ஆயுசுக்குள்ள ஒரு தடவையாச்சும் ஜெயிப்பேன்- ஜெஜக நிறுவனர் மோகன்ராஜ்!


என்.சுவாமிநாதன்

கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற லட்சியத்தோடு  ஜெபமணி ஜனதா கட்சியை ஆரம்பித்தவர் ஜெ.மோகன்ராஜ். தேர்தலுக்கு தேர்தல், களத்துக்கு வரும் இவர் இந்த முறை திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதும் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வருகிறார்.

காவல் ஆய்வாளர் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று அரசியல் அவதாரம் எடுத்திருக்கும் மோகன்ராஜ், ராஜீவ் கொலை வழக்கின் விசாரணைக் குழுவில் இருந்தவர். இவரது தந்தை ஜெபமணி ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. சாத்தான்குளம் தொகுதியில் எம்எல்ஏ-வாகவும் இருந்தவர். தந்தை வழியில் அரசியலுக்கு வந்திருக்கும் மகன்,  “காமராஜர் பிறந்து வளர்ந்த விருதுநகர் எப்படி அவரைக் கை விட்டுச்சோ அதே மாதிரி, நான் பொறந்து வளர்ந்த மயிலாப்பூர் என்னைய கை விட்டிருச்சு. அந்தத் தொகுதியில எனக்கு வெறும் 77 ஓட்டுதான் விழுந்துச்சு. ஆனா, எனக்கு சம்பந்தமே இல்லாத விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில நான் வைகோவை எதிர்த்து நின்னப்ப 1517 ஓட்டு விழுந்துச்சு. வீட்டு நகைகளை அடகு வெச்சு குடும்பச் செலவுகளைக் கவனிச்சிக்கிட்டாலும் தேர்தல்ல நிக்கிறத நான் நிறுத்துறதே இல்லை.

மதுவுக்கு எதிராகப் போராடிய சசிபெருமாள் என் வீட்டில்தான் உண்ணாவிரதம் இருந்தார். அப்போ அவரைப் பார்க்க வைகோ வந்தாரு. எதிரியா இருந்தாலும் வீட்டுக்கு வந்துட்டா வரவேற்று உபசரிப்பதுதானே பண்பாடு. அதனால வைகோவுக்குக் கை கொடுத்தேன். ஆனா அவரு என் கைய தட்டிவிட்டுட்டு என் வீட்டுக்குள்ளயே போனாரு. அந்தக் கோபத்துல, போன தேர்தல்ல அவரை எதிர்த்து நின்னேன். அவர் தோத்துப் போனதுக்கு என்னோட பிரச்சாரமும் ஒரு காரணம். அப்பா நின்ன தொகுதியாச்சேன்னு சாத்தான்குளம் இடைத்தேர்தலில் போட்டியிட்டேன். ஆனா, அங்க எனக்கு 69 ஓட்டு மட்டும்தான் விழுந்துச்சு. என் சொந்த ஊர்லயே 800 ஓட்டு இருக்கையில எனக்கு விழுந்தது 69 ஓட்டுதான்னா எப்படி நம்புவீங்க? ஓட்டிங் மெஷின்ல என்னமோ தில்லுமுல்லு பண்றாங்க. இதை நான் பதினஞ்சு வருசமா சொல்லிட்டு வர்றேன். எத்தனை முறை தோற்றாலும் என்னோட ஆயுசுக்குள்ள ஒரு தடவையாச்சும் நிச்சயம் ஜெயிப்பேன்கிற நம்பிக்கை இருக்கு” என்கிறார்.

x