சிறையில் இருந்தாலும் ஜெயிப்பேன்!- - பிஹாரில் லாலு போடும் லாபக் கணக்கு...


ஆர்.ஷபிமுன்னா

அவ்வப்போது பாஜகவின் அரசியல் பாதையைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு அதன் வளர்ச்சிக்குக் கட்டை போடுவதில் லாலுவுக்கு நிகர் லாலுதான்!

2014 தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட பிராதன கட்சிகளையே சுருட்டி வீசிய ‘மோடி அலை’யில் அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மட்டுமே தப்பின. இதனால், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவை எதிர்கொள்வது எப்படி எனப் பலரும் தவித்துக்கொண்டிருக்க... அனைவருக்குமான ஒரு புதியவழியைக் காட்டினார் லாலு. தனது ஆர்ஜேடி கட்சிக்கு பிஹாரில் எதிரிக் கட்சியாக இருந்த நிதீஷ் குமாரின் ஜேடியு கட்சியுடன் கைகோத்தார். விளைவு, பிஹாரில் பாஜக ஓரம் கட்டப்பட்டது. எனினும், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கியதால் அவரைக் கைவிட்ட நிதீஷ், பாஜகவுடன் கைகோத்தது வேறு விஷயம். என்றாலும் இந்த முறை மக்களவைத் தேர்தலிலும் மெகா கூட்டணியைக் கச்சிதமாகக் கட்டி முடித்திருக்கிறார் லாலு. பிஹாரில் லாலு அமைத்திருக்கும் மெகா கூட்டணியைப் பார்த்து ஆளும் ஜேடியு- பாஜக கூட்டணி மிரண்டுபோயுள்ளது.

பிஹாரில் மொத்தம் 40  மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் கொடுத்த லாலு, பாஜகவின் முன்னாள் கூட்டாளியான உபேந்திரா குஷ்வாஹாவின் ஆர்எல்எஸ்பி கட்சிக்கு 5 தொகுதிகள் கொடுத்து தமது கூட்டணியில் இழுத்துக்கொண்டார். கூடவே, தலித் வாக்குகளுக்காக ஜீதன் ராம் மாஞ்சியின் ஹெச்ஏஎம் கட்சிக்கு 3 தொகுதிகளைக் கொடுத்தார். முன்பு பாஜக கூட்டணியில் இருந்த விஐபி என்ற மீனவர் சமூகத்தினரின் புதிய கட்சியையும் தற்போது லாலு தன்னுடன் இழுத்துக்கொண்டார். லாலு கூட்டணியில் இடதுசாரிகளுக்கு இடமில்லை என்றாலும் தலா மூன்று தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிடும் சிபிஐபி, சிபிஐஎம், சிபிஐ-எம்எல் கட்சிகள் மற்ற தொகுதிகளில் லாலு கூட்டணிக்கே ஆதரவளிக்க முடிவு செய்துள்ளன. சிபிஐ சார்பில் பேகுசராய் தொகுதியில் டெல்லியின் ஜேஎன்யு போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்டு பிரபலமான மாணவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நிற்க பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவரான மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங்கே தயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கூட்டணியில் சீட் இல்லை என்றாலும் பிஹாரில் வலுவானதாகக் கருதப்படும் சிபிஐ-எம்எல் கட்சிக்கு மட்டும் தனது தொகுதிகளில் ஒன்றை தாரை வார்த்திருக்கிறார் லாலு.

x