவு என்ன, எல்லை எது என்று தெரியாமல் திணித்துக்கொண்டிருக்கிறோம். காரணம், பெரியவர்கள் நமக்கு உணவின் மீது முழு கவனத்தையும் குவித்து உண்ணும் திறன் போய்விடுகிறது. ஏதாவது நினைவலைகளை அசை போட்டுக்கொண்டோ, நண்பர்களுடன் பேசிக்கொண்டோ சாப்பிடுகிறோம். இல்லாவிட்டால் மொபைல் போன், டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறோம். இப்படிச் செய்யும்போது ஒன்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட நேரிடும் அல்லது அளவில் குறைத்து சாப்பிட நேரிடும். உணவு வேளையில் உங்களுடன் உறவில் இருப்பது உணவாக மட்டுமே இருக்கட்டும். ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும் காத்திருக்கட்டும்.

"உங்கள் வயிற்றிலும் ஒரு மூளை இருக்கிறது. உணவும் நீங்களும் மட்டும் தொடர்பில் இருக்கும்போது அந்த மூளை உங்கள் சாப்பாட்டின் அளவைச் சரியாக உணர்த்தும். சரியான அளவில் சாப்பிடுவது செரிமானத்தை சீராக்கும். சீரான செரிமானம் நிம்மதியான உறக்கத்தைத் தரும். நிம்மதியான உறக்கம் மனதுக்கு உற்சாகம் தரும். உற்சாகமான மனம்தான் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்" என்று உங்கள் குழந்தைகளிடம் பேசிப் புரியவையுங்கள்.

ஒருவேளை, ஐபேட் கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்று சொன்னார்கள் என்றால், “அன்பே... அப்படித்தர இயலாது" என்று செல்லமாகவே கடிந்துகொள்ளுங்கள். புரிந்து கொள்வார்கள்.

4. இரவு உணவுக்குப் பின் ஐஸ்க்ரீம், சாக்லேட் கூடவே கூடாது...

சூரியன் மறைந்தபின்னர் உடலில் செரிமான சக்தி குறைந்துவிடும். அதனால்தான் இரவில் எளிதாக செரிக்கும் உணவை சாப்பிட வலியுறுத்துகிறோம். ஆனால், இரவு உணவைத்தான் நம்மில் பலரும் குடும்பத்துடன் சாப்பிடும் நேரம் என்ற போர்வையில் 10 மணியளவில் விதவிதமான பதார்த்தங்களுடன் உண்ணுகிறோம். அதிலும், இரவு உணவுக்குப் பின்னர் ஐஸ்க்ரீம், சாக்லேட் சாப்பிடும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஐஸ்க்ரீம்களுக்கான விளம்பரங்களும் அதற்கு ஒரு காரணம். ஸ்பூனில் ஐஸ்க்ரீம் லாவகமாக எடுப்பதைப் பார்க்கும் பெரியவர்களாலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடும் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாது என்றால் சிறு குழந்தைகளால் எப்படி முடியும்? அப்படித்தான் ஐஸ்க்ரீம் சிறியவர்கள் முதல் முதியவர்வரை கலாச்சாரமாக மாறியிருக்கிறது.

இது ஒருபுறம் என்றால் குழந்தைகள் தட்டில் வைக்கப்பட்ட உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிட ட்ரீட்டாக ஐஸ்க்ரீம், சாக்லேட் கொடுக்கும் தவறான கலாச்சாரமும் பின்பற்றப்படுகிறது. இது லஞ்சம் வாங்கும் போக்கை குழந்தைகளிடம் ஊக்குவிக்கும் செயலாகும்.

எல்லா நாளும் ஒரே மாதிரியான பசி உணர்வு இருக்காது. ஒரு சில நாள் குழந்தைகளுக்கு அதிக பசி இல்லாமல் போகலாம். சில நாட்கள் இரவு உணவுக்குப் பின்னரும்கூட பசிக்கலாம். அப்படியான நேரங்களில் ஐஸ்க்ரீம், சாக்லேட்டுக்கு பதிலாக ஒரு குவளை காய்ச்சிய பால் கொடுக்கலாம். ஆனால், என்றோ ஒரு நாள் இரவு எனக்குப் பசியில்லை எனக்கூறும் குழந்தையை வற்புறுத்தி சாப்பிட வைக்காதீர்கள். சில நேரங்களில் இயற்கையான உந்துதலால் பட்டினியாக இருப்பதுகூட செரிமானத்தை சீர்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். அதனால், சாப்பிடுவதற்கு லஞ்சம் கொடுக்காதீர்கள். அதுவும் ஐஸ்க்ரீம், சாக்லேட்டை கொடுக்கவே கொடுக்காதீர்கள்.

சுகாதார அனுமானங்கள்

சுகாதாரம் சுத்தம் என்று பிள்ளைகளுக்கு மண்ணைத் தொடாதே, தெருவில் விளையாடாதே, சாப்பிடும் முன் சோப் போட்டு கை கழுவு என்று உத்தரவுகள் பிறப்பிக்கிறோம். காரணம் சுகாதாரம் சார்ந்து நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் அனுமானங்கள். ஹாண்ட் சேனிட்டைசர்கள் எனப்படும் கிருமி நாசினிகள் கெட்ட பாக்டீரியக்களை அப்புறப்படுத்தும் அதே வேளையில் நல்ல பாக்டீரியாக்களையும் சிதைத்து விடுகிறது.

பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற சுகாதாரமான நாடுகளில் உள்ள குழந்தைகள்தான் அதிகளவில் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளுக்கு அதன் பக்க விளைவாக அவர்களது உடலில் உள்ள நன்மை சேர்க்கும் நுண்ணுயிர்ச்சூழகம் பாதிக்கப்படுகிறது. இதனால் சிறிய விஷயத்துக்குக் கூட மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிடுகிறது.

அதனால்தான் சொல்கிறேன், உங்கள் குழந்தைகளை ஆப்பிரிக்கக் குழந்தைகளைப் போல் வளருங்கள். அவர்கள் மண்ணில் விளையாடட்டும், தெருவில் விளையாடட்டும், வியர்வை சிந்தி விளையாடட்டும். எப்போதாவது கீழே விழுந்த உணவுப் பொருளை மீண்டும் எடுத்துச் சாப்பிட்டால் ஒட்டுமொத்த நோயும் ஒரே நேரத்தில் வந்துவிடும் என்ற அளவுக்கு பிரளயத்தை ஏற்படுத்தாதீர்கள். இந்தியக் குழந்தைகளை இந்தியராகவே வளரவிடும் எளிமையான பழக்கம் இது.

அமெரிக்கா போன்ற நாடுகள் ஆன்ட்டி பேக்டீரியல் (Anti Bacterial) சோப்புகளைத் தடை செய்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் மேலை நாடுகள் தடை செய்த ஷாம்பூ, சோப்புகள், பற்பசைகள் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கின்றன. சுகாதாரம் குறித்து திணிக்கப்படும் அனுமானங்களை விடுப்போம். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்.

(வளர்வோம்... வளர்ப்போம்)

x