காதல் ஸ்கொயர் - 07


ஒரு வார கால ஓரியன்ட்டேஷன் வகுப்புகள் நிறைவுற்று, இரண்டு நாள் ஸிப்ளஸ் ப்ளஸ் மாட்யூல் முடிந்து, இன்று ஆன்லைன் எக்ஸாம். மெஷின் ரூமை நோக்கி நடந்தபடி அருண், “உள்ளுக்குள்ள உதைப்பா இருக்கு மச்சி. ஒரு கோட்ஸ்னிப்பிட்டப் பாத்து, ரன் ஆவுமான்னு எப்படிறா தெரியும்? எனக்கு ஹேஷ்இன்க்ளுட் பண்ணாம பாத்தா கட்டுரை மாதிரிதான் இருக்கு. கோட் மாதிரியே இல்ல” என்றான்.

கௌதம், “அதுவும் ஒரு லாங்வேஜ்தானடா” என்றபோது பின்னாலிருந்து, “கௌதம்…” என்று குரல் கேட்கத் திரும்பினான்.  நந்தினி. அருண், நந்தினியைப் பார்த்தவுடன் பீதியுடன், “மச்சி நான் கிளம்பறன்டா” என்று வேகமாக நகர்ந்தான். அவன் சட்டையைப் பிடித்திழுத்த கௌதம், “டேய்… அவ கூப்பிடுறா. மேனர்ஸ் இல்லாம…” என்ற கௌதமின்  பேச்சை  இடைமறித்த அருண், “மச்சி… அவ  கதையைப்

படிச்சு, ஒரு வாரம் காய்ச்சல்ல அவதிப்பட்டு,இப்பதான்டா நார்மலாயிருக்கேன். திருப்பி அவ கதை, கிதை சொன்னா உடம்பு தாங்காது மச்சி” என்றான்.

“அதெல்லாம் சொல்ல மாட்டாடா. நேத்து அவ கேட்டா. ஒரு வாரமா உங்க ஃப்ரெண்டு என்னைப் பாத்தாலே ஏன் ஓடுறாருன்னு. ஒரு ஹாய் சொல்லிட்டுப்போயிடு” என்று கூற அருண் முணுமுணுத்தபடி நின்றான். அருகில் வந்த நந்தினி, “ஹாய் அருண். உங்கள்ட்ட பேசவே முடியல. நல்லாருக்கீங்களா?”என்றாள். “சுமாரா இருக்கேன்ங்க” என்ற அருணின் பதிலை சரியாகக் காதில்கூட வாங்காமல் நந்தினி வேகமாக, “கௌதம் உனக்கு ஆயுசு ஆயிரம். ஒருகதை தோணுச்சு. உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். கரெக்டா கண்ணு முன்னாடி போற. சொல்லட்டுமா?” என்றாள்.

“கதையா?” என்று அலறிய அருண், கௌதமின் காதில், “மச்சி…. பிஞ்சு உடம்புடா. தாங்காதுடா… ப்ளீஸ்டா” என்றான். பதிலுக்கு கௌதம் முணுமுணுப்பாக, “இன்பத்த ஷேர் பண்ணிக்கிறது மட்டும் நட்பில்ல.துன்பத்தையும் ஷேர் பண்ணணும். இருடா” என்றான். நந்தினி முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, “ஒரு விஷயம்... கொஞ்சம் பெரிய பட்ஜெட் கதை. வெளிய யாருகிட்டயும் சொல்லிடாதீங்க. கதை லீக்காச்சுன்னா வம்பு” என்றாள் ஏதோ டைரக்டர் ஷங்கர், ரஜினியை வைத்துப் படம் எடுப்பதுபோல்.

“சேச்சே… உங்க கதைய வெளிய சொல்லுவமா?” என்ற அருணை முறைத்த கௌதம், “நீ சொல்லு” என்றான் நந்தினியிடம்.

“கதை கோத்தகிரிலதான் நடக்குது. எடுத்தவுடனே கோத்தகிரில ரெண்டு ப்ளேன் வந்து இறங்குது” என்றவுடன் கௌதமுக்கே கொஞ்சம் ஜெர்க்காகிவிட்டது. “கோத்தகிரில ப்ளேன் இறங்குதா?” என்ற கௌதம் அருணைப் பார்ப்பதைக் கவனமாகத் தவிர்த்தான். டென்ஷனான அருண், “மச்சி…நான் கிளம்பறன்டா” என்றான். “இருடா” என்ற கௌதம் அருணின் கையைப் பிடித்துக்கொண்டான்.

“ஒரு ப்ளேன்ல அமெரிக்கன் பிரஸிடென்ட் ட்ரம்ப்பும், இன்னொரு ப்ளேன்ல நார்த் கொரியா அதிபர் கிம்மும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துறதுக்காக கோத்தகிரில வந்து இறங்குறாங்க” என்றவுடன் பதறிப்போன அருண், “அப்படிப்போடு அருவாள” என்றான். இதைக் கேட்டதும் அதைப் பாராட்டாக நினைத்துக்கொண்ட நந்தினி, “செம ஓப்பனிங்ல்ல?” என்றாள் சந்தோஷத்துடன். அருண், “சூப்பர்ங்க. இன்டர்நேஷனல் லெவலுக்கு போய்ட்டீங்க. இதை மட்டும் இங்கிலீஷ்ல எழுதினா அடுத்த புக்கர் பிரைஸ் உங்களுக்குதான்” என்றான். “ஆமாம்….” என்று அடக்கத்துடன் விருதை ஏற்றுக்கொண்ட நந்தினி, “புக்கர் பிரைஸ்ன்னா?” என்றாள்.

“அதை விடுங்க. அவங்க கோத்தகிரிக்கு வர்றதுக்கு பதிலா மதுரைல வந்து இறங்கினா இன்னும் மாஸா இருக்கும்ல்ல?”

“மாஸ்ன்னா…” என்று நந்தினி தனது அழகிய விழிகளை விரித்துக் குழந்தைபோல் கேட்க, அருண் மெதுவாக, “ம்… முட்டை மாஸ்” என்றான். கௌதம் அவன்காலில் ஓங்கி மிதித்துவிட்டு, “மாஸ்ன்னா… அது வந்து… அது வந்து… ஹை கிளாஸ்லருந்து, லோ கிளாஸ் வரைக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். பரவால்ல. நீ கதையச் சொல்லு” என்றான்.

“இங்க ட்ரம்ப்ப கொல பண்ண டெர்ரரிஸ்ட் ப்ளான் பண்றாங்க”

“செத்தான்டா ட்ரம்ப்பு” என்று அருண்கிண்டலாகக் கூற, அதைப் புரிந்துகொள்ளாமல் நந்தினி, “இல்ல… கடைசில ட்ரம்ப்ப அன்பழகன் ஐபிஎஸ் காப்பாத்திடுவாரு” என்றாள். அதற்கு மேல்பொறுக்க முடியாமல் அருண், “அய்யோஅய்யோ அய்யோ…” என்று தலையில் அடித்துக்கொள்ள, நந்தினி, “என்னாச்சு?” என்றாள்.

“பே ரோல் ப்ரோகிராமை ஒரு தடவை ரிவைஸ் பண்ணணும். மறந்தே போயிட்டேன். நான் கிளம்புறேன்” என்ற அருண் கிட்டத்தட்டநான்கு நாய்கள் ஒன்றாகத் துரத்துவதுபோல் ஓடினான். தனியாக மாட்டிக்கொண்டவுடன் உஷாரான கௌதம், “எக்ஸாமுக்கு டைமாகுது. அப்புறம் பேசுவோமா?” என்று கூற, வாட்ச்சைப் பார்த்த நந்தினி, “ஓகே. இன்னைக்கி ஒம்போது பத்தரை ராகுகாலம். ராகுகாலம் ஆரம்பிக்கிறதுக்குள்ள மெஷின் ரூமுக்குள்ள போயிடலாம்” என்றாள்.

“இதுக்கெல்லாமா ராகுகாலம் பாப்பாங்க?” என்றான் கௌதம்.

“இது  பரவால்ல. எங்கம்மா குளிக்கிறதுக்குகூட ராகுகாலம், எமகண்டம் பாத்துட்டுதான் குளிக்கப் போவாங்க” என்றவுடன் மிரண்டுபோன கௌதம், “இன்ட்ரெஸ்ட்டிங்… இட்ஸ் இன்ட்ரெஸ்ட்டிங்” என்றான்.

ஒரு மாதப் பழக்கத்தில் கௌதமும் நந்தினியும் தனியாக வெளியே செல்லும் அளவுக்கு நெருங்கியிருந்தார்கள். அந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் கோத்தகிரி பஸ் ஸ்டாண்டுக்கு எதிரேயிருக்கும் செயின்ட் மேரிஸ் சர்ச்சுக்கு சென்றார்கள். சர்ச்சுக்கு வெளியே கீழே பள்ளத்தாக்கில் அழகாகத் தெரிந்த தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தவுடன், “செல்ஃபி எடுக்கலாம்” என்று கௌதம்செல்ஃபி எடுத்தான். அப்போது அவள்கன்னங்கள் மெத்தென்று அவன் கன்னங்களில் உரச… கௌதம் ஏறத்தாழ சொர்க்கத்தின் வாசலுக்கே சென்றுவிட்டான். செல்ஃபி எடுத்து முடித்தவுடன் நந்தினி வேகமாகத் தனது கன்னத்தைத் துடைத்துக்கொண்டாள். அதைக் கவனித்த கௌதம், “இருந்தாலும் நீ ஓவர் கற்பு நந்தினி” என்று கூற… நந்தினி உலகின் மிகவும் அழகிய வெட்கத்தைக் கன்னங்களில் காட்டினாள். அப்போது காற்றில் வேகமாகப் பறந்த தலைமுடியை ஒதுக்கியபடி, “அங்க என்ன பண்றாங்க?”என்றாள் நந்தினி

நந்தினி கை காட்டிய இடத்தில், சர்ச்சுக்கு வெளியே, சிறுவர்களை வட்டவடிவில் உட்கார வைத்து, நடுவில் ஒரு கன்னிகாஸ்திரீ அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கௌதமும் நந்தினியும் அவர்களை நெருங்கியபோது, அந்த கன்னிகாஸ்திரீ, “நம்மள்ல்லாம் யாரோட குழந்தைங்க?” என்றார். குழந்தைகள் கோரஸாக, “ஏசப்பாவோட குழந்தைகள்’ என்றனர். இவர்களைக் கவனித்த கன்னிகாஸ்திரீ பேச்சை நிறுத்திவிட்டுப் புன்னகைத்தார். அவருக்கு வணக்கம் தெரிவித்த நந்தினி, “க்ளாஸ் எடுக்கிறீங்களா ஸிஸ்டர்?” என்றாள்.

“இல்ல… இங்க ஸன்டே மாஸ் முடிஞ்சவுடனே  குழந்தைங்களுக்கு பைபிள் கதைங்க சொல்வோம்” என்றவுடன் நந்தினியின் முகம் உற்சாகமானது. கன்னிகாஸ்திரீ, “நீங்க கதை சொல்றீங்களா? ஸாரி… நீங்க கிறிஸ்டியனா?”என்றார்.

“இல்ல… ஆனா நான் கிறிஸ்டின் ஸ்கூல்லதான் படிச்சேன். பைபிள் கதைங்க எல்லாம் தெரியும்.”

“அப்ப சொல்லுங்க…..” என்றவுடன் நந்தினி கூச்சத்துடன் சிரித்தபடி கௌதமைப் பார்த்தாள். கௌதம், “சொல்லு…” என்றவுடன் நந்தினி தயக்கத்துடன் கன்னிகாஸ்திரீ பக்கத்தில் அமர்ந்தாள். அவள் கதை சொல்ல ஆரம்பிக்க, கௌதம் மொபைல் வீடியோவில் படமெடுக்கத் துவங்கினான்.

நந்தினி, “ஒரு நாள் ஜெருசலம் நகரத்துல, பஸ்கா பண்டிகை நடந்துட்டிருந்துச்சு” என்று ஆரம்பித்தபோது வானம் லேசாக இருட்ட ஆரம்பித்தது. இப்போது நந்தினியின் முகம், குழந்தைகளுக்குக் கதைசொல்லும் ஒரு கனிவான டீச்சர் முகமாக மாறியிருந்தது. காற்று வேகமாக அடிக்க, சிஸ்டரின் தலைமறைப்பும், நந்தினியின் துப்பட்டாவும் காற்றில் பறந்து படபடவென்று துடித்தன. கௌதம் கேமிராவை ஜும் செய்து, நந்தினியின் முகத்தை க்ளோஸ் அப்பில் ரெகார்ட் செய்தான்.

நந்தினி, “இயேசுவும் சீடர்களும் தங்கியிருந்த வீட்டு மேல்மாடியில பஸ்கா விருந்துக்கு உணவுப் பண்டங்கள் தயாராச்சு. இயேசுவோட சீடர்கள் சாப்பிடறதுக்காக உட்கார்ந்தாங்க…” என்று தொடர்ந்து கதையைச் சொல்லச் சொல்ல, நந்தினியின் விதவிதமான முகபாவங்களைப் பார்த்து கௌதம் அசந்துபோனான். கதையின் தன்மைக்கேற்ப அவள் முகத்தில் சட்சட்டென்று உணர்ச்சிகள் மாறுவதைக் காண அவ்வளவு அற்புதமாக இருந்தது. இவ்வளவு உணர்ச்சிகரமான முகத்தை கௌதம் பார்த்ததே இல்லை. அவள் கண்கள் வானத்தைப் பார்த்தபோது கௌதம் வானில் இருக்க பிரியப்பட்டான். அவள் கைகளை விரித்தபோது, அந்த கைகளுக்குள் மொத்த வாழ்நாளும் தஞ்சமடைய வேண்டுமென்று ஆசைப்பட்டான்.

அப்போது திடீரென்று அங்கே வேகமாகப் பனிப்புகை பரவ, பனிப்புகைக்கு நடுவே நந்தினியின் முகம் மட்டும் சற்றே வெளிச்சமாக இயற்கையின் விதிகளைப் பொய்யாக்கியது. தொடர்ந்து நந்தினி, இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்ட கதையைச் சொல்லி முடித்தபோது, நந்தினி கதை சொன்ன அழகுக்காக, இயேசு கிறிஸ்து மீண்டும் அன்றே உயிர்த்தெழுந்தால்கூட, கௌதம் ஆச்சரியப்பட மாட்டான்.

(தொடரும்)

x