நம்மை உணர்ந்து செயல்படுவோம்!


தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கின்றன. முடிந்தவரை தேர்தலை நேர்மையாக நடத்த நினைக்கிறது தேர்தல் ஆணையம். ஆனால், கள யதார்த்தம் அப்படித் தெரியவில்லை.

தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை சுமார் 270 கோடிக்கு பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள். அனைத்துமே தேர்தலில் முறைகேடு செய்வதற்காக வைத்திருந்தவை எனச் சொல்ல முடியாது. ஆனாலும் குறுக்கு வழியில் வாக்குத் திரட்டும் முயற்சிக்கான பணமும் பொருளும் இதில் அடக்கம் என்பதை மறுப்பதற்கில்லை.

வாக்குகளை வளைப்பதற்காகப் பல்வேறு வழிகளில் பணம் பாயத் தொடங்கிவிட்டது. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல் அனைத்துக் கட்சிகளுக்குமே பண நாயகம்தான் வெற்றிக்கான பாதை என்ற நம்பிக்கையே இப்போது மேலோங்கி நிற்கிறது. எத்தனை பறக்கும் படைகள் அமைத்தாலும் இதையெல்லாம் முற்றாகத் தடுத்துவிட முடியாது.

ஆனால், வாக்காளர்கள் நினைத்தால் இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காத மக்கள் பிரதிநிதிகளை மக்கள் ஆங்காங்கே எதிர்த்துக் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், வாக்குகளைத் திருட பணத்துடன் வருபவர்களை, ``வராதே இந்தப் பக்கம்” என்று சொல்லித் துரத்தியதாகத் தகவல் இல்லை!

x