இணையச் சிறையின் பணயக் கைதிகள் - 01


நவீன உலகின் வரமும் இணையம்தான் (Internet), சாபமும் இணையம்தான். கைபேசியில் பஸ் டிக்கெட் புக் செய்வதில் தொடங்கி, படித்த படிப்புக்கு வேலை தேடுவது வரை இணையம் இன்று இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நான்கு வயதுக் குழந்தை கைபேசியைப் பிடுங்கினால் அப்படிக் கத்துகிறது. வெளிநாட்டில் வாழும் மகனுக்கும் பேத்திக்கும் வாழ்த்துச் சொல்வதற்காகவே தமிழில் டைப் அடிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார் என் பக்கத்து வீட்டுப் பாட்டி.

 கலர் கலரான விளக்குகளில் மின்னும் கைபேசிக் கடைகளைப் பாருங்கள். அங்கு வேலை செய்யும் இளைஞர் முதல் கிராமத்திலிருந்து கைபேசி வாங்குவதற்காகவே குடும்பத்தோடு வந்திருக்கும் இளைஞி வரை எல்லோரையும் பாருங்கள். பன்னாட்டு விமான நிலையம் முதல் பக்கத்து சலூன் கடை வரை யாராவது சும்மா உட்கார்ந்திருக்கிறோமா? அல்லது உட்கார்ந்திருக்கத்தான் முடிகிறதா? எப்போது பார்த்தாலும் கைபேசியையும் மடிக்கணினியையும் நோண்டிக்கொண்டுதானே உட்கார்ந்திருக்கிறோம்? பல காரியங்கள்… பல காரணங்கள்.

 நாம் காத்திருக்கும் ட்ராவல் ஏஜென்சியின் பஸ் எங்கு வந்து கொண்டிருக்கிறது என ஆன்லைனில் ட்ராக் செய்கிறோம். இன்னும் 10 நிமிடங்கள் ஆகும் எனத் தெரிந்தவுடன் சமூக வலைதளங்கள் பக்கம் ஒதுங்கிவிடுகிறோம். ஊருக்கு வருகிறேன்… கிளம்பி விட்டேன் என்பது தொடங்கி எங்கு நின்றுகொண்டிருக்கிறோம் என்ன சாப்பிடுகிறோம் என்பது வரை செக் இன் செய்து ஃபேஸ்புக்கிலும் இன்ன பிற தளங்களிலும் காட்டிக்கொடுத்து விடுகிறோம். ஊருக்குப் போனால்கூட எந்த ஊருக்கு எப்போது போகிறோம் என்பதை வீட்டுக்கு வெளியே நின்று கத்திச் சொல்லாதே என்று என் பாட்டி பல்லாண்டுகளுக்கு முன்பு சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். (திருடன் வந்துவிடுவானாம்).

 மணிக்கணக்கில் உட்கார்ந்து போன் செய்து புரிய வைக்க வேண்டிய, அறிவிக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தும் சில நொடிகளில் செய்து முடிக்கப்பட்டுவிடுகின்றன. புகைப்படங்களைப் பகிர்வதாக இருந்தாலும் சரி, நம் பப்பிக் குட்டியின் பிறந்த நாளை அறிவிப்பதாக இருந்தாலும் சரி… கண நேரமே போதுமானதாக இருக்கிறது. மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டன  நம்முடைய பல பணிகள் என்பதெல்லாம் சரிதான். ஆனால் இணையத்தால் ஏற்படும் தீங்குகளும் பிரச்சினைகளும் ஏராளம்; உளவியல் தொந்தரவுகளும் ஏராளம் என்பதே உண்மை. ஆம்… சைபர் சைக்காலஜி (Cyberpsychology) என்ற ஒரு பிரிவே தற்போது உருவாக்கப்பட்டு வெளிநாட்டுக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுவிட்டது. Cybernetics என்று சொல்வார்கள். ‘கட்டுப்படுத்துவதும் தொடர்புகொள்வதற்குமான’ என்ற பொருள் கொண்ட சொல் இது. இதிலிருந்து சைபர் எடுக்கப்பட்டு அதனோடு உளவியலைச் சேர்ப்பதே சைபர் சைக்காலஜி.

 தொழில்நுட்பத்தினால் மனிதன் எப்படி உளவியல் ரீதியாகப் பாதிக்கப் படுகிறான்? முதலில் அது உண்மையா? கண்டிப்பாக உண்மைதான். பெருகிவரும் மக்கள்தொகை, குழப்பமான நேர்மையற்ற அரசியல் சூழல், வேலையில்லா திண்டாட்டம், சமூக அநீதி, இவற்றையெல்லாம் தற்காலிகமாக மறப்பதற்காகப் பழகிக்கொண்ட மது முதலான போதைப் பழக்கங்கள் போன்றவற்றால் ஏற்கெனவே மனநோயாளிகளாக உலா வந்துகொண்டிருக்கிறார்கள் பலர். அவற்றோடு போதாதென்று இப்போது மின்னணு சாதனங்களும் தொலைத் தொடர்பு சாதனங்களும், அவற்றையெல்லாம் அரங்கேற்றும் இணையமும் சேர்ந்து மனிதனின் உளவியல் பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிட்ட அவலத்தின் பிரதிபலிப்பே இத்தொடர்.

 ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் மிஞ்சிக்கொண்டுதான் இருக்கிறோம். தகவல்களின் சூறாவளியில் சிக்கித் தவிக்கிறோம். பல நூறு பத்திரிகைகளின் தகவல்களைச் சில குறுந்தகவல்கள், மீம்ஸ்கள் மூலமாகத் தெரிந்துகொள்கிறோம். தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கும் தகவல் விருந்தைச் சரியாகச் செரிமானம் செய்துகொண்டு, தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை அநாயாசமாகக் கடந்து விடுபவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். எல்லாவற்றையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டவர்கள் தங்கள் அபிமான நடிகரோ அரசியல் தலைவரோ ட்ரோல் செய்யப்படும்போது தாங்க மாட்டாமல் எதிர்வினை ஆற்றிவிடுகிறார்கள். செத்த பாம்பின் மீது கல்லெறிவதாகவும் இதை வைத்துக் கொள்ளலாம். அல்லது பத்தாயிரம் வாலா சரவெடியின் திரியைக் கொளுத்திப் போட்டதாகவும் வைத்துக்கொள்ளலாம். அர்த்தமற்ற இணைய அரட்டைகளின் ஆரம்பம் இப்படித்தான் இருக்கிறது.

 ஒரே ஒரு குழந்தை பெற்றவன் எல்லாம் முட்டாள்; அது பிரயோஜனமில்லை; தனியாக வளரும் அக்குழந்தைக்கு உளவியல் பிரச்சினைகள் வரும் என்ற ரீதியில் ஒரு வாட்ஸப் பகிர்வு. குழந்தையே பெறாத நண்பர் அதைப் பார்த்துக் கடுப்பாகி ‘இங்கே ஒண்ணுக்கே வழியில்லாம அவனவன் லட்சக்கணக்கில செலவு செஞ்சிட்டு இருக்கோம்… இவனுகளுக்கு ஒண்ணு பத்தாதாம்’ எனப் பதிவிடுவார். அதே சமயம் ரெண்டு மூணு பெற்ற நபரோ அவரது கஷ்டத்தை வேறு மாதிரிப் பதிவிடுவார். இந்த இடத்தில் எல்லோருமே ஒன்றை மறந்துவிடுகிறோம். எனக்குப் பிடித்த எல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பிடிக்கவும் கூடாது. சாப்பிடும் உணவிலிருந்து ஓட்டும் கார் வரை அவ்வளவு அலைவரிசை வித்தியாசங்கள் இருப்பதால்தான் நாமெல்லோருமே ஒருவிதச் சமநிலையில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

 இன்னொரு பக்கம் நிறையச் செயலிகள், அவற்றின் தாக்கங்கள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. தொடர்பு கொள்வதற்காகவும் தம் திறமையைச் சற்றேனும் வெளி உலகுக்குத் தெரியப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்த வேண்டிய செயலியில் எல்லை மீறிய ஆபாச வீடியோக்களைப் பதிவிடுகிறோம். நம் சுய காதல் எல்லை மீறுகிறது. என்னைப் பார் என் அழகைப் பார் என்று அகிலத்துக்கே பறைசாற்றத் தொடங்கிவிடுகிறோம். விளைவு ‘cyber bullying’ என்ற இணையவழி இம்சைப்படுத்துதலில் சிக்கிக்கொள்கிறோம்.

“அய்யோ…உங்களுக்கெல்லாம் கூடப் பிறந்த அக்கா தங்கச்சி இல்லையா... அவர்களை இப்படி ஆபாசமாகத் திட்டுவீர்களா?” எனப் புலம்ப வேண்டியது. “நீங்கள் ஒழுங்காக உடை அணியுங்கள். நாகரிகமாகப் பதிவிடுங்கள். பிறகு நாங்களும் நாகரிகத்தோடு கமென்ட் செய்கிறோம்” என்ற பதிலூட்டங்களையும் காண்கிறோம். தம் திறமையைக் காண்பிக்கும் ஆர்வம். அதையும் ஒரே நேரத்தில் உலகமே பார்க்க வழியுண்டு என்ற மந்தகாசமும் கிளர்ச்சியும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத சில மலிவான performance-க்கு வழிவகுத்துவிடுகிறது. ஒரு சின்ன சுய படத்தைப் (Selfie) போடும்போது லேசான அளவில் தென்படும் சுய காதல் (Narcissism) ‘டிக் டாக்’ போன்ற செயலிகளில் தம் திறமையைக் காட்டுகிறேன் பேர்வழி என்று வரைமுறைகள் மீறும்போது ஒரு ஆளுமைக் கோளாறுக்குரிய (Personality disorder) லட்சணங்களுடன் வெளியே தெரிய ஆரம்பித்துவிடுகிறது.

ஒவ்வொரு சமூக வலைதளம் மூலமாகவும் ஏதேனும் ஒரு வழியில் நம்மைப் பற்றியதகவல்களைப் பகிரங்கப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறோம். இது நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சியே அபத்தமான ஒரு கேள்வி போல ஆகிவிட்ட ஒரு இணைய சூழல் இன்று நம் அனைவரையும் கட்டிப் போட்டிருக்கிறது.

ஏற்கெனவே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பவர் இணைய வெளியில் மேய்ந்தால் அது ஒரு மாதிரி பிரச்சினைகளை உண்டாக்குகிறது. தன் மனநிலையை அகில உலகமும் எளிதில் புரிந்துகொள்ளும்படியான பதிவுகளை அவர் போட்டுக்கொண்டே இருக்கிறார். கூடவே மது முதலான போதை வஸ்துக்களும் சேரும்போது எந்தத் தடங்கலும் இன்றி ‘ஆன்லைன் சாட்’கள் தொடர்கின்றன. இரு தரப்பும் ஒத்துப்போனால் டேட்டிங்கிலும் ஒரு புறம் முரண்டு பிடித்தால் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் முன்னாலும் கொண்டுபோய் விட்டுவிடுகின்றது. நம் மனதின் வெளி எவ்வளவு விஸ்தாரமோ, அதை எப்படி மிகப் பெரிதானதாக உணர்கிறோமோ அந்த வெளியின் நீட்சியே சைபர் ஸ்பேஸ் (Cyberspace) எனப்படுவது. எண்ணிலடங்கா நன்மைகளையும் இன்றியமையாத தன்மைகளையும் கொண்ட இணையமும் சமூக வலைதளங்களும் இன்னொரு புறம் நம்மில் பலரை மனநோயாளிகளாக மாற்றிக்கொண்டுவருகின்றன. ஒரு சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது என்று கேட்டோம். அந்தக் காலமும் போய் தற்போது திரைகள். மிகச் சின்னதான தொடு திரைகள் நம்மை அடிமைப்படுத்தி உளப்பிணியாளர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுப் பயணிப்பதே இத்தொடர்.

ஃபேஸ்புக் பதிவுக்கு ஆயிரம் லைக்குகள் வாங்குவது சாதனையா? மலை உச்சியில் நின்றும், ‘விருட்’டென கடந்துசெல்லும் ரயிலின் அருகில் நின்றும் பறந்தும் எடுக்கும் ‘செல்ஃபி’கள் தரும் ‘கிக்’ எதனால்? வாட்ஸப் குரூப்பிலிருந்து நம்மை வெளியெ தள்ளியபோது நேரிட்ட ஆதங்கமும், சக நண்பரின் அயல் நாட்டுப் பயணத்துப் புகைப்படங்களைக் காணும்போது அடிவயிற்றை வந்து கவ்விய பொறாமைத் தீயும் சரிதானா? ஒரு நாளைக்கு இருபத்தெட்டு முறை ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் உலா வந்துகொண்டு இருந்தாலும், நண்பர்கள் என்று சொல்லப்படும் எல்லோரிடத்திலும் தொடர்புடனே இருந்தாலும் மனம் ஏனோ மிகச் சோர்வாகவும் தன்னம்பிக்கையின்றியும் தனிமையுணர்ச்சியில் தவிக்கிறதே? இதுதான் மனச்சோர்வா? அதுவும் இணையம் மூலமாக நமக்கு நாமே சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியமா?

 வாருங்கள் அலசுவோம்… பூஜ்ஜியத்தினுள் அடங்கியிருக்கும் ஒரு ராஜ்ஜியத்தை… இணைய சாம்ராஜ்ஜியத்தை…        

(இணைவோம்...)

x