ஹாட் லீக்ஸ்


சோனியாவின் பிரதமர் பிளான்

72 வயதைத் தொட்டுவிட்ட சோனியா காந்தி இம்முறை தனது ராய்பரேலி தொகுதியில் தனக்குப் பதிலாக மகள் பிரியங்காவை நிறுத்துவார் எனப் பரவலான பேச்சு இருந்தது. ஆனால், ராகுலிடம் கட்சிப் பொறுப்பை முழுமையாகத் தந்துவிட்டு ஆலோசகராக மட்டும் தொடரலாம் என நினைத்துக்கொண்டிருந்த சோனியா, மீண்டும் தனது ராய்பரேலி தொகுதியில் போட்டியிடத் தயாராகி விட்டார். காந்தி குடும்பத்தின் பாரம்பரியத் தொகுதியாக இருக்கும் ராய்பரேலியைத் தக்கவைக்க நினைக்கும் சோனியா, தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பலம்பெற்று ராகுலைப் பிரதமராக ஏற்க மறுத்தால், தானே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவும் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சோனியா பிரதமர் பதவி ஏற்கத் தடையாக இருந்த வெளிநாட்டவர் விவகாரம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் முடிவுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ‘பேரியக்கத்தில்’ பிளவு!

அணுவையும் பிளக்க முடியும் என்பதற்கு அரசியலில் விடை தந்திருக்கிறது தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி. தமிழ்நாட்டில் இருப்பதே பத்துப் பேர். அவர்களுக்குள்ளும்  பிளவு! அக்கட்சியின் மாநிலத் தலைவர் முகமது இஸ்மாயில் (நாகர்கோவில் முன்னாள் எம்எல்ஏ), தினகரனுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். “தொகுதி தர முடியாது என்றாலும், ஆதரவளிக்கும் மற்ற அமைப்புகளுக்கு என்ன உண்டோ... அது உங்களுக்கும் உண்டு” என்று உறுதியளித்தாராம் அவர். “அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சிறையில் இருக்கிறார், துணை பொதுச்செயலாளர் இப்பவோ அப்பவோ சிறை செல்லப் போகிறார். அவர்களோடு கூட்டணி வைத்து, 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையையே களங்கப்படுத்திவிடாதீர்கள்” என்று மஜத மாநிலப் பொதுச்செயலாளர் ஜான் மோசஸின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் பாவம்!

x