ஹாட் லீக்ஸ்


அமித் ஷாவை முந்திய ராஜா!

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அமித் ஷாவை முந்திக்கொண்டு தன்னிச்சையாக தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. டெல்லியிலிருந்தும் ராஜாவிடம் விசாரணை நடந்ததாம். அதனால் மறுநாளே, “அது ஊகத்தின் அடிப்படையில் வெளியான தகவல்” என்று மழுப்பினார் ராஜா. இதற்கு முன்பாக வேட்பாளர் தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரையில் நடந்தபோது, “முக்குலத்தோர் தொகுதியான சிவகங்கையில் நீங்கள் நிற்பது வேஸ்ட்” என கட்சி நிர்வாகி ஒருவர் நேரடியாகவே கருத்துச் சொன்னாராம். “அப்படினா, நம்ம தொகுதியில துணை முதல்வர கூட்டியாந்து பிரச்சாரம் பண்ணச் சொல்லுவோமாப்பா” என்று ராஜா குத்தலாய் கேட்க, “நல்லா கூட்டிட்டு வாங்க... நீங்க கூப்புட்டாதான் அவரு எங்க வேணும்னாலும் வருவாரே” என்று அவர் பாணியிலேயே பதில் கொடுத்தாராம் அந்தப் பொறுப்பாளர்.

பொன்னார் போற ரூட்டுல...

மீண்டும் கன்னியாகுமரியில் களமிறங்கியிருக்கும் பொன்னார், பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இது எதிலுமே பிரதான கூட்டணித் தோழனான அதிமுகவை கூட்டு சேர்க்கவில்லை. பட்டுவாடாக்களும் பாஜகவினருக்கு மட்டுமே நடக்கிறதாம். அதிமுகவினர் இது விஷயமாகக்  கேட்டால் , “அதை  உங்க கட்சிக்கிட்ட கேட்டுக்கங்க” என்று  பதில் வருகிறதாம். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போன பொன்னார், “இங்கே நாம் தனித்துப் போட்டியிடுவதாக நினைத்தே  வேலை  செய்யுங்கள். அதிமுகவினர் தனியாக  வேலை செய்வார்கள்” என்று கட்சியினர் மத்தியில் பேசியிருக்கிறார். இதனால், அதிமுக முகாமிலிருக்கும் சிலர் அமமுக பக்கம் கரிசனப் பார்வையை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

x