கூட்டணி இல்லாத கூட்டணி! - ராகுலின் உபி ஃபார்முலா


ஆர்.ஷபிமுன்னா

இந்தியாவின் இதயமாகக் கருதப்படும் உபியில் மொத்தம் இருப்பது 80 தொகுதிகள் என்பதால், பாஜகவும் காங்கிரஸும் இங்கே அதிக தொகுதிகளை வென்றெடுக்க ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகின்றன. பிரதமரைத் தீர்மானிக்கும் மாநிலம் என்பதால் தேசத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் உபியின் பக்கம்தான் இருக்கிறது!

இங்கே எதிரும் புதிருமாக இருந்த அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவை வீழ்த்துவது என்ற பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஒரே கூட்டணியில் கைகோத்திருக்கின்றன. கூடுதல் பலமாக உபியின் மேற்குப் பகுதியில் அதிகம் உள்ள ஜாட் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளத்தையும் தங்களோடு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு தரப்பில் தரப்பட்ட சில நெருக்கடிகள் காரணமாக காங்கிரஸை இவர்கள் தங்கள் கூட்டணிக்குள் சேர்க்கவில்லை. காங்கிரஸும் இவர்களோடு கைகோத்திருந்தால் அடுத்த ஆளும்கட்சி காங்கிரஸ்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி இருக்கலாம்.

இங்கு எதிர்பார்த்த கூட்டணி அமையாததால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு ரகசிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். அகிலேஷும் மாயாவதியும் ஆளுக்கு 38 தொகுதிகளைப் பங்குவைத்துக்கொண்டார்கள். 2 தொகுதிகளை அஜித் சிங்கிற்கு ஒதுக்கினார்கள். அகிலேஷ் தன் பங்கிலிருந்து கூடுதலாக ஒரு தொகுதியையும் அஜித் சிங்கிற்கு ஒதுக்கினார். மீதி இரண்டு தொகுதிகளான சோனியாவின் ராய்பரேலியிலும் ராகுலின் அமேதியிலும் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்ற முடிவை இருவரும் எடுத்திருக்கிறார்கள். இப்படி அறிவிக்கப்பட்ட போதே எதிர்க்கட்சிகளின் ரகசிய நட்புக் கூட்டணி உருவெடுக்கத் தொடங்கிவிட்டது.

x