பொறுப்புணர்வுடன் இருப்போமே!


பொள்ளாச்சியில் பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் தமிழகத்துக்கே பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பலரும் பல கருத்துகளைப் பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்த அவல சம்பவத்தில் பொது சமூகத்தின் பொறுப்பு குறித்தும் பேசவேண்டி இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை வெளியிடக் கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறை. ஆனாலும், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் காவல் துறை உயரதிகாரிகளே கொஞ்சமும் கூசாமல் பகிரங்கப்படுத்தினார்கள். இதனால், ‘பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய விவரங்களை இப்படி பொதுவெளியில் சொன்னால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு காவல் துறை மீது எப்படி நம்பிக்கை வரும்?’ என்று பலரும் ஆதங்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்களைக் குறிப்பிட்டி ருப்பதை சிலர் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறார்கள். எந்த வழக்காக இருந்தாலும் சிபிஐ விசாரணைக்கு மாற்றும்போது, வழக்குப் பதிவான காவல் நிலையத்தையும் குற்ற எண்ணையும் குறிப்பிட்டாலே போதும் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்கையில், முற்றிலும் ரகசியம் காக்கப்பட வேண்டிய இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்களைச் சேர்த்து ஆணை வெளியிட்டது சரிதானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அப்படியே அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் இருந்தாலும் அதற்காக நியாயம் கேட்கும்போது, கையில் கிடைத்தவர்களெல்லாம் அந்த அரசாணை நகலை கண்டபடி சமூக வலைதளத்தில் சுற்றவிடுவது எந்த விதத்தில் பொறுப்பான செயல்? மற்றவர்களின் பொறுப்பை குட்டிக்காட்ட நினைக்கும் முன்பாக நமக்கான பொறுப்பை முதலில் நாம் உணரவேண்டும். குறைந்தபட்சம் இதுபோன்ற வழக்குகளிலாவது அத்தகைய பொறுப்புணர்வுடன் இருப்போமே!

x