ஹாட் லீக்ஸ்


சபரீசனுக்கு நோ என்ட்ரி

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்குச் சென்ற கனிமொழி, தன்னுடன் டி.ஆர்.பாலு, சபரீசன் ஆகியோரையும் அழைத்துச் சென்றிருந்தார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது டி.ஆர்.பாலு உடனிருந்தார். அடுத்த நாள் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ராகுலும் கனிமொழியும் மட்டுமே கலந்து பேசினார்களாம். இந்த இரண்டு அமர்விலும் சபரீசனும் உடனிருக்கவேண்டும் என்று கனிமொழி விரும்பினாராம். ஆனால், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள சபரீசனை அனுமதிக்க மறுத்துவிட்டாராம் ராகுல்!

அதிமுக தேர்தல் அறிக்கையில் ரஜினி வாய்ஸ்!

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துவிட்ட ரஜினி, “தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்துவக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தருபவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று பொடி வைத்திருக்கிறார். ரஜினியின் இந்த வாய்ஸை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பொருட்டு, தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான முக்கியமான வாக்குறுதி ஒன்றைத் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறதாம் அதிமுக - பாஜக கூட்டணி.

தென் சென்னையைக் கை கழுவும் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் 5 தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் வருகிறது. இங்கு தற்போது அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் எம்பியாக இருக்கிறார். பாஜக தரப்பில் இந்தத் தொகுதியை எச்.ராஜா, இல.கணேசன், தமிழிசை ஆகியோர் குறி வைக்கிறார்கள். கூட்டணியில் பாஜகவைச் சேர்த்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு வந்து சேராது எனக் கணக்குப் போடும் ஜெயக்குமார், சத்தமில்லாமல் தொகுதியை மகன் கையிலிருந்து கழற்றிவிட சம்மதித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

தினகரன் வழி தனி வழி

அனைத்துக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டிருக்க... டிடிவி தினகரனோ தனது கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்திக்கொண்டிருக்கிறார். சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்தப் பயிற்சி வகுப்பில், வாக்குச் சேகரிக்கும் முறை, வாக்காளர்களை அணுகும் விதம், எதிரணியின் பிரச்சாரத்துக்கு நாகரிகமாக பதில் கொடுக்கும் விதம் குறித்தெல்லாம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரிகை ஆசிரியர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்திக்கொண்டிருக்கிறார் தினகரன்.

அண்ணனுக்கு ஸீட் இல்லை; அமைச்சர் அப்செட்!

பாமகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு தொடக்கத்திலேயே போர்க்கொடி தூக்கினார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். இந்த நிலையில் அதிமுக- பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தலைமையுடன் கோபித்துக் கொண்டு சண்முகம் திண்டிவனத்துக்குப் பறந்துவிட்டாராம். ஆரணி தொகுதியில் தனது அண்ணனும் ‘நியூஸ் ஜெ’ சேனலின் பொறுப்பாளர்களில் ஒருவருமான ராதாகிருஷ்ணனை நிறுத்தத் திட்டமிட்டிருந்தாராம் சண்முகம். ஆனால், கூட்டணி ஒப்பந்தப்படி அந்தத் தொகுதி பாமக வசம் செல்கிறதாம். இதைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் அப்செட்டில் இருக்கிறாராம் அமைச்சர்.

பாலுவுக்கு ஓகே... பழனிமாணிக்கத்துக்கு தடை?

 கடந்த முறை தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் களமிறங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக உள்குத்து வேலைகளால் தோற்றார். அதனால், இந்த முறை தனக்காக பெரும்புதூர் தொகுதியை கிட்டத்தட்ட ஓகே செய்துவைத்துவிட்டாராம் பாலு. இதனால், இந்த முறை தஞ்சையில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார் ஏற்கெனவே இங்கு எம்பி-யாய் இருந்த பழனிமாணிக்கம். ஆனால், அவருக்கு எதிராக குறுக்குச்சால் ஓட்டும் சில முக்கியத் தலைகள், தஞ்சையை காங்கிரஸுக்கு ஒதுக்கலாமே எனத் தலைமையிடம் தூபம் போடுகிறார்களாம்!

காங்கிரஸுக்கும் ஒரு ராஜ்ய சபா ஸீட்

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், ஆரணி, பெரம்பலூர், கடலூர், பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட 16 தொகுதிகளைப் பட்டியல் போட்டு திமுகவிடம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். இதில் ஒன்பது தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க சம்மதித்திருக்கும் திமுக, இரண்டாவது சுற்றில் (2022) வரும் ராஜ்ய சபா தேர்தலின்போது ஒரு ராஜ்ய சபா எம்பி பதவியையும் விட்டுத் தருவதாகவும் உத்தரவாதம் அளித்திருக்கிறதாம்!

 பலிக்குமா பச்சமுத்து பாச்சா?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த ஐஜேகே நிறுவனர் பச்சமுத்து பாஜக வேட்பாளராகவே பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாலும் இன்னமும் அவரது பெரம்பலூர் பாசம் போகவில்லை. இந்த முறை பாஜக கூட்டணி அதிமுகவுக்குள் வந்துவிட்டதால் பச்சமுத்து முன்னைவிட ஆர்வமாகிவிட்டார். இந்த முறையும் தமக்கு பெரம்பலூர் தொகுதியைக் குறிவைக்கிறார். ஆனால், “எங்களுக்கு செல்வாக்கான இந்தத் தொகுதியை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்” என இப்போதே உள்ளூர் அதிமுகவுக்குள் போர்க்கொடி தூக்குகிறார்கள். இதைத் தாண்டி பச்சமுத்து எப்படிக் கரை சேரப் போகிறாரோ!

கார்த்தியைத் தடுக்கிறாரா சிதம்பரம்?

தனது மகன் கார்த்தி சிதம்பரம் இந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட வேண்டாம் என நினைக்கிறாராம் ப.சிதம்பரம். ஒருவேளை மகனால் கரையேற முடியாமல் போனால் சொந்தத் தொகுதியில் மகனையே ஜெயிக்க வைக்க முடியாதவர் என்று சொல்லி மத்திய அமைச்சரவையில் தனக்கான முக்கியத்துவத்தைக் குலைக்கப் பார்ப்பார்கள் என்று கணக்குப் போடும் சிதம்பரம், மகனுக்குப் பதிலாக தனது விசுவாசி ஒருவரை சிவகங்கையில் நிறுத்தி ஆழம் பார்க்க நினைக்கிறாராம். அவரது இந்த எண்ண ஓட்டத்தைத் தெரிந்துகொண்டு அவரது ஆதரவாளர்கள் பலரும் “கார்த்தியை ‘தேர்தல்ல நிக்க வேணாம்... தொழிலைப் பாரு’ன்னு தலைவர் சொல்லிட்டாரு. கார்த்தி இல்லாம வேற யாரை நிறுத்துனா வொர்க் அவுட் ஆகும்?” என்று கூட்டம் சேரும் இடங்களில் எல்லாம் வெளிப்படையாகவே கருத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கார்த்தியோ, இந்தமுறை சிவகங்கையில் போட்டியிட்டே தீருவேன் என்று தீர்க்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!

x