மண்.. மனம்.. மனிதர்கள்! - 1


அது ஜூலை 3.

அமெரிக்க சுதந்திர தினத்துக்கு முன் தினம்.

அட்லாண்டாவில் கலைப் பயணத்தில் இருந்த எனக்கு ஒரு மதிய விருந்தில் அறிமுகமானார் கனடாவிலிருந்து குடும்பத்தோடு இறங்கியிருந்த அந்த இலங்கை அகதி.

முதன்முறையாகச் சந்திக்கிறோம் என்றாலும் அன்பால் அள்ளிக்கொண்டார். அவரது தோற்றமும், கம்பீரக் குரலும் மினுமினுத்த சூட்டும், விரல் பற்றி சூட்டிய மோதிரமும் அந்த மனிதரின் செல்வச் செழிப்பைப் பகட்டிக்கொண்டிருந்தது.

ஆடலும் பாடலுமாகப் படு உற்சாகமாகத்தான் இருந்தார் என்றாலும், அவரது கண்களுக்குள் சன்ன ரேகையாகப் படர்ந்திருந்த சொல்லப்படாத ஒரு வலியை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. போகப்போகப் பேச்சின் நடுவே அது வெளிப்பட்டது.

“அண்ணே, கொடும்பனி கொட்டும் பூமிதான் என்றாலும் நாங்கள் அங்கே நல்லாத்தான் இருக்கிறம். கடுமையான பனி, பளுவான பணி எதுவாக இருந்தாலும் அதையும் கடந்து வாழும் மன உறுதி எங்களிடம் உண்டண்ணே. ஆனா பேருங்கோ, சாலையில் எதிர்ப்படும் சில கனேடியர்கள் ‘நீ எங்களுக்கு பாரமாக வந்த அகதிதானே?’ என்றபடி ஊடுருவி வீசும் அந்த சுருக்கினும் பார்வையை மட்டும் எங்களால் கடக்கவே முடியலை அண்ணே...”

அந்தக் கம்பீரக் குரல் உடைந்து கரகரத்த குரலாய் மாறி, திசை தேடியலைவதைக் காணச் சகிக்க முடியாமல் சட்டெனத் தலை குனிந்துகொண்டேன்.

நாடற்ற ஓர் அகதியின் முன் சர்வ சுதந்திரமுள்ளதோர் நாட்டின் பிரஜையாக அமர்வதில் இருக்கும் அசௌகரியம் மிக மோசமானது. “கடவுளே... கடவுளே...” எனக் கதற வைக்கக் கூடியது.

அவரது கரங்களை வாங்கிப் பற்றிக்கொண்டு சொன்னேன்.

“அமைதியாயிருங்களேன். காலம் கனிந்து வரும். இன்றைய துக்கம் நாளை மாறும். அன்பும் அமைதியும் நிறைந்த உங்கள் சொந்த நாட்டில் இன்னொரு முறை உங்களோடு மதிய உணவருந்த நிச்சயம் நான் வருவேன்.”

“சரிண்ணே... சரிண்ணே...”

என் கழுத்தில் இருந்த வெள்ளி கோர்த்த ஸ்படிக மாலையை அவருக்கு மாற்றி அணிவித்து ஆரத் தழுவியபடி விடைபெற்றேன்.

நண்பர்களே... கட்டைவிரல் அற்றவரைக் காணும்போதுதான் காப்பிக் கோப்பை ஏந்துவதின் கொண்டாட்டத்தை நம்மால் உணர முடிகின்றது.

போலவே, நமக்குள் எத்தனைதான் மாச்சரியங்கள் இருந்தாலும் நமது அன்னை மண்ணை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்னும் மன உறுதியை ஓர் அகதியின் சந்திப்பு கொடுத்துவிடுகின்றது.

அன்னை பூமி!

விட்டுக்கொடுக்கக் கூடியதா இந்த மண்?

சோற்றுக்கு அலையும் பாழும் பூமியில் சுதந்திரத்துக்கு அலைந்த மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடினார்...

‘வேதமுடையதிந்த நாடு; – நல்ல

வீரர் பிறந்ததிந்த நாடு;

சேதமில்லாத ஹிந்துஸ்தானம்! – அதை

தெய்வமென்று கும்பிடடி பாப்பா!!’

யானை மிதித்தது அவரை மட்டுமல்ல; அவர் நம்பிக்கையையும் சேர்த்துத்தான்!

வேதம் பிறந்த நாட்டில் வித்தை நீர்த்தது. வீரர் பிறந்த நாட்டை ஊழல் சூழ்ந்தது. புகழுடைய ஹிந்துஸ்தானம் சேதமாகிச் சிதைந்தது. தெய்வம் திகைத்தது.

யாதும் ஊரே; யாவரும் கேளிர் எனச் செம்மாந்திருந்த இந்தியத் திருநாட்டில் மொத்தமும் சூறையாடப்பட்டது.

உலக மானுடவியல் வரலாற்றில் உள்நாட்டுப் பகையும், அதன் பாற்பட்ட போரும் சகஜம்தான் என்றாலும் உள்நாட்டுப் போரும் அந்நியப் படையெடுப்பும் ஒன்றாகிவிடாது. உள்நாட்டுப் போரினால் தலைமை மாறிக்கொள்வதுண்டு. எல்லை மாறிக்கொள்வதுண்டு. ஆங்காங்கே கலாச்சாரப் பரிவர்த்தனை நிகழும் என்றாலும் பிடிக்கப்பட்ட மண்ணுக்கே உண்டான மரபு சார்ந்த கலாச்சாரம் வெறிகொண்டு அழிக்கப்பட்டதில்லை. அதன் கலையும் வாழ்வும் அழிக்கப்பட்டதில்லை.

ஆனால், மூறியெழுந்த அந்நியப் படையெடுப்பால் சிறுகச் சிறுக இங்கே எல்லாமும் கலைத்து அழிக்கப்பட்டது. மக்களின் வாழ்வும் கலாச்சாரமும் நேரடியாகவே பாதிக்கப்பட்டது. மக்களை மெல்ல மெல்லக் கட்டியெழுப்பி ஆண்ட இந்தியப் பெரு மண்ணின் பெரு மக்களால் அதைக் காணப் பொறுக்க முடியவில்லை. மனதளவில் எண்ணி எண்ணிக் குமைந்தார்கள். அப்பாவிகளான தங்கள் மக்களை நசுக்கி அட்டகாசம் செய்தபடி வலம் வந்த அந்நியரை எதிர்த்து ஆங்காங்கே போராடிக்கொண்டேயிருந்தார்கள்.

உணர்வுடைய எளிய மக்களும் அவர்களோடு இணைந்து தீரத்தோடு போராடி நின்றார்கள் என்பதை இங்கே நாம் குறித்துக்கொண்டே ஆக வேண்டும்.

சாவு நிச்சயம் என்று தெரிந்தே முன்னெடுக்கப்பட்ட அவ்வாறான போராட்டங்களினால் நம் முன்னோர்கள் தங்கள் இன்னுயிரை மட்டுமல்ல; தங்கள் வம்சங்களையே கூட இழந்தார்கள்.

1801-ல் மன்னர்கள் மருது பாண்டியர்களின் மொத்தக் குடும்பமும் குஞ்சுகுளுவான்களோடு கழுவிலேற்றப்பட்ட அந்த வரலாற்றுக் கொடுமை நெஞ்சைப் பிழியும் சாட்சியாக இன்னும் மனக்கண்ணில் படபடக்கின்றது!

அந்நியர் படையெடுப்பு, அடிமை வாழ்வு என ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளைக் கடந்து போராடியது இந்த மண்.

எத்தனையோ மேடு பள்ளங்களைக் கண்டு கடந்த பின்பும் இந்த மண்ணுக்கே உண்டான ஆன்ம வலிமையால் அதிக சேதமில்லாமல் விடுதலையும் அடைந்துவிட்டது.

சரி! அந்த விடுதலை பரிபூரணமான விடுதலைதானா ?

ஏழு நூற்றாண்டுகளாகப் பட்ட காயங்களுக்கு 70 ஆண்டுகளில் மருந்திட்டுக் குணப்படுத்திவிட முடியுமா என்பது ஒரு நல்ல கேள்வியாக இருக்கலாம்.

ஆனாலும், வெளியேறிய வெள்ளையர்கள் தங்களது வர்க்கச் சுரண்டலைக் கைமாற்றிக் கொடுத்துவிட்டுப் போனது போலத்தானே நடந்துவிட்டது எல்லாமும்...

பார்ப்போம்…

ஏறத்தாழ ஏழு நூற்றாண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்தப் பரந்த இந்தியம் திறந்து விடப்பட்டது என்றவுடன் ஆளாளுக்கு முண்டியடிப்பார்கள் என்பதைத் தன்னளவில் உணர்ந்துகொண்ட மகாத்மா காந்தியடிகள் பெருங்கவலையோடு அறிக்கை செய்தார்.

“காங்கிரஸின் செயல்திட்டம் முடிவடைந்துவிட்டது. அவசரப்படாதீர்கள். தயவுசெய்து மக்களிடம் சென்று கேளுங்கள். பிறகு முடிவெடுங்கள்.”

காந்தியின் முன்னிலையில் ஜனநாயகம் மலர்ந்தது என்பது பொய். அந்நியரின் அழுத்தத்தால் அவசரமாக மலர்விக்கப்பட்டது என்பதே சரி!

சுதந்திர இந்தியாவைச் சமைக்க சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டன. பதிலாக, ஜனநாயகம் என்ற பெயரில் புதுக்கட்டமைப்பு கொள்ளப்பட்டது. ஜனநாயகத்தில் இணைந்தவர்களை ‘கூல்’ செய்வதற்காக மன்னர் மானியம் அறிவிக்கப்பட்டது. சுதேச மன்னர்களுக்கு தலா 5,000 முதல் இரண்டு லட்சம் வரை கொடுக்கப்பட்டது .

ஹைதராபாத் நிஜாம் போன்றவர்களுக்கு அப்போதே பத்து லட்சம் வரை அளிக்கப்பட்டது. பின்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26-வது திருத்தத்தின்படி 1971-ல் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

இதில், சுவாரசியம் என்னவென்றால் மக்களாட்சியால் ஒழிக்கப்பட்டது 552 சமஸ்தானங்கள் என்றால் ஜனநாயகம் என்ற பெயரில் லோக்சபாவுக்காக அவர்கள் கண்டதும் 552 சீட்டுகள்.

வால் போய், கத்தி வந்த கதையா என்கிறீர்களா! அது வேறு விஷயம்.

அதுகுறித்து அக்கறைப்பட இது அரசியல் கட்டுரையல்ல.

மன்னர்களைப் பற்றிக் கவலைப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிக் கவலைப்பட்டார்களா என்னும் மானுடம் கவிந்த அக்கறையே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மேலே போவோம்...

அன்றைய அடிமை இந்தியாவில் அந்நியர்களுக்கு எதிராக உணர்வோடு போராடிய எளிய மக்களை ஒடுக்க ‘குற்றப்பரம்பரை சட்டம்’ கொண்டுவந்தனர். ‘ராத்திரி சீட்டு’ கொடுத்து அசிங்கப்படுத்தினர். தங்களை எதிர்த்த எளிய மக்களை அன்றைய அந்நியர்கள் நாடெங்கும் பிரித்தடித்துத் துரத்திவிட்டனர். எங்கெங்கோ சென்று அடைந்தார்கள் அந்த எளிய மக்கள்.

பொதுவில் எல்லாமே தமிழ் பூமிதான் என்றாலும் அன்று அவர்கள் சென்றடைந்த இடங்கள் அவர்களின் வம்சாவளி வாழ்வு முறைக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாதவை என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும்.

அவர்களைப் பொறுத்தவரை அது அந்நிய மண். அந்நிய மனிதர்கள். அந்நிய சுற்றம். அந்நிய வாழ்வு முறை. என்ன பாடுபட்டிருப்பார்கள்? எத்தனை துன்பத்துக்குப் பின் வேர் பிடித்திருப்பார்கள். சிந்திக்க வேண்டாமா?

அந்த எளிய மக்களைப் பற்றிக் கவலைப்படுவதுதானே ஆகச் சிறந்த தேசாபிமானம்! எளிய மக்களைக் குறித்து அக்கறைப்படாமல் இது எப்படி சுதந்திர இந்தியாவாக முடியும்?

மானுடத்தைக் கொண்டாடியது பாரதம் என்றால் அதை வழிமொழிய வேண்டியது இன்றைய அரசியலாளர்களின் முதற் கடமையல்லவா ?

‘குற்றப்பரம்பரை சட்டம்’ 1947-ல் நீக்கப்பட்டுவிட்டது என்கிறது விக்கி பீடியா. அதுசரி, ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

இந்தக் கட்டுரையின் ஆதங்கத்துக்கு ஆகப் பெரிய சாட்சியாக, சொல்லப் போனால் அடிமை இந்தியாவின் அவமானச் சின்னமாக, இன்றும் நம்மிடையே உறுத்திக்கொண்டிருக்கிறதே, ஏறத்தாழ 300 குடும்பங்களோடு சென்னை ஓட்டேரியில் அமைந்திருக்கும் ‘பிரிஸ்ட்லி நகர் செட்டிமென்ட்’!

(தொடரும்...)

x