ஜப்பானிய பத்திரிகையான மைனிசி ஷிம்பனில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் யசுஷி நாகோ. துடிப்பான புகைப்படக்காரரான இவருக்குப் போராட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றைப் படம்பிடிக்க மிகவும் பிடிக்கும். அதே நேரத்தில், இவருக்குப் பிடிக்காத வேலைகளில் ஒன்று பொதுக்கூட்டங்களைப் படமெடுப்பது. ஒரு புகைப்படத்தை எடுப்பதற்காக தலைவர்களின் நீண்ட நேர உரையைக் கேட்டு நேரத்தை வீணடிப்பதில் இவருக்கு விருப்பம் இருந்ததில்லை. “இந்த வேலையில் என்ன சவால் இருக்கிறது?” என்பதே இவரது கேள்வியாக இருந்தது.
ஆனால் 1960-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி இவருக்கு அரசியல் கூட்டம் ஒன்றை படம் எடுக்கும் பணி வழங்கப்பட்டது. “டோக்கியோ நகரில் இன்று ஜப்பான் சோஷலிஸ கட்சித் தலைவர் இனிரோ அசானுமாவின் பொதுக்கூட்டம் நடக்கிறது. நீங்கள் அதைப் படம் பிடிக்க வேண்டும்” என்று ஆசிரியர் சொன்னதும் வேண்டா வெறுப்பாக அந்த நிகழ்ச்சிக்கு சென்றார் யசுஷி நாகோ. ஆனால், அந்த நிகழ்ச்சி தனது வாழ்க்கையையே புரட்டிப் போடப்போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
யசுஷி நாகோ படமெடுக்கச் சென்ற தலைவரான இனிரோ அசானுமா, அப்போது புகழ்பெற்ற ஜப்பானிய அரசியல் கட்சித் தலைவர். 1930-களில் வலதுசாரி ஆதரவாளராக இருந்த அவர், 2-ம் உலகப் போருக்குப் பிறகு பொதுவுடைமைவாதியாக மாறினார். ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார்.
1959-ம் ஆண்டு சீனாவுக்குச் சென்றுவந்த அவர், அதன் பிறகு சீனாவுடன் இணைந்து ஜப்பான் செயல்பட வேண்டும், அமெரிக்காவுக்கு எதிராக இந்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார். இதனால் பொதுவுடைமைக் கொள்கைகளை வெறுக்கும் பலரும் அவரை எதிர்த்து
வந்தனர். இத்தகைய சூழலில்தான் அன்று டோக்கியோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வந்திருந்தார் இனிரோ அசானுமா.
அவரது கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த இளைஞர்களில் ஒருவரான ஒடோயா யமகுச்சி என்ற இளைஞரும் அந்தப் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தார். ஜப்பானின் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்த யமகுச்சிக்கு, அதற்கு எதிராகச் செயல்படும் அசானுமாவைக் கொல்வது லட்சியமாக இருந்தது. அதற்காக தன் ஆடைகளுக்கு நடுவில், சாமுராய்கள் பயன்படுத்தும் வாளை மறைத்துவைத்துக்கொண்டு பொதுக்கூட்டத்துக்கு வந்தார்.
பொதுக்கூட்டத்தில் அசானுமா பேசிக்கொண்டு இருந்தபோது, மின்னல் வேகத்தில் மேடையேறிய யமகுச்சி, தான் மறைத்து வைத்திருந்த வாளால் அவரை ஓங்கிக் குத்தினார். 2-வது முறையும் அவரைக் குத்துவதற்காக யமகுச்சி வாளை ஓங்க, அருகில் இருந்த மற்றவர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.
பொதுக்கூட்டத்தைப் படமெடுக்க பல புகைப்படக்காரர்கள் வந்திருந்தாலும், யசுஷி நாகோவைப்போல் யாராலும் சூழலைப் புரிந்துகொண்டு வேகமாகச் செயல்பட முடியவில்லை. மேடையில் ஏதோ அசம்பா
விதம் நடக்கப்போவதை அறிந்துகொண்ட நாகோ, சரியான இடத்துக்கு நகர்ந்து சென்று மிகத் துல்லியமான நேரத்தில் மேடையில் நடந்த சம்பவத்தைப் படமெடுத்தார். யமகுச்சி முதல் குத்தை குத்திய பிறகு, 2-வது குத்துக்காக வாளை ஓங்கியபோது எடுத்த இந்தப் படத்தில் கொலையாளியின் ஆவேசம், அசானுமாவின் முகத்தில் தெரிந்த மரண வலி, மற்றவர்களின் முகத்தில் தெரிந்த பதற்றம் என அத்தனை விஷயங்களும் பதிவாகின. இச்சம்பவத்தில் அசானுமா உயிரிழந்தார். கைதாகி சிறைக்குச் சென்ற யமகுச்சி, அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அதே நேரத்தில், டோக்கியோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட இப்படத்துக்காக 1961-ம் ஆண்டில் புலிட்ஸர் விருது வென்றார் நாகோ. அமெரிக்கர் அல்லாத ஒருவர் புலிட்ஸர் விருதை வென்றது அதுவே முதல் முறை.
யசுஷி நாகோ
1930-ம் ஆண்டில் ஜப்பானில் உள்ள மினாமிசு என்ற ஊரில் பிறந்த யசுஷி நாகோ, மைன்சி ஷிம்புன் என்ற ஜப்பானிய பத்திரிகையில் சில ஆண்டுகாலம் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். 1960-ம் ஆண்டு ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஆஃப் தி இயர்’ விருதையும் 1961-ல், புலிட்ஸர் விருதையும் வென்றார். 1962-ம் ஆண்டு, தான் பணியாற்றிய பத்திரிகையில் இருந்து விலகிய இவர் அதன்பின் தனியார் புகைப்படக் கலைஞராகப் பயணத்தைத் தொடர்ந்தார். 2009-ம் ஆண்டு மே 2-ம் தேதி குளியலறையில் வழுக்கி விழுந்து காயம் பட்டதில் இவர் காலமானார்.