ஒரே நேரம்... இரட்டை பேரம்!- பழம் அழுகி தெருவில் விழுந்த கதை!


குள.சண்முகசுந்தரம்

“பழம் கனிந்து கொண்டிருக்கிறது... எப்போது பாலில் விழும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” - கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணிக்கு விஜயகாந்தின் வருகையை எதிர்பார்த்து திமுக தலைவர் கருணாநிதி பேசிய வசனம் இது. அப்படி எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக எனும் பழம் இப்போது அழுகி தெருவுக்கு வந்துவிட்டது. கடந்த வாரம் தேமுதிக நிர்வாகிகள் திக்குத் தெரியாமல் தெருவில் திரிந்த காட்சிகளைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது!

திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று புறப்பட்டு வந்ததால் 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்றாலும் சுமார் 8 சதவீத வாக்குகளைப் பெற்றார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் அவர் அதிமுகவுடன் கூட்டணி கண்டிருந்தால் திமுக ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. இதையே ஆதாரமாக வைத்து 2009 நாடாளுமன்றத் தேர்தலையும் தனித்தே எதிர்கொண்ட கேப்டனுக்கு தமிழக மக்கள் இன்னும் கூடுதலாக சுமார் 11 சதவீத வாக்குகளை வாரி வழங்கினார்கள். அதுவரைக்கும் தனது குடும்பத்தைக் கட்சி விஷயங்களில் தலையிட அனுமதிக்கவில்லை கேப்டன். ஒரு கட்டத்தில் கேப்டனின் இந்த வளர்ச்சி கண்டு ஜெயலலிதாவே யோசித்தார். பிரியமான எதிரியை வெளியில் வைத்திருப்பதைவிட உள்ளுக்குள் வைத்திருப்பதே சரி எனக் கணக்குப் போட்ட அவர், 2011 சட்டமன்றத் தேர்தலில் கேப்டனுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார். அந்த இடத்தில்தான் கேப்டன் வீட்டுக்குள் குடும்ப அரசியல் தலையெடுத்தது.

ஜெயலலிதாவே கூட்டணி பேச வருகிறார் என்றதும் தங்களுக்கு 65 தொகுதிகள், அமைச்சரவையில் இடம் என்றெல்லாம் ஆசைகளை வளர்த்துக் கொண்டது கேப்டனின் குடும்பம். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு காத்திருக்க ஜெயலலிதா ஒன்றும் கருணாநிதி இல்லையே... சட்டெனக் கூட்டணிக் கதவுகளை மூடிவிட்டு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. அவரின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத தேமுதிக நிர்வாகிகள் மறுநாளே பதறிப்போய் போயஸ் கார்டன் வாசலில் போய் நின்றார்கள். கடைசியில், தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் தர சம்மதித்தார். அந்தத் தேர்தலில் 29 தொகுதிகளைத்தான் தேமுதிக வென்றது. அங்கிருந்தே தனது சரிவு தொடங்கிவிட்டது என்பதை விஜயகாந்த் அப்போது உணரத் தவறிவிட்டார். அப்படி உணர்ந்திருந்தால் அவ்வளவு சீக்கிரம் அவர் ஜெயலலிதாவைப் பகைத்திருக்காமல், கூட இருந்தே கட்சியை வளர்த்திருப்பார்.

x