எங்க குலசாமி 9:  பரியேறும் பெருமாள் சாஸ்தா -  மாரி செல்வராஜ்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

பொழுதுபோக்கு எனும் தளத்தில் இருந்து தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியதில் அண்மையில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழ்த்திரை உலகுக்கு வெளியிலும் பரவலாக வரவேற்பைப் பெற்றது இந்தப் படம். அண்மையில் இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை அமெரிக்காவுக்கு அழைத்துப் பாராட்டுவிழா நடத்தி கவுரவித்துள்ளது வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்.

தொடர்ந்து அமெரிக்கத் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது. அந்த அளவுக்குப் பட்டி தொட்டியெங்கும் பேசு பொருளான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜின் குலதெய்வத்தின் பெயரும் கூட! அவரிடம் “உங்க குலசாமி பற்றி பேசணுமே...” என்றதும் மளமளவெனப் பேசத் துவங்கினார்.



வைகுண்டம் பக்கத்தில் புதுக்குடியில் இருக்கும் பரியேறும் பெருமாள்தான் என்னோட குலசாமி. தாமிரபரணி நதியில் பரிசலில் மிதந்து வந்த சாமி என்பதால் பரியேறும் பெருமாள்னு பெயர் வந்ததா சொல்லுவாங்க. குறிப்பிட்ட சாதின்னு இல்லாம எல்லா சமூக மக்களும் வணங்கிற கோயில் இது. பொதுவாவே சாஸ்தா கோயில்கள்ல பங்குனி உத்திரம்தான் விசேஷமா நடக்கும். ஆனா, இந்தக் கோயில்ல பங்குனி உத்திரம் கொண்டாடுறது இல்லை. அதிலிருந்து எட்டாவது நாள்ல இங்க கொடைவிழா நடக்கும். அதுதான் இங்க முக்கியமான விழா. அதனால சுத்துவட்டார மக்கள் எல்லாரும் அன்னிக்குத் தவறாம கோயிலுக்கு வந்துடுவாங்க.

கொடை அன்னிக்கு மதியம் கோயில் வளாகத்துலயே இருக்குற சிவனனைந்த பெருமாளுக்கு முதலில் கொடை நடக்கும். அப்புறம் பரியேறும் பெருமாளுக்கு நடக்கும். கோயில்ல மூலஸ்தானத்தில் பூரணி, புஷ்கலா தேவியருடன் பரியேறும் பெருமாள் சாஸ்தா இருக்கிறார். மூலஸ்தானத்துல விநாயகரும் இருக்கார். சிவனனைந்த பெருமாளுக்கு தனி சன்னிதி. அதில், கருப்பன், தவசிதம்பிரானும் கூட இருக்காங்க. இதுமட்டுமில்லாம, பேச்சியம்மன், தளவாய் மாடன், மாடத்தி, கொம்புமாடன், சுடலை மாடசாமி, பிரம்மசக்தி, கருப்பன், பலவேசக்காரன், அங்காள ஈஸ்வரி, கரடிமாடன், கரடிமாடத்தி, சுடலைமாடன், முண்டன், புலையன், புலையச்சின்னு நிறைய பரிவார தெய்வங்களும் உண்டு.

குலதெய்வக் கோயிலுக்கு ஊருல எல்லாரும் பங்குனித் திருவிழாவுக்குப் போறப்ப நான் வீட்டுல சும்மா இருப்பேன். எட்டா நாளு எங்க குலசாமி கோயில்ல விசேஷம்னு சொல்லிட்டுக் கிளம்புவோம். ஊரே கொண்டாட்டமா விழாவுக்குப் போறப்ப நம்ம மட்டும் வீட்டுல இருக்கதும், ஊரே ரிலாக்ஸ்டா இருக்கும்போது நாம மட்டும் நம்ம குலதெய்வக் கோயிலுக்குப் பயணிப்பதும் வித்தியாசமான நல்ல அனுபவம்தானே! எங்க ஊருலருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல பரியேறும் பெருமாள் கோயில்.

அதனால, சின்ன வயசுல நடந்துகூட அடிக்கடி இங்க வந்திருக்கேன்.

எங்க வீட்டுல நிறைய பேருக்கு குலசாமி பெயர்தான் வெச்சிருங்காங்க. எங்க அப்பாவோட ஜாதகப் பேருகூட அதுதான். அவரை அவரது நண்பர்கள் ‘பரியா…பரியா’னு தான் கூப்பிடுவாங்க. அதனால, பரியேறும் பெருமாள்னு பேரைக் கேட்குறப்பெல்லாம் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்துட்டே இருக்கும். அந்த பேரு மட்டுமில்ல... சின்ன வயசுல எங்க அம்மா, ‘நம்ம சாமி குதிரையில் வருவாரு’னு சொன்ன கதைகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க அதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளர்ந்ததால் அந்தப் பெயர் என்னை ஈர்த்துடுச்சு.

அதேபோல் கோயில் வளாகத்துல ஆழி சிலை ஒண்ணு இருக்கும். நான் என்னோட சின்ன வயசுல பார்த்த ரொம்பப் பெரிய சிலை அதுதான். அதன் உயரத்தையும் கம்பீரத்தையும் சுத்திச் சுத்திப் பார்த்து பிரமிச்சுருக்கேன். அந்த ஆழிக்கு பெருசா எழுமிச்சை பழம் மாலை போடுவாங்க. ஆழியின் காலடியில் சூடம் கொளுத்தி அதன் காலைத் தொட்டுக் கும்பிடுவாங்க. அதையெல்லாம் பார்க்க ரொம்ப பிரமிப்பா இருக்கும். அந்தக் காலத்துல இந்தப் பகுதியில் திருட வந்த ஒருத்தரை அந்த ஆழி கையோட பிடிச்சு வச்சுருக்குறதா பெரியவங்க சொல்லக் கேட்ருக்கேன்.

எப்பவாச்சும்தான் ஊருக்குப் போவேன். அப்படிப் போறப்பெல்லாம் பரியேறும் பெருமாள் கோயிலுக்குப் போயிடுவேன். அங்க போயி சாமியைக் கும்பிடுறோமோ இல்லையோ... அங்கே போனாலே ஒருவித புத்துணர்ச்சி வந்துட்ட மாதிரி இருக்கும். சின்ன வயசுல எனக்கு நிறைய கற்பனை களம் அமைச்சுக் குடுத்த இடமும் அதுதான். அங்க நடக்கிற கொடைவிழாவில் ரெண்டு ராத்திரி விசேஷமா இருக்கும். அந்த ரெண்டு ராத்திரியும் எனக்கு அந்த உருவங்கள், தோற்றங்கள், சாமிகள் எல்லாமே சிந்தனை வளத்தைத் தூண்டியவை. அதனால் அந்த இடம் எப்போதுமே எனக்கு ஒரு ஃபேன்டசியான இடமாகவும் இருக்கும்” என்றார்.

நான்கு பக்கமும் வாழைத்தோப்புகள் சூழ, அதன் நடுவில் இருக்கிறது பரியேறும் பெருமாள் கோயில். கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமை போர்த்திய சூழல், தண்ணீர் சலசலக்கும் ஓடைகள், பறவைகள் எழுப்பும் சப்தம் என ரம்மியமான சூழலில் அமர்ந்திருக்கிறார் பரியேறும் பெருமாள்.

இதையும் சிலாகித்துப் பேசிய மாரி செல்வராஜ், “இந்தக் கோயிலை மையமா வெச்சு சொல்லப்படும் கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கோயிலோட தோற்றம், அங்க இருக்கிற சாமிகள் குறித்து அப்பா, அம்மா சொல்ற கதைகள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். பரியேறும் பெருமாள் கோயில் தவிர நான் வேறெந்த கோயில்லயும் ஆத்மார்த்தமா நின்னது கிடையாது. எவ்வளவு பெரிய கோயிலுக்குப் போனாலும் சாதாரணமா சுத்திப் பாத்துட்டு வந்துடுவேன்; வேண்டுதலோ, பிரார்த்தனையோ செய்யுறது கிடையாது. ஆனா, பரியேறும் பெருமாள் கோயில்ல மட்டும் எமோஷனலாகவும் பழைய நினைவுகளைத் தூண்டுவதாகவும் ஒரு ஃபீல் கிடைக்குது.

மூணு, நாலு தலைமுறையுடனான பந்தம் பரியேறும் பெருமாள் கோயிலுக்கு இருக்கும்னு யூகிக்கிறேன். கோயிலைச் சுற்றி சின்னச்சின்ன நாய் உருவங்களை செஞ்சு வெச்சிருப்பாங்க. நாய் கடிப்பதுபோல் கனவு கண்டவங்க, வண்டியில நாயை இடிச்சவங்க எல்லாம் பரிகாரமா இந்த நாய் உருவங்களை வாங்கி வச்சதா சொல்லுவாங்க. ஆனா, இப்போ அந்த வழக்கம் இருக்குறது மாதிரி தெரியல.

இதையெல்லாம்விட முக்கியமான ஒரு விஷயம் இருக்கு. பரியேறும் பெருமாள் கோயில்ல கொடை நடந்தா கண்டிப்பா மழை பெய்யும். காலம், காலமாக இது நடந்துட்டும் வருது. அதனால, வீட்லருந்து கெளம்புறப்பவே, மறக்காம கையில குடையோடதான் கிளம்புவாங்க. கிளைமேட்டை பார்த்துட்டு, இன்னிக்கு இது பொய்யாகிடும்ன்னு நான் நினைச்ச நாள்களிலும் மழை பெஞ்சதுதான் ஆச்சரியம்! எங்க குடும்பத்துல எல்லாரும் முதல் குழந்தைக்கு மொட்டை பரியேறும் பெருமாள் கோயிலில்தான் போடுவோம். என் பொண்ணு நவ்விக்கு இப்போ 7 மாசம் ஆகுது. ஒரு வயசு ஆனதும் எங்க நவ்வி பாப்பாக்கும் பரியேறும் பெருமாள் கோயிலில்லதான் மொட்டை போடப் போறோம்”என்று முடித்தார்.

படங்கள்: மு.லெட்சுமி அருண் 

x