நாம் செய்யும் கைமாறு இதுதானா?


புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகளின் மூன்று முகாம்களை குண்டு வீசி அழித்திருக்கிறது இந்திய ராணுவம்.

இந்த நடவடிக்கையில் எதிர்பாராதவிதமாக இந்திய விஞ்ஞானி அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அபிநந்தன், தன்னைப்பற்றிய எந்த விவரத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், இந்திய ஊடகங்கள் அவரது குடும்பம் உள்பட அவரைப்பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவித்ததுடன் அவர் பயன்படுத்திய விமானத்தின் தொழில்நுட்பத் தகவல்களையும் இஷ்டம்போல் வெளியிட்டு  ‘மீடியா சுதந்திரத்தை’ நிலை நிறுத்தி இருக்கின்றன.

இதுபோன்ற நேரங்களில் உண்மை நிலவரத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமைதான். ஆனால், போர் மேகச் சூழலில் நமது விஞ்ஞானி ஒருவர் அந்நிய நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார். அத்தகைய தருணத்தில் தன்னைப்பற்றிய விவரங்களை அவரே சொல்ல மறுக்கிறார். அதன் உள்ளீடான அர்த்தத்தை உணராமல் அவரைப் பற்றிய விவரங்களை வெளியிட்டதும் சமூக வலைதளங்களில் பரப்பியதும் சரிதானா, இதெல்லாம் நமது ராணுவ வீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்? இதைப்பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க... விஞ்ஞானி அபிநந்தனின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதாகக் கூறிக்கொண்டு தமிழகத்து அரசியல் கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்னையிலுள்ள அவரது வீட்டுக்குப் படை திரட்டினார்கள். இந்த நிகழ்வுகளையும் இந்திய ராணுவ தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பேசப்படும் பதிவுகளையும் பார்த்துவிட்டு முகம் சுளிக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்கள், ``நாட்டுக்காக நமது ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவையை உங்களின் ஓட்டு வேட்டைக்காக சிறுமைப்படுத்திவிடாதீர்கள்” என்று வருத்தப்பட்டு வலைதளங்களில் பேசுகிறார்கள்.

x