மண்.. மனம்.. மனிதர்கள்! - 3


எண்பதுகளில்... கார்த்திகை திருநாள் காலத்தில் திருவல்லிக்கேணி அக்ரஹாரத்தைச் சுற்றி கட்டாயம் ருக்குபாயைக் காணலாம்.

சுமார் ஐந்தடி உயரம். வயது முப்பது போல இருக்கும். மஞ்சளை வலிந்து பூசிக்கொண்ட முகம். குழி விழுந்த வெளிர் நீலக் கண்கள். நல்லெண்ணெய் கொண்டு அழுந்த வாரப்பட்ட தலைமுடி. காதுகளில் பிளாஸ்டிக் ஜிமிக்கி.

ருக்குபாய்க்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

திருவல்லிக்கேணி அக்ரஹாரத் தெருவைச் சுற்றிச் சுற்றி வந்து வீடு வீடாக பொரி உருண்டை கேட்டு மடிநிறைய வாங்கிக் கொள்வாள் ருக்குபாய்.

அவளது கரம் பற்றியபடி வரும் சிறுமிக்கு வயது பத்து அல்லது பதினொன்றாக இருந்திருக்கக் கூடும். அந்தச் சிறுமியின் முகத்தில் ருக்குபாயின் அச்சு அசங்கிக் கிடக்கும்.

அழுக்கடைந்த பட்டுப் பாவாடை முட்டிக்கு மேலேறியிருக்க தாயின் கரம்பற்றி நடந்து வரும் சிறுமியின் கண்களில் தெய்வம் மின்னும்.

தண்ணீர் பஞ்சத்தால் ஆங்காங்கே நடப்பட்டிருந்த அடி பம்ப்புகளின் அடியில் புடவையை வழித்து இழுத்துக்கொண்டு தொடை தெரிய அமர்ந்துகொள்வாள் ருக்குபாய்.

தன் மகளை விட்டு அடிபம்பை ஓங்கி ஓங்கி அடிக்கச் சொல்வாள். அடிபம்பு தண்ணீரில் தன் தொடையை ஓயாமல் அலம்பிக்கொள்வாள். சட்டென எழுந்து மகளை இழுத்துக் கொண்டு அடுத்த தெருவுக்குப் போவாள்.

“மாமி...பொரி உருண்டை உண்டா...?”

அவளையும் குழந்தையையும் கண்டு பரிதாபப்படும் மாமிகள் வெற்றிலைப் பாக்கோடு கார்த்திகைப் பொரி உருண்டையையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

முந்தானை விரித்து பொரி உருண்டைகளை வாங்கிக் கொள்ளும் ருக்குபாய், யாரேனும் தன் குழந்தையிடம் காசு கொடுத்தால் “ச்சீ...ச்சீ...வாங்காதே...” என்று தட்டி விடுவாள்

பொரி உருண்டை வாங்கும் சமயங்களில் வீட்டுக்குள் எட்டி எட்டிப் பார்ப்பாள்.

“ஆத்து மாமா இல்லையா..?”

“அவர் ஜபத்துல இருக்கார். உனக்கென்னடி லூஸு. வாங்கிண்டல்லயோன்னோ...போ...போ...” என்று துரத்தி விடுவார்கள்.

“கோவிச்சுக்காதேங்கோ மாமி. ஆத்து மாமாவுக்கு பாவனையா நமஸ்காரம் பண்ணிண்டுர்றோம்....” என்றபடியே தன் குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடி விடுவாள்.

சேகரித்த பொரி உருண்டைகளை எல்லாம் முந்தானைச் சேலையில் முடிந்துகொள்ளும் ருக்குபாய் நேராக பார்த்தசாரதி கோயில் குளத்துக்குச் செல்வாள்.

மொத்த பொரி உருண்டைகளையும் கோயில் குளத்தில் கொட்டி விடுவாள். குளத்து  நீரை அள்ளித் தன் குழந்தையின் மேல் தெளித்து தரதரவென அழைத்துச் சென்று விடுவாள்.

அடுத்த கார்த்திகைத் திருநாள் வரும் வரையில் ருக்குபாய் ஓர் புதிராகவே இருப்பாள்!

கங்கணா மண்டபத்தில் கூடும் மாமிகள் குமுறிக்கொள்வார்கள்.

“என்ன ஜென்மமோ இது..? இந்தப் பைத்தியத்தண்ட மாட்டிண்டு அந்தச் சின்னக் குழந்தை என்ன பாடுபடப்போறதோ..?”

“விடுங்கோ டீச்சர் மாமி , பெருமாள் பாத்துப்பர்...’’

இந்தப் பராக்குக் கதையெல்லாம் தாண்டி நானும் ஒருவழியாகப் படித்து   ‘பிளஸ் ஒன்’ லீவில் மேனேஜ்மென்ட் லா படிக்க கால் வலிக்க நடந்து சம்பத் சார் வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன்.

அவர் வீட்டுக்கு பக்கத்து பில்டிங்கில் அனாதை ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆங்கிருந்து தம்பூர் மீட்டும் ஒலியும் அதனோடு இழையும் சுநாதமான பெண் குரலும் கேட்டபடியே இருக்கும்.

அது என்ன ராகமாக இருக்கும் என்று யோசிக்கும் சமயங்களில் எல்லாம் சம்பத் சாரின் முரட்டு  விரல்கள் வந்த வேலையை முடிக்கப் பார் நாயே என்றபடி தலையில்  ‘நங்’கென்று விழும்.

ஒரு நாள் ட்யூஷனை முடித்து வெளியேறிய கையோடு பக்கத்து டீக்கடையில் அப்பாடா என்று உக்கார்ந்திருந்த எனக்கு அதிர்ச்சி.

அனாதை ஆசிரமத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தாள் ருக்குபாய்.

கூடவே, அந்தச் சிறுமி. இப்போது இன்னும் கொஞ்சம் குண்டாக மேலதிகம் வளர்ந்துவிட்டிருந்தாள்.

ஆச்சரியம் மேலிட, ஆசிரமத்துக்குள் தன்னிச்சையாக நுழைந்தேன்.

ஆண்டாள் சாம்பிராணி வாசனையும், பினாயில் வாசனையும் கலந்து நிரடியதாக ஞாபகம்.

கவுன் அணிந்தபடி வந்த தலை நரைத்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணி ஒருவர் பேஸ் குரலில் புன்னகைத்தபடி வரவேற்றார்.

“கமான் பாய்... ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ..?”

“நீங்க..?”

“ ஐ யம் டிசௌஸா, இன்சார்ஜ்...”

“எனக்கு இங்கிலீஷ் அவ்ளோ வராதுங்க...”

“ஸோ வாட்...என்னா வோணும் உனுக்கு ..?”

“ஒண்ணுமில்லீங்க...அந்த ருக்குபாய்....?”

“ஆமா, இங்கதான் இருக்கு...பாக்குணுமா..?”

எனக்கு உடல் உதறியது.

“இல்லீங்க... ஆமாங்க...”

“ஹக்...” என்று சிரித்தபடி என் தலை கோதினார் டிசௌஸா.

“கூல்...இப்டி உக்காரு. க்ளாஸ் ஃபினிஷ் ஆனா வரும். கனகு, இந்த தம்பிய பாத்துக்கோ...”

பறப்பதுபோல கைகளை விரித்துக்கொண்டு டிசௌஸா உள்ளே அசைந்து அசைந்து செல்ல, என்னருகில் வந்த கனகலட்சுமி குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

“தாங்க்ஸ்...”

“பிஸ்கட் சாப்புடுறீயா தம்பி...”

“வேணாம்... இதே போதுங்க்கா!”

உள்ளே சன்னமாக ஆரம்பித்தது ஆஹிர் பைரவ் ராகம். சக்கரவாகம் எனப்படும் அந்த ராகம் மெல்ல மெல்ல விஸ்தரித்துக்கொண்டே போனது. குடித்த தண்ணீர் தேனாகியது.

“உள்ள பாடுறது யாருங்க்கா..?”

“அவங்கதான்ப்பா... ருக்குபாய் அம்மா தான்...’’

“பிபரே ராம ரஸம்...

ஜனன மரண பய சோக விதூரம்

சகல சாஸ்த்ர நிகமாகம சாரம்...”

ட்யூஷன் குழந்தைகள் சேர்ந்து பாடத் துவங்கினார்கள்.

சக்கரவாகம் ஏகாந்தமாக எங்கெணும் பரவிக்கொண்டிருந்தது.

“தம்பி, இந்த ஆசிரமம் ஆரம்பிச்சு 15 வருஷம் ஆச்சுப்பா. அப்ப வந்து சேர்ந்தவங்கதான் ருக்குபாயம்மா. அவங்க மராட்டி. பிழைக்க வந்த இடத்துல அப்பாவும் அம்மாவும் ஆக்ஸிடென்டுல போயிட்டாங்க.

தனியா சுத்தித் திரிஞ்ச இந்தம்மாவுக்கு அப்போ 15 வயசு போல... ரொம்ப மோசமா அடிபட்டு இங்க கர்ப்பமா வந்து சேர்ந்தாங்க...”

“கர்ப்பமாவா..?”

“இதுக்கு மேல நான் சொல்லக் கூடாது தம்பி.”

“ப்ளீஸ்...சொல்லுங்கக்கா...”

“ருக்குபாயம்மாவப்போல  ஒரு நல்லவங்கள பாக்க முடியாதுப்பா. இங்க டிசௌஸா மேடத்துக்கு அடுத்தது அவங்கதான் எல்லாமே. வருஷம் முழுக்க நல்லா இருப்பாங்க; நல்லா பாடுவாங்க, அவங்கள மாதிரி பாட்டு சொல்லித் தர இங்க யாருமேயில்ல. ஆனா, கார்த்திகை மாசம் நெருங்குனா மட்டும் புத்தி மாறிக்கும்.

ஒரு வாரத்துக்கு முன்னாடியே பாட்டு கிளாஸை நிறுத்திடுவாங்க. யார்கிட்டயும் பேச மாட்டாங்க. ஆறு மணியானா மூணு அண்டாவுல தண்ணி புடுச்சு ஓயாம குளிப்பாங்க. பெத்த பொண்ணையே கோவிப்பாங்க. எங்ககிட்டகூட எரிஞ்சு எரிஞ்சு விழுவாங்க...”

“ஏங்க்கா...?”

“அவங்க 15 வயசுல, இதே கார்த்திகை மாசத்துல திருவல்லிக்கேணி பக்கம் அனாதையா சுத்தியிருந்திருக் காங்க. அப்போ எவனோ ஒருத்தன் ரெண்டு பொரி உருண்டையைக் காட்டி வீட்டுக்குள்ள இழுத்துக்கிட்டுப் போயி தப்பு பண்ணி விட்டுட்டான்...”

“..............”

“அதோட விட்டாடனா அந்தப் பாவி? ருக்குபாயை வெளியே தள்ளிக்கொண்டுவந்து,  ‘போடீ திருடீ’ ன்னு சொல்லி தலையில கல்லத் தூக்கிப் போட்டிருக்கான். தலைல அடிபட்டு ரத்த வெள்ளமா இருந்தவங்கள நல்லவங்க யாரோ கொண்டுபோய் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்துருக்காங்க. அங்கிருந்து இங்க  வந்து சேர்ந்துட்டாங்க...”

“.................”

“இங்க வெச்சுதான் பாப்பா பொறந்தா. ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை தீபத்துல அதே பழைய புடவைய எடுத்து பரபரன்னு கட்டிக்குவாங்க.  ‘அப்பாவ பாக்கலாம் வாடீ’ன்னு பாப்பாவை இழுத்துக்கிட்டு அந்த ஏரியா முழுசும் சுத்திக்கிட்டு வருவாங்க...”

“..............”

“அதுக்கப்புறம், ரெண்டு நாளு அவங்க ரூம்லயே அடைஞ்சி கிடப்பாங்க. அப்ப அவங்கள யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு டிசௌஸா மேடம்

கண்டிசனா சொல்லியிருக்காங்க. அவங்களுக்குப் பிடிச்ச கோதுமை உப்புமா, முந்திரி கேசரியெல்லாம் செஞ்சி குடுப்போம். மெல்ல மெல்ல நார்மலாயிடு வாங்க...”

“..................”

“என்னப்பா சைலன்டா இருக்க..? ‘என் பொண் ணுக்கு ஒரு வரன் பாத்து வெச்சிட்டாப் போதும். அப்புறம், அந்த சமுத்தரத்துல போயி ராமான்னு குதிச்சு கரைஞ்சிருவேன்’னு அவங்க சொல்றப்போ இப்படித்தான் நாங்களும் அவங்க முன்னால அமைதியா இருப்போம்...”

கண்ணீரை அடக்கிக்கொண்டேன்.

பிபரே ராம ரஸம்...மெல்ல ஓய்ந்தது.

பாட்டு கிளாஸ் முடிந்து ஸ்டூடன்ட்ஸ் எல்லோரும் வெளியேறிப் போய்க்கொண்டிருக்க ...

எனக்கு எதிரே தோன்றினார் ருக்குபாய்.

தேஜஸ்வீயாக அவர் மெல்ல நடந்துவர அறியாமல் எழுந்தேன். மனச்சுவரில் ஓடி ஓடி முட்டிக்கொண்டேன்.

இல்லை, இல்லை... ருக்குபாய் பைத்தியம் இல்லை. தொடை தெரிய அடிபம்ப்பில் குளிக்கக்கூடிய அனாமதேயமில்லை இவள். பொரி உருண்டைக்கு அலையும் அவசியம் இவளுக்கில்லை. கார்த்திகை காலத்தில்  அழுக்கு வேஷத்தோடு அக்ரஹாரத்தைச் சுற்றி ஒவ்வொரு வீட்டிலும் ருக்குபாய் எதைத் தேடுகிறாள் என்பதை யாரும் உணரப் போவதில்லை.

இவளா பைத்தியம் ? இல்லை... இல்லை. இவள் சாம்பவி, சாதி நச்சு வாய் அகி மாலினி. மானுட சமூகத்தைப் பொறுத்தாள வந்த நாயகி, நாரணி.

டிசௌஸாவிடம் மென்குரல் ஆங்கிலத்தில் ஏதேதோ பேசியபடியே வந்த ருக்குபாய் என்பக்கம் திரும்பினார்.

“ஸாரி தம்பி, ரொம்ப வெயிட் பண்ண வெச்சிட்டேனா..?”

“................”

“இவதான் என் பொண்ணு நாசிகா பூஷணி...”

அந்தக் குண்டுப்பெண் மேலே பார்த்தபடி தாயை சைடில் இடித்தாள்.

புன்னகைத்தபடி கேட்டார் ருக்குபாய்.

“என்ன விஷயம்... சொல்லுப்பா...”

என்னத்த சொல்ல ?

ஏதோ சொன்னேன்...

“ஒண்ணும் கவலைப்படாதீங்கம்மா. எங்க சித்தப்பா ஒருத்தர் இருக்கார். வரன் பார்த்து வைக்கறதுதான் அவர் வேலை. உங்க பொண்ணுக்கு நல்ல வரன் பாக்கச் சொல்லட்டுங்களா..?”

“ஆகட்டும்ப்பா... அவங்க அப்பாகிட்ட கேட்டுச் சொல்றேன்...”

(சந்திப்போம்)

x