கடலுக்குள் வாசிக்கிறேன்... கரைக்கு வந்து எழுதுகிறேன்..!


என்.சுவாமிநாதன்

கடியப்பட்டிணத்தில் இருந்து கொச்சி அருகே உள்ள முனம்பம் மீன்பிடித்துறைமுகம் நோக்கி ஓடத் தயாராகிறது அந்த விசைப்படகு. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்த விசைப்படகின் கேப்டன் கடிகை அருள்ராஜ் ஆழ்ந்த சிந்தனையாளர்; அருமையான எழுத்தாளர் என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியப்பட்டுப்போனேன்!

தனது கடல் அனுபவங்களை மையப்படுத்தி ‘கடல் நீர் நடுவே’ என்னும் பெயரில் இவர் எழுதிய நாவல் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் பாடமாகவும் உள்ளது. இவரது புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோடிகுருஸ் வெளியிட்டதும் கூட ஆழி சூல் நடுவில் தான்! ஆம் விசைப்படகில் இலக்கியப் பிரியர்களை அழைத்துச்சென்று  கடல் நடுவேதான் வெளியீட்டு விழாவே நடந்தது. படகை இயக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த கடிகை அருள்ராஜிடம் மெல்லப் பேச்சுக்கொடுத்தேன்.

“வணக்கம் கும்பாரி (நண்பா)... நலமா” என வட்டாரமொழியில் நலம் விசாரிக்கிறார். “நானு சுத்தத் தமிழ்ல பேசணும்னா திக்கித் திணறுவேன். என்னா, நான் எப்பவும் எங்க ஆளுக்க கூடவே பேசி பழகுறேனுல்லய்யா… தமிழை எழுத்துல அழகா கொண்டு வந்துடலாம்; ஆனா, பேசது கொஞ்சம் சிரமப்படுது.” என்றவரிடம், “பரவால்ல கும்பாரி... உங்க பாஷையிலேயே பேசுங்க…” என்றேன். “அட வந்த நிமசத்துல நீங்க எங்க பாஷையைப் பிடிச்சுக்கிட் டீங்களா?” என்று சிரித்தவாறே பேசத் துவங்குகிறார்.

x