உற்சாகத்தில் ராஜா... உள்ளடியில் காங்கிரஸ்!- சிவகங்கையை வெல்வாரா சிதம்பரத்தின் மகன்?


குள.சண்முகசுந்தரம்

தனக்காகக்கூட ப.சிதம்பரம் இவ்வளவு மெனக்கெட்டதில்லை. ஆனால், மகனுக்கு சிவகங்கையை ஒதுக்குவதற்குள் அவரைத் தலையால் தண்ணீர் குடிக்க வைத்துவிட்டது காங்கிரஸ் தலைமை!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் தோற்றுப்போகும் என்று தெரிந்ததால் சிவகங்கையில் போட்டியிடத் தயங்கினார்  ப.சிதம்பரம். இதில் அப்செட்டான தலைமை,  ‘‘மத்திய நிதியமைச்சராக இருப்பவரே தேர்தலில் போட்டியிடத் தயங்கினால் அது தேசிய அளவில் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தாதா?” என்று கேள்வி எழுப்பியது. அதனால் வேறு வழியில்லாமல், தனக்குப் பதிலாக தனது மகன் கார்த்தியை நிறுத்தினார் சிதம்பரம். அந்தத் தேர்தலில் மகன் தோற்றாலும், பாராளுமன்றத்தில் பாஜகவுக்குப் பதில் சொல்ல ஆள் வேண்டும் என்பதற்காக தந்தையை மகாராஷ்டிரம் வழியாக ராஜ்ய சபாவுக்குள் இழுத்துக்கொண்டது காங்கிரஸ்!

இந்த முறையும் கார்த்தி தான் காங்கிரஸ் வேட்பாளர் என்று தொடக்கமே சொல்லப்பட்டாலும், “தலைவர் சிதம்பரம் அளவுக்கு அவரோட புள்ளைக்கு மரியாதை தெரியலியே... அவரு செட்டிப்புள்ள மாதிரியே பேசலியேப்பா...” என்று கார்த்தியைப்  பிடிக்காத சிதம்பரம் விசுவாசிகளே திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள்; இன்னமும் செய்கிறார்கள். தொகுதியிலுள்ள முக்கியக் காங்கிரஸ் தலைகளோ, “கார்த்தியைப் பற்றி இங்க என்ன பேசுறாங்களோ அதையேதான் டெல்லியிலயும் பேசுறாங்க... கார்த்திய தவிர வேற யார நிறுத்துனா ஜெயிக்கலாம்” என்று கருத்துக் கேட்கவும் ஆரம்பித்தார்கள்.

x