கண்ணான கண்ணே..! - 02: தண்ணீர் குடிப்பதில்கூட அக்கப்போரா?


குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோருக்கான வாய்ப்பு என்பதைக் கடந்த அத்தியாயத்தில் விளக்கிய நிலையில் இந்த வாரமும் பெற்றோருக்கானஅறிவுரைகள் நீள்கின்றன.

குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான உணவு தருவது, அவர்களுக்குச் சிறப்பான கல்வி கிடைக்க வழிவகை செய்வது, குறும்பு செய்வதுதான் குழந்தையின் இயல்பு என்பதை அறிந்து அதை அனுமதிப்பது, தொழில்நுட்பத்தைக் குழந்தைகள் பயன்படுத்தும்போது அதை நம் மேற்பார்வையில் அனுமதிப்பது என்ற நான்கு வாய்ப்புகள் கொண்டதே குழந்தை வளர்ப்பு.

இதனைப் புரிந்துகொள்வது சிறப்பான குழந்தை வளர்ப்பில் எவ்வளவு அவசியமானதோ அதே அளவுக்கு முக்கியமானது உணவுப் பழக்கவழக்கத்தில் சரியான புரிதலைப் பெறுவது. உணவுப் பழக்கவழக்கத்தில் ஒருவேளை நாமே(பெற்றோரே) தவறான புரிதலுடன் இருப்போமேயானால் அதனை அப்படியே நமது சந்ததிகள் மீது நாம் திணிக்கும் அபாயம் இருக்கிறது.

அதனால் முதலில் பெற்றோர் தெளிவு பெற வேண்டியது அவசியம்.

தண்ணீர் குடிப்பதில்கூட அக்கப்போரா?

உணவு உட்கொள்ளுதல் என்பது மனிதர்களுக்கு இருக்கும் இயற்கையான உணர்வு. இந்த உலகுக்கு வந்தவுடன் ஒரு குழந்தை இயல்பாக மேற்கொள்ளும் முதல்வேலை உணவு உட்கொள்வதுதான். இந்த உலகிலேயே மிகவும் எளிமையான, இயல்பான வேலையும்கூட அதுதான். ஆனால், நாம் அதனை எந்த அளவுக்கு சிக்கலாக்கியுள்ளோம் என்பதை அறிவோம் வாருங்கள்.

தாகம் தணிக்கும் தண்ணீரைப் பருகுவதைக்கூட கடினமான செயலாக்கியுள்ளோம். சாப்பாட்டுக்கு முன் குடிக்க வேண்டுமா, சாப்பிட்ட பின்னர் குடிக்க வேண்டுமா, ஆழ்துளைத் தண்ணீரா அல்லது சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ. தண்ணீரா, ஒருநாளைக்கு 8 லிட்டரா இல்லை அதைவிட குறைவா, நின்றுகொண்டே குடிக்கவேண்டுமா இல்லை உட்கார்ந்து குடிக்க வேண்டுமா, பிளாஸ்டிக் பாட்டிலா அல்லது வெண்கல உலோக பாட்டிலா? என்றெல்லாம் வரையறுக்க முயல்கிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர், பசித்தால் உணவு என்ற உணர்வையும் அறிவியலையும் குழப்பிக்கொண்டிருக்கிறோம். இப்படி நாமே குழம்பி நின்றால் எதிர்கால சந்ததிகளை வழி நடத்துவது எப்படி?

இப்படியான குழப்பங்கள் எழக் காரணம் என்னவென்று என்றாவது நிதானித்திருப்போமா? இல்லை. ஏனெனில் நாமெல்லாம் சர்வதேசக் குடிமக்களாக மாறும் ஓட்டப்பந்தயத்தில் இருக்கிறோம்.

முதலில், நாம் தவறான புரிதலிலிருந்து விடுபட்டால் மட்டுமே நமது குழந்தைகளுக்குச் சரியான உணவுப் பழக்கவழக்கத்தைச் சொல்லித்தர இயலும். குழந்தைப் பருவம்தான் உணவு ஒழுக்கத்தைக் கற்பித்தலுக்கு உகந்த காலகட்டம். உணவு ஒழுக்கம் அவர்களது எதிர்கால உடல் ஆரோக்கியத்துக்கான உத்தரவாதம். ஆரோக்கியமான குழந்தைப் பருவம் ஆரோக்கியமான பதின் பருவத்துக்கு அடித்தளம். ஒரு சங்கிலித் தொடர்போல் அது ஆரோக்கியமான, வளர்ந்த மனிதருக்கு வித்திடும். 50 ஆண்டு கால முதலீட்டுக்குக் கிடைக்கும் நிகரலாபம் போன்றது குழந்தைப் பருவத்தில் உணவு ஒழுக்கத்தை விதைப்பது.

அச்சத்தை அல்ல... மகிழ்ச்சியைக் கடத்துங்கள் உங்கள் குழந்தைகள் அவர்களாகவே வளரவிட்டீர்கள் என்றால் குழந்தை வளர்ப்பு என்றவாய்ப்பை நீங்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால், அப்படியாகக் குழந்தைகளை அவர்கள் போக்கில் விடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். எப்போது குழந்தையின் மீது அதீதமான பற்றுகொள்கிறீர்களோ அப்போது அச்ச உணர்வு ஏற்படும். அச்ச உணர்வு ஆட்கொண்டால் இதை இப்படிச் செய்யாதே, இது சரியானது அல்ல, இது தேவையற்றது என்றெல்லாம் கருத்துத் திணிப்புகள் ஏற்படும். உங்கள் அச்சம் உங்கள் சந்ததிக்குள்ளும் கடத்தப்படும்.

அச்ச உணர்வு அன்புக்கும் ஆரோக்கியத்துக்கும் விரோதமானது. என் குழந்தைக்குப் போதிய ஊட்டச்சத்து நிறைந்த உணவைக் கொடுக்கிறேனா, குழந்தைக்குத் தேவையான வைட்டமின்களும் புரதமும் கொழுப்பும் உணவில் கிடைக்கும்படி செய்கிறேனா, நான் சரியாகத்தான் குழந்தையை வளர்க்கிறேனா? என்றெல்லாம் அச்சப்பட்டுக் குழம்பாதீர்கள். துணிவு என்பது அச்சமற்று இருப்பதல்ல, அச்சத்தைக் கடப்பது. அச்சத்திலிருந்து நீங்கள் முதலில் விடுபட்டால்தான் மகிழ்ச்சியைக் குழந்தைகளுக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கடத்த முடியும்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் குழந்தையை வளர்க்க ராக்கெட் ஏவுவதற்கான மெனக்கிடுதலைப் போடாதீர்கள். மாறாக அதை உணர்வுபூர்மாக அணுகுங்கள், திணிப்புகளைத் தவிருங்கள்.

மாறிவரும் ஊட்டச்சத்து மரபு

மாறிவரும் ஊட்டச்சத்து மரபு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். பேரிபாப்கின் என்ற உணவு அறிவியல் ஆராய்ச்சியாளர் 1993-ல், ‘Nutrition Transition’ என்ற வார்த்தையை உருவாக்கினார். ஒவ்வொரு பகுதிக்கும் அது சார்ந்த உணவுப்பழக்கவழக்கம் இருக்கும். அது மரபு வழியில் வந்தது. அதுதான் உடலுக்கு உகந்ததும்கூட. ஆனால், அத்தகைய மரபுவழி ஊட்டச்சத்தைப் புறந்தள்ளி மேற்கத்திய அல்லது அயல்நாட்டு மரபைத் தழுவும் போக்கையே பேரி பாப்கின் ஊட்டச்சத்து மாறுதல் (Nutrition Transition) நிலை எனக் குறிப்பிடுகிறார்.

வளர்ந்துவரும் நாடுகள்தான் இந்தப் போக்கைத் தழுவுவதில் அபாயமான கட்டத்தில் இருக்கின்றன. உங்களுக்கு ஓர் உதாரணத்துடன் விளக்குகிறேன். வார இறுதி நாட்களில் பீட்சா சாப்பிடுகிறீர்களா, பர்கரும் சோடாவும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளும் உங்கள் உணவாக மாறியுள்ளனவா, ஆலிவ் ஆயில்தான் சிறந்தது என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா, உள்ளூர்ப் பழக்கவழக்கத்தையெல்லாம் புறந்தள்ளிவிட்டு உணவில் உலகளாவிய சிந்தனையைத் தாராளமாகக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள்தான் ஊட்டச்சத்து மரபை மாற்றியமைக்கும் வேலையை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

இது உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் பழக்கமாகும்போது NCD எனப்படும் தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இதய நோய்கள், உடற்பருமன், புற்றுநோய், மன நல பாதிப்புகள் ஆகியன ஆட்கொள்ள அதிகமான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எப்போதாவது பர்கரும் சோடாவும் சாப்பிடுவதால் பிரச்சினையல்ல... அதுவே பிரதான உணவு என்ற நிலைக்கு வரும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன.

ஊட்டச்சத்து மரபு மாற்றத்துக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று, உள்ளூர் உணவின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள நாம் தவறுவது. இரண்டாவதாக, உணவுத் தொழிற்சாலைகள் தங்கள் பதார்த்தங்களை மிக நுட்பமாகச் சந்தைப்படுத்தி நிலை நிறுத்துவது. கண்கவர் விளம்பரங்களில் நமது ஊட்டச்சத்து மரபு காணாமல் போய்விடுகிறது. இவற்றுக்கு இரையாகாமல் இருப்பதே நாம் தெளிவு பெறுவதற்கான முதல் வாய்ப்பு.

பாட்டி சொல்லைத் தட்டாதே

ஒவ்வொரு தனிநபரும் தன்னை சர்வதேசக் குடிமகனாக அடையாளம் கண்டுகொள்ளும் இந்தக் காலகட்டத்தில் வீட்டுப் பெரியோர் சொல்லும் புத்திமதிகள் புறந்தள்ளப்படுகின்றன. அவர்கள் பழைய மனிதர்கள் என்பதால் அவர்கள் பேசுவதெல்லாமே பழமைவாதம் அல்ல என்பதை உணர வேண்டிய தருணம் இது.

வைட்டமின் ஏ சத்து வேண்டுமானால் கேரட்தான் சிறந்தது  என்பதே  நமது படிப்பறிவு புரிதல். ஆனால், வீட்டுத் தோட்டத்தில் விளையும் பூசணியில் ஒரு பச்சடி செய்து சாப்பிட்டால் அதைவிடச் செறிவாக வைட்டமின் ஏ கிடைக்கும் என்பது பாட்டி அறிந்த பட்டறிவு. வைட்டமின் ஏ உடலில் கிரகித்துக்கொள்ளப்பட வேண்டுமானால் உணவில் போதிய அளவு கொழுப்புச் சத்து இருக்க வேண்டும். பூசணி பச்சடியில் இருக்கும் ஆதாரக் கொழுப்புகள் கரோட்டீனை வைட்டமின் ஏ வாக மாற்றுவதில் சிறப்பாகச் செயல்படும். அதனால், வீட்டில் என்ன சமைக்க வேண்டும் என்பதில் உங்கள் வீட்டுப் பெரியோர் சொல்வதைப் புறந்தள்ளாதீர்கள்.

உணவு ஆடம்பரத்தின் அடையாளம் அல்ல

ஓட்டலில் ஆர்டர் செய்து அதை வீட்டுக்கு வரவழைத்துச் சாப்பிடுவதைத் தங்கள் பகட்டின் அடையாளமாகப் பார்க்கும் காலமாக இது உள்ளது. உணவு என்பது உங்கள் பணக்காரத் தன்மையை நிரூபிக்கும் அடையாளம் அல்ல; அது வாழ்வாதாரம். பகட்டுக்காக நீங்கள் அவலுக்குப் பதிலாக ஓட்ஸும்,

வாழைப்பழத்துக்குப் பதிலாக பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறும் உட்கொள்வீர்கள் என்றால் நீங்கள் உணவுடன் மோசமான உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள் என்று அர்த்தம். உண்மையாகவே மதிப்புமிக்க உணவை விடுத்து மோசமான உணவுடன் ஒப்பந்தமாகியுள்ளீர்கள் என்று பொருள். மரபுவழி ஊட்டச்சத்தை அசைத்துப் பார்க்காதீர்கள்; ஆபத்தை வரவேற்காதீர்கள்.

இனவாதம் போன்றே ஆபத்தானதுமனித குலத்துக்கு இனவாதம், மதவாதம், பாலின பேதம் எல்லாம் எவ்வளவு ஆபத்தானதோ, அவ்வளவு ஆபத்தானது ஊட்டச்சத்து பேதம் (Nutritionism).

நீங்கள் கண்ணில் காணும் உணவையெல்லாம் உணவாகப் பார்க்காமல் இது கொழுப்பு உணவு, புரத உணவு, நார்ச்சத்து உணவு, மாவுச்சத்து உணவு என்று பார்த்தீர்கள் என்றால் அதுவே ஊட்டச்சத்து பேதம் எனப்படும் நியூட்ரிஷனிஸம்.

ஆரோக்கிய உணவு செயற்பாட்டாளர் மைக்கேல் போலன் இந்தப் பதத்தை உருவாக்கினார்.

உண்ணும் உணவை ஊட்டச்சத்துக் கண்ணாடி வழியாகப் பார்க்கும் பார்வையால் உணவுத் தொழிற்சாலைகள்தான் ஆதாயம் அடைந்துள்ளன. அதனால்தான் சந்தையில் புரதச்சத்து பானங்கள், வைட்டமின் ஈ லேபிள் கொண்ட சமையல் எண்ணெய்கள், கொழுப்புச் சத்திலாத திண்பண்டங்கள், ஜீரோ ஃபேட், ஜீரோ சுகர்லேபிள் கொண்ட உணவு வகைகள் மிகுந்திருக்கின்றன.

உணவு, ஊட்டச்சத்தான உணவு என்பதில் மக்களுக்கு இருக்கும் குழப்பம்தான் இத்தகைய தொழில்துறையின் முதலீடு. உணவுக் குழப்பத்தை மக்களுக்கு ஏற்படுத்தியதில் உணவுத் தொழிற்சாலைகளும் உணவு ஆராய்ச்சியாளர்களும் கூட்டு சதியில் ஈடுபடுகின்றனர் என்றே நான் சொல்வேன்.

எப்போது நாம் நமது மரபுவழி உணவிலிருந்து விலகி இதைச் சாப்பிட்டால் புரதம் கிடைக்கும் அதைச் சாப்பிட்டால் வைட்டமின் கிடைக்கும் என்று உணவையும் ஊட்டச்சத்தையும் தரம் பிரித்துப் பார்க்கத் தொடங்கினோமோ அப்போதே உணவுக்குழப்பம் ஆரம்பித்துவிட்டது. இதன் விளைவு, எடை குறைந்த குழந்தைகள், உடற்பருமன் தொந்தரவு கொண்ட குழந்தைகள், வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் பாதிப்பு என ஒரே குடும்பத்துக்குள் மாறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்தியாவைப் போல வளர்ந்துவரும் தேசத்தில்தான் வளர்ந்த பணக்கார நாடுகளைவிட உடற்பருமன் பாதிப்பு 30% அதிகமாக இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. இன்னமும் இங்கு வயிற்றுப் போக்கால் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாகவே இருக்கிறது. வசதிவாய்ப்புகள் உள்ள வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மேற்கத்திய நாட்டுக்குழந்தைகள் போல் ஒவ்வாமையும் தொற்றுகளும் தோல் வியாதிகளும் ஏற்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் நாம் உணவுப் பழக்கவழக்கத்தைக் குழப்பி வைத்திருப்பதுதான்.

உணவுக் குழப்பத்தைத் தீர்ப்பது எப்படி என்பதை அடுத்த அத்தியாயத்தில் அறிவோம்.

(வளர்வோம்… வளர்ப்போம்...)

x