தீராப் பகையை தீர்த்துவைத்த தைலாபுரம் விருந்து!- முடிவுக்கு வந்த ராமதாஸ் - சி.வி.சண்முகம் மோதல்...


கரு.முத்து, எஸ்.நீலவண்ணன்

 அ திமுக – பாமக தேர்தல் கூட்டணி உருவான கையோடுஉறவை மேலும் வலுப்படுத்த தைலாபுரம் தோட்டத்தில் முதல்வர் உள்ளிட்ட தனது கூட்டணி சொந்தங்களுக்கு விருந்து கொடுத்து அசத்தினார் மருத்துவர் ராமதாஸ்! இவ்வளவு நாளும் பாமகவுடன் பகை பாராட்டிக் கொண்டிருந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும்இந்த விருந்தில் கலந்துகொண்டதுதான் ஹைலைட்!

 பாமகவுடன் அதிமுக தரப்பில் கூட்டணி பேசுவது தெரிந்ததும் கொந்தளித்துக் கிளர்ந்து எழுந்தார் அமைச்சர் சி.வி.சண்முகம். அதற்குக் காரணம் பாமகவுக்கும் அவருக்கும் இருக்கும் 12 வருட பகை. 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது பாமக. அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியமைக்கவும் முக்கியக் காரணமாக இருந்தார் மருத்துவர் ராமதாஸ்.

இதனால், அப்போது ஜெயலலிதாவிடம் மதிப்புமிக்கத் தலைவராக இருந்தார் மருத்துவர். அந்தச் சமயத்தில் அமைச்சரவையில் விழுப்புரம் மாவட்டத்தில் யாருக்கு இடமளிக்கலாம் என யோசித்த ஜெயலலிதா, இப்போது ஆரணி எம்பி-யாக இருக்கும் ஏழுமலையின் பெயரை டிக் செய்து வைத்திருந்தார். அப்போது திண்டிவனம் தொகுதியில் வென்றிருந்த சி.வி.சண்முகம் இதையறிந்து ராமதாஸிடம் பேசினார். தனது சாதிக்காரரும் நண்பருமான சண்முகத்துக்காக ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்தார் ராமதாஸ். இதையடுத்து ஏழுமலைக்குப் பதிலாக சண்முகம் அமைச்சரானார்; வணிக வரித்துறைக்கு அமைச்சரானார். இதற்குப் பிறகு ராமதாஸுக்கும் சண்முகத்துக்குமான இனப்பற்று, குணப்பற்று இன்னும் அதிமாகிப் போனது.

x