நாலாயிரம்... ஐயாயிரம்... ஆறாயிரம்... ஓபிஎஸ் மகன் தொகுதியில் எகிறும் ஏலம்!


கே.கே.மகேஷ்

எந்தத் தொகுதிக்கும் இல்லாத தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது தேனி தொகுதி. கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சிக்குவதற்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதும் இவரை எதிர்த்து தங்கதமிழ்செல்வனை தினகரன் களமாடவிட்டிருப்பதுமே இதற்குக் காரணம்.

தர்மயுத்த நாடகம் நடத்தியபோது தனக்குத் துணை நின்ற 10 எம்பி-க்களில் ஒருவருக்குக்கூட மீண்டும் சீட் வாங்கிக் கொடுக்காத ஓபிஎஸ், தன் மகனுக்காக டெல்லி வரைக்கும் பேசி சீட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். வாரிசுக்கு சீட்டா என்ற குற்றச்சாட்டை எல்லாம் இடதுகையால் புறந்தள்ளினார். திருவாரூரில் ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி என்று முக்கியத் தலைவர்கள் எல்லாம் மற்றவர்களுக்காகப் பிரச்சாரம் செய்தபோது, ஓபிஎஸ் தனது மகனுக்காக அலங்காநல்லூர் அருகே உள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

வத்தலகுண்டு அருகே உள்ள கெங்குவார்பட்டி பட்டாளம்மன் கோயிலிலும் தந்தையும், மகனும் மாலையும் கழுத்துமாய் போய் சாமி கும்பிட்டார்கள். தேனி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் எல்லாம் முதலில் இந்தக் கோயிலில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தைத் தொடங்குவதுதான் முப்பது ஆண்டு காலத்து வழக்கமாம். அதுமட்டுமா... பெரிய குளத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து பங்குனி உத்திர தேரோட்டத்தை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தார்கள் தந்தையும் தனையனும்.

x