டீக்கடையே நடத்துன நமக்கிட்ட பலிக்குமா?- ராகுலைக் கலாய்த்த ஓபிஎஸ்!


கா.சு.வேலாயுதன்

கோவை ராமநாதபுரத்தில் கடந்த செவ்வாய்கிழமை, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸின் பிரச்சார திருவிழா!

அண்ணனை வரவேற்று குஷிப்படுத்த அங்கே சுமார் ஆயிரம் பேரைத் திரட்டியிருந்தார்கள். ‘‘தானைத் தலைவர்...மனிதருள் மாணிக்கம்... புன்னகை மன்னன் ஓபிஎஸ் அவர்கள் அண்ணன் சிபிஆருக்கு வாக்குக் கேட்டு இதோ வருகிறார்...” என்றெல்லாம் ஒபிஎஸ்ஸுக்கு அடைமொழி போட்டு அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தார்கள். அண்ணன் வருவதற்குள் என்டர்டெயின்மென்ட் வேண்டாமா... நடு ரோட்டில் கோவை முன்னாள் துணை மேயர் லீலாவதி உண்ணி தலைமையில் பெண்கள் குத்தாட்டம் போட்டு அந்தக் குறையைப் போக்கினார்கள்.

கூட்டத்தில் இருந்த கூட்டணிக் கொடிகளை விரல்விட்டு எண்ணிப் பார்த்தேன். பாஜக கொடிகள் பன்னிரண்டும், தேமுதிக கொடிகள் ஐந்தும் தெரிந்தன. பாமகவினர் ஐந்து பேர்தான் இருந்தார்கள். ஆனால், ஏழு கொடிகளை ஏந்தியிருந்தார்கள். “ஏழு பேரு வர்றதா இருந்துச்சு. அதுல ரெண்டு பேரு வரல... அதான் ரெண்டு ரெண்டா பிடிச்சுக்கிட்டோம்” என்று காரணம் சொன்னார்கள். தமாகா கொடி இருக்கிறதா என்று பார்த்தேன். ஒரு கொடி மட்டும் கண்ணில் சிக்கியது. அட, பரவால்லையே... என்றபடி பக்கத்தில் போய் பார்த்தேன். பல்லெல்லாம் கொட்டிப்போன பொக்கைவாய் பெண்மணியின் கையில் அந்தக் கொடி பட்டொளி வீசியது.“ஏம்மா, உங்க கட்சியில நீங்க மட்டும்தான் வந்தீங்களா?’’ கேட்டதுதான் தாமதம். ‘‘ஏனுங்க வராம... அதோ வாசன் அய்யா வந்திருக்காரே” எனக் கூட்டத்துக்குள் ஒருவரை கைகாட்ட, எனக்கே திக்கென ஆகிவிட்டது. ‘அடக் கொடுமையே... தலைவர் ஜி.கே. வாசனையே மக்களோட மக்களா தெருவுல நிறுத்திட்டாங்களா?’ என்று சற்றே பதறினேன். அது ஜி.கே. வாசன் அல்ல... வட்டார தாமகா தலைவர் வி.வி.வாசன் என்று அப்புறம்தான் தெரிந்தது.

x