கா.சு.வேலாயுதன்
காலத்துக்கும் சும்மா கிடக்கும் காங்கிரஸ் காரர்கள் தேர்தல் திருவிழா வந்துவிட்டால் மட்டும் ஆளாளுக்கு வடம்பிடித்து வம்பிழுக்கக் கிளம்பிவிடுவார்கள்.
அப்படித்தான் கடந்த திங்கள் கிழமை, கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகமான காமராஜ்பவன் பகுதியில் திடீரென முளைத்தன காங்கிரஸ் போஸ்டர்கள். ‘காங்கிரஸ் பேரியக்கத்தின் நம்பிக்கை நாயகனே... எம் ராகுலைப் பிரதமராக அமர்த்தும் வீரனே... மாநிலந்தழுவிய பேரணியின் மண்டலக் கலந்தாய்வு கூட்டத்துக்கு வரும் காங்கிரஸ் ஓபிசி பிரிவின் மாநிலத்தலைவர் டி.ஏ.நவீன் அவர்களே!’ என்று அதில் வாசகங்கள் வரிசை கட்டின.
வாசகங்கள் மட்டுமல்ல... வாகனங்களும் வரிசைகட்ட, பட்டாசு சத்தங்களும் படபடத்தன. யாரந்த நவீன் என்று நானும் எட்டிப் பார்த்தேன். கூட்டம் நடந்த ஹாலுக்குள் யாரோ ஒருவர் மைக்கில் கத்திக் கொண்டிருந்தார். “இந்த ஆளு அரை மணி நேரமா பேசுறாரு... என்ன பேசுறாருன்னே தெரியல” என மீடியா மக்கள் அவரைக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.