நீரோடிய காலம் 20: நம்பிக்கையின் காவிரி


கடந்த 19 வார காலமாக உங்கள் வாசிப்பின் வழியாக மனதில் ஓடிய ‘நீரோடிய காலம்’ தொடர் இந்த அத்தியாயத்துடன் நிறைவுக்கு வருகிறது. மிகவும் உணர்ச்சிமயமான ஒரு பயணம் இது. காவிரி அப்படிப்பட்டவள்! எத்தனையெத்தனை காலமாகத் தஞ்சை மண்ணுக்கும் தமிழகத்துக்கும் உணர்வூட்டிக்கொண்டு பாய்பவள் அவள். ஏதோ தஞ்சைக்கு மட்டும் சொந்தமானவள் அல்ல அவள்! அதனால்தான் காவிரிக்கு ஏதாவது ஒன்று என்றால் கடைக்கோடி கன்னியாகுமரியில் உள்ளவர்களும் வெகுண்டெழுகிறார்கள். காவிரி கொடுக்கும் தீபத்தைக் காப்பது என்பது தமிழகத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம் என்பதை காவிரியில் கால் நனைக்காத பிரதேசத்துக்காரர்களும் அவ்வளவு ஆழமாக உணர்ந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்தக் காவிரி ஓடும் பிரதேசத்துக்காரர்களுக்கு மனநிலை எப்படி இருக்கும்! அதைப் பதிவுசெய்யும் நோக்கத்தில்தான் இந்தத் தொடரைத் தொடங்கினேன்.

‘தஞ்சை என்பது இனிமேல் காலிப் பெருங்காய டப்பா’ என்ற ரீதியில் கடந்த சில ஆண்டுகள் ஒரு சிலர் என் காதுபட பேசியிருப்பதையும் கடந்துதான் வந்திருக்கிறேன். அந்தப் பேச்சுகள் புண்படுத்தினாலும் அவை உணர்த்தும் குரூர யதார்த்தத்தையும் புறக்கணிக்காமல் இருக்க முடியாது. ஏனெனில், தஞ்சை என்பது காவிரி அன்றி வேறல்ல எனும்போது காவிரியைத் தொலைத்துவிட்டும் நாம் பழம்பெருமை பேசிவிட முடியாது. இந்தச் சிந்தனைகளுடன்தான் ‘நீரோடிய காலம்’ தொடருக்கான பயணங்களை மேற்கொண்டேன்.

இந்தப் பயணத்தில் அன்பர்களையும் நண்பர்களையும் காவிரியின் பெருமைக்குரிய மனிதர்களையும் வழித்துணைகளாக அடைவதற்கு நான் பெரும் பேறு செய்திருக்க வேண்டும். பேராசிரியர் தங்க.ஜெயராமன், முனைவர் பா.ஜம்புலிங்கம், அய்யம்பேட்டை செல்வராஜ், காமதேனு சிறப்புச் செய்தியாளர் கரு.முத்து, ‘இந்து தமிழ்திசை’ நாளிதழின் திருவாரூர் செய்தியாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்… இன்னும் வழிநெடுகிலும் ஏராளமானோர் என்று பலரும் உதவிக்கும் வழிகாட்டுதலுக்கும் முன்வந்தது இந்தத் தொடரின் சாத்தியங்களை விரிவுபடுத்தியது.

நாம் பிறந்து விளையாடி வளர்ந்த பூமிதானே, புதிதாகத் தெரிந்துகொள்ள என்ன இருக்கப்போகிறது என்ற எண்ணம் தொடக்கத்தில் எனக்குக் கொஞ்சம் இருக்கவே செய்தது. அந்த எண்ணத்தை என்னுடன் உடன்வந்தவர்களும் நான் எதிர்கொண்டவர்களும் நான் கண்ட காட்சிகளும் முற்றிலுமாகத் துடைத்தழித்துவிட்டனர். தஞ்சைப் பரப்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் நாமறியாத விஷயம் ஒளிந்துகிடக்கிறது என்ற எண்ணத்துக்குத்தான் இறுதியில் வந்து நிற்கிறேன். இந்த எண்ணம், பிரமிப்பின் விளைவு! துயரத்தின் விளைவு! ஏக்கத்தின் விளைவு!

காவிரி கானலாய் ஓடுகிறாள்; விவசாயிகளின் வாழ்க்கையும் முகங்களும் வெறுமை மண்டிக் கிடக்கிறது; விவசாயம் சார்ந்த துணைத்தொழில்களும் அருங்காட்சிய நினைவுகளாய் மாறிவிட்டன… இப்படியெல்லாம் அவநம்பிக்கையைத் தரும் விஷயங்களைச் சந்தித்தாலும் இன்னும் நம்பிக்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்று சொல்லும் மனிதர்களையும் விஷயங்களையும் இந்தத் தொடருக்கான பயணத்தின்போது சந்திக்க முடிந்தது. அதை வாசகர்களாகிய நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். காவிரி வறண்டாலும் அவள் தரும் நம்பிக்கை வறளவில்லை, எதிர்காலத்துக்கான உயிர்ப்புடன் இன்னும் காத்திருக்கிறாள் என்பதுதான் இறுதியில் கிடைக்கும் உணர்வு. இந்த உணர்வை உற்சாகமாக எதிர்கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி! ஏற்கெனவே கூறியதுபோல் அங்குல அங்குலமாக அதிசயங்களை ஒளித்துவைத்திருக்கும் காவிரி மண்ணில் ஒரு சிறு அங்குலம்தான் இந்தத் தொடர். இன்னும் அவளுக்குச் சொல்ல விஷயங்கள் கோடி கோடி! அவரவருக்கான காவிரியை அவரவரும் அள்ளிக் குடித்துக்கொண்டிருப்போம் நிஜத்திலும் நினைவிலும்!

(சுற்றி நிறைவோம்!)

x