பேசும் படம் - 15: நள்ளிரவில் கலந்த விஷம்!


இருபதாம் நூற்றாண்டில் நடந்த உலகின் மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன்று போபால் விஷவாயு விபத்து. நள்ளிரவில் கனவுகளுடன் உறங்கிக்கொண்டிருந்த ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கையை முடித்த விஷவாயு விபத்தின் அடையாளம்தான் இங்கு நீங்கள் பார்க்கும் இந்தப் படம்.

1970-களின் தொடக்கத்தில், இந்தியாவுக்கு முதலீடு செய்ய வருமாறு அயல்நாட்டு நிறுவனங்களை மத்திய அரசு அழைத்தது. அதை ஏற்று இந்தியாவில் முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்று யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன். அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், பூச்சிக்கொல்லி மருந்தை தயாரிக்கும் தொழிற்சாலையை மத்திய பிரதேச தலைநகர் போபாலில் அமைத்தது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அந்நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும், இந்திய அரசுக்கு நேரடியாக 22 சதவீத பங்குகளும் ஒதுக்கப்பட்டன. மற்ற பங்குகள் பிற முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டன.

ஆரம்பத்தில் இங்கு தயாரான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு இந்திய சந்தையில் நல்ல கிராக்கி இருந்தது. ஆனால், சில ஆண்டுகளில் இந்திய விவசாயத் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான மவுசும் குறைந்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தால், தொழிற்சாலையை வேறு யாருக்காவது விற்க அமெரிக்கத் தலைமை முடிவெடுத்தது. யாரும் வாங்க முன்வராததால் இயந்திரங்களைப் பிரித்து வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டார்கள். இந்தக் குழப்பங்களால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை இயங்குவது தடைபட்டது.

இப்படிப்பட்ட நிலையில்தான், 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு 11 மணிக்கு, இத்தொழிற்சாலையில் இருந்த ஒரு ஸ்டோரேஜ் டாங்கில் இருந்து மெதில் ஐசோனேட் என்ற விஷவாயு கசிந்தது. இந்த ரசாயனத்துக்கென்று தனிப்பட்ட மணமோ, நிறமோ இல்லை என்பதாலும், கசிந்த நேரம் இரவு என்பதாலும் அதை ஆரம்பத்தில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அசுர வேகத்தில் நகருக்குள் பரவிய இந்த நச்சு வாயுவால், முதலில் தொழிற்சாலையைச் சுற்றியிருந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். வாந்தி மற்றும் கண் எரிச்சலால்  பாதிக்கப்பட்ட அவர்கள், நச்சு வாயு முழுவதுமாக உடலுக்குள் சென்றதும் சுருண்டு விழுந்து உயிரை விட்டனர். இப்படி, ஒருசில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரை இழந்தனர்.

ஒரே இரவில் கிட்டத்தட்ட 40 டன் விஷவாயு போபால் நகரமெங்கும் பரவ, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (அரசாங்கத்தின் கணக்குப்படி) பலியானார்கள். இருப்பினும் சமூக செயற்பாட்டாளர்கள், இந்த விபத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகச் சொன்னார்கள். இது தொடர்பான வழக்கில் முக்கியக் குற்றவாளியாக யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அப்போதைய முதன்மை செயல் அதிகாரி வாரன் ஆண்டர்சன் அறிவிக்கப்பட்டார். விபத்து நடந்த பிறகு, அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்ற அவரை, இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசு மறுத்தது. இறுதியில் 2014-ம் ஆண்டு அமெரிக்காவில் அவர் இறந்தார்.

போபால் விஷவாயு விபத்தின் மிகப்பெரிய அடையாளமாக பிரபல புகைப்படக்காரரான பாப்லோ பார்த்தலோமே எடுத்த படம் விளங்குகிறது. விஷவாயு பாதிப்பால் இறந்துபோன குழந்தையை மண்ணுக்குள் புதைக்கும்போது அவர் இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

பாப்லோ பார்த்தலோமே

1955-ம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தவர் பாப்லோ பார்த்தலோமே (Pablo Bartholomew). பர்மாவைச் சேர்ந்தவரான இவரது தந்தை ரிச்சர்ட் பார்த்தலோமே, அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர். 9-ம் வகுப்புடன் படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு தனக்குப் பிடித்த கேமராவைக் கையில் எடுத்த பாப்லோ, தனது பதின் பருவம் முதலே குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைப் படம் எடுத்து புகைப்படக் கலையைக் கற்றார். தொடக்கத்தில் விளம்பரத் துறையிலும், ஸ்டில் போட்டோகிராபராகவும் பணியாற்றிய இவர், பிரபல இயக்குநர் சத்யஜித் ராயுடனும் பணியாற்றியுள்ளார்.

1984 முதல் 2000-ம் ஆண்டுவரை செய்திப் புகைப்படக்காரராகப் பணியாற்றிய இவரது புகைப்படங்கள் நியூயார்க் டைம்ஸ், நியூஸ் வீக், டைம், நேஷனல் ஜியாகிரஃபிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. போபால் விஷவாயு விபத்து தொடர்பாக இவர் எடுத்த படம் 1984-ம் ஆண்டில் ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ ஆஃப் தி இயர் 1984’ விருதைப் பெற்றது. புகைப்படத் துறையில் சிறந்த சேவையாற்றியமைக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றார்.

x