ஊர்ப்பணத்தில் உய்யலாலா! அள்ளிவிடும் அதிமுக - பாஜக கூட்டணி


கே.கே.மகேஷ்

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிற வழக்கம் தமிழகத்தில் எப்போது அறிமுகமானது என்று கேட்டால், “திருமங்கலம் இடைத்தேர்தலில்” என்பார்கள் அதிமுகவினர். திமுகவினரோ “அம்மா இருக்கும் போது ஆண்டிப்பட்டியில் ஆரம்பித்தது” என்பார்கள். பழைய ஆட்களோ, “அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் காங்கிரஸ்காரர்களே ஆரம்பித்துவிட்டார்களே?” என்பார்கள். என்றாலும் அதெல்லாம் கட்சிகளில்இறக்கிவிடும் பணம். ஆனால் அதையெல்லாம் தாண்டி, வாக்களிப்பதற்காக அரசுப் பணத்தை அள்ளிவிடும் அமர்க்களமான திட்டத்தை அட்டகாசமாகத் தொடங்கி வைத்திருக்கிறார்கள் மோடியும் எடப்பாடியும்!

தேர்தல் நேரங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பது ஆளுங்கட்சிகளின் வழக்கம்தான். ஆனால், மாநிலத்தின் நிதி நிலைமையே அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கிற நேரத்தில் இருக்கிற பணத்தையும் அள்ளிவிட்டு புதிய பாணி அரசியலை முன்னெடுக்கிறார்கள் இவர்கள்.

ஏற்கெனவே பொங்கல் பரிசாக, 2.92 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா 1000 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்த தமிழக அரசு, இப்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் என்று 60 லட்சம் பேருக்குத் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைக் குறிவைத்து இப்படி நிதி வழங்குவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. ஆனாலும், பேரிடர் நிவாரணத்தைவிட ஜரூராக வேலைகள் நடக்கின்றன. கிராம மக்கள் எல்லாம் ஜெராக்ஸ்கடையிலும் உள்ளாட்சி, விஏஓ அலுவலகங்களிலும் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள்.

x