நானொரு மேடைக் காதலன் - 30


கடந்து செல்கிற வாழ்க்கை பேசும்படியாய் இருக்க வேண்டும் என்றால் என்னைப் பேசும்படி பார்த்துக்கொள் என்பதுதான் பிறவா யாக்கைப் பெரியோனிடம் நான் வைக்கிற விண்ணப்பம். பாடும் பணியே பணியா அருள்வாய் என்பது அருணகிரிநாதப் பெருமான் ஆறுமுக வேலனிடம் வைத்த விண்ணப்பம். கருத்துக்கிசைந்த காரியத்தை கல்லறைக்குப் போகிற கடைசி நிமிடம் வரை செய்திட காலம் வாய்ப்பை வழங்கி விடுமானால் வாழ்வில் அதைவிட வேறென்ன பேறு வேண்டும்?

இப்படித்தான் ஒரு அமாவாசையைப் பவுர்ணமியாக ஆக்குகிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது. திக்கெலாம் புகழும் திருநெல்வேலிச் சீமையில் ஆடித் தபசுக்கு கோடித் தமிழர்கள் கூடுகிற சங்கரன் கோவிலுக்கு அருகில் பருத்தி விளைகிற சென்னிகுளத்தில் சிந்து விளைந்த இடம் சென்னிகுளம். குருநாதன் மீது கொண்ட மாளாத காதலால் எட்டயபுரத்து பாரதியை ‘சிந்துக்கு தந்தை’ என்று கூறிவிட்டான் பாரதிதாசன். ஆனால், சிந்துவுக்கு தாயும் தந்தையுமாக வாய்த்தவர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார். அவரது காவடிச் சிந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் நூற்றாண்டுகளின் வரப்பைக் கடந்தும் இன்றும் பேசப்படுகிறது; நினைக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது. 

அண்ணாமலை ரெட்டியார் மீதும் அவரின் காவடிச் சிந்து மீதும் சென்னிகுளம் மக்கள் வைத்திருக்கிற பக்தியை அளந்து கூற முடியாது. தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு ஊரா என ஆச்சரியப்படுவீர்கள். அண்ணாமலை ரெட்டியாரின் பிறந்த நாள் தைத்திங்கள் அமாவாசையாகும் அவர் பிறந்த தை அமாவாசை அன்று சென்னிகுளம் மக்களும் சென்னி குளத்தின் அக்கம் பக்கம் கிராமத்து மக்களும் அவரது பிறந்த நாளை சிறந்த நாளாக்க விழித்திருப்பதும் விழா எடுப்பதும் கண்கொள்ளா காட்சியாகும். எள் விழுந்தால் எண்ணெய் ஆகும் வெள்ளம் போல் திரள்கிற மக்களின் ஆர்வத்துக்கு முன்னால் ஆகாயமும் சுருங்கிவிடும். அப்படித்தான் ரெட்டியார் பிறந்த ஒரு தை அமாவாசை அன்று இரவு பத்து மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் அதிகாலை சூரியோதயம் வரை ஒரு மெகா பட்டிமன்றத்தை நடத்த பணிக்கப்பட்டேன். விழாக்குழுவினவிரும் ஊர் மக்களும் ஓடும் மேகமாய் தாவும் மானாய் குதிக்கும் குற்றாலமாய் ஓடி ஆடி உறக்கத்தை வென்று உழைத்த உழைப்பைக் காணவும் அனுபவிக்கவும் என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே என்றே எண்ணி எண்ணி மயங்கினேன்.

சூடு தணியாமல் சுருதி பிசகாமல் சுவை குன்றாமல் பிசிறு தட்டாமல் பிச்சிப்பூ தமிழுக்குப் பஞ்சம் வராமல் தந்த தலைப்பின் எல்லைக்குள் நின்று மூன்று தலைப்புகளில் அணிக்கு மூன்று பேராசிரியர் வீதம் கச்சை கட்டி சிந்துவின் தந்தைக்கு செலுத்திய தமிழ் அஞ்சலியை ஆவி பிரியும் வரை மறக்க முடியாதவனாகவே இருக்கிறேன். ஒன்பது பேராசிரியப் பெருமக்களும் ஒட்டியும் வெட்டியும் கொட்டி முழக்கியதோ நடுவராக இருந்து இடை இடையே சரம் தொடுத்ததோ பெரிதல்ல. சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரையில் வைத்த விழி வாங்காமல் ஆரவாரத்தோடு பட்டிமன்றத்தைச் செவி மடுத்த மக்கள்தான் செவிச் செல்வம் வாய்க்கப் பெற்றவர்கள். விடாதும் அடாதும் தொடர்ந்து 7 மணி நேரம் மாமழை போல் பொழிந்த தமிழ் மழையில் சென்னிகுளமே நிரம்பியது.

யுகக் கவிஞன் பாரதி ஆராதித்த கவிஞர்களில் வாழ்வியலை முழுமையாகப் பாடியவன் வான் புகழ் வள்ளுவனா? என்றுமுள தமிழில் இயம்பி இசை கொண்ட கம்பனா? சிலம்பிசைத்த சேரன் தம்பி இளங்கோவா? - என்பதே பட்டிமன்றத் தலைப்பு. பல்கலைக் கழகத்தின் மைய மண்டபத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய தலைப்பு கிராமத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றால் தென் தமிழக கிராம மக்கள் தமிழ் கேட்கப் பிறந்தவர்கள். மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற பாரதியின் வாக்கைப் பொய்யாக்கியவர்கள். தமிழை மெய்யாக்கியவர்கள்.

பட்டுத் தெறித்த வார்த்தைகளும் விட்டெறிந்த அம்புகளும் சென்னிகுளத்தில் அலை கடல் ஓசையைப் போல் 7 மணி நேரம் கேட்டுக்கொண்டே இருந்தது. “வாழ்க்கை என்பது ஒன்றரையடியில் பிறந்து வளர்ந்து மண்ணுக்கு உரமாவதல்ல. நிலத்தில் விளைந்தவற்றைத் தின்று திரிந்து கதை முடிப்பதல்ல. உண்ட உணவின் கொழுப்புகளை பிறரோடு கூடித் தடித்துக்கொள்ள வேண்டும் என்று தன்னிச்சையின் பாற்பட்டதல்ல. மண் செழிக்க மழை பொழிவதுபோல மனித மனம் செழிக்கப் பாடிய வள்ளுவன், வையத்துள் மனிதன் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஒருவனாக மதிப்பிட வேண்டும் என்பதற்காகவே குறள் செய்தான். ஒரு நில உடமைச் சமூகத்தில் உள்ளம் உடைமையே உடைமை என்று வானமதிர முழங்கியவன் வள்ளுவன் . ஒருவனது உயர்வு உள்ளத்தனையது என்றும் கல்லாதவர் முகத்தில் இருப்பது கண்ணல்ல, புண் என்றும் எள்ளி நகையாடியதோடு தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என இயற்கையின் நியதிகளுக்காக நிராகரித்தவன் வள்ளுவன். வாழ்வியலைப் பாடுவதே வள்ளுவன் குறிக்கோளாக இருந்ததால்தான் ‘ இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியாற்றியான்’. ஆதிக்கத்தின் ஆரக் கால்களை வெட்டிச் சாய்க்க கவிதையை ஆயுதமாக ஏந்தியவன் வள்ளுவன். சர்க்கரையினால் செய்த பொம்மையை எந்தப் பக்கம் பிட்டுத் தின்றாலும் தித்திப்பதைப் போல் வள்ளுவனின் எல்லாப் பக்கமும் வாழ்வியலையே திரும்பத் திரும்ப பேசுகின்றன.

வாழ்க்கை என்ற மாயாஜால விளையாட்டில் விதி தன்னை முன்னிறுத்தும். அது எந்த வாசல் வழியாக வருகிறது. எந்த வாசல் வழியாகப் போகிறது, அது ஏன் நம் வாழ்வில் குறுக்கிட முடிகிறது. விதியின் விளையாட்டில் இருந்து தப்பிக்கவே முடியாதா, வினைப்பயன் ஒன்றை அனுபவித்துதான் தீர வேண்டுமா என்று விடை தேட முயன்றால் வினாக்கள் பதில் கிடைக்காமல் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு செல்லக்குழந்தையின் அத்துமீறல் கூட இல்லாத கண்ணகி நல்லாள். வைகைக் கரையில் வஞ்சினம் உடைத்ததும் பூ ஒன்று புயலானதைப் போல் அரண்மனைக்குள் நுழைந்ததும் ஆட்பெருஞ் சேனையோடு அரியாசனத்தில் இருந்த நிகரில்லாத நெடுஞ்செழிய பாண்டியனை ‘தேரா மன்னா’ என்று விளித்ததும் அந்தக் காலத்தில் அரங்கேறியது என்றால் இதை விதி என்ற எல்லைக்குள் நின்று விவாதிப்பது பொருத்தம்தானா என்று யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். வசந்தத்தை தரிசிக்க முடியாத ஒரு வெறுமை கண்ணகியை வட்டமிட்டாலும் உடுத்து வதையும் உண்பதையும் தாண்டி ஒரு உலகம் இருக்கிறது என்பதை பத்திரப்படுத்துகிற பாத்திரமாக கண்ணகி, இளங்கோ அடிகளால் சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்படுகிறாள். அரசியலில் தப்பாட்டம் ஆடுகின்றவர்களுக்கு அறமே கூற்றுவனாக மாறுவான் என்பதற்கு பாண்டிய மன்னனின் வளமார்ந்த வாழ்வுக்கும் பெருமிதமான நிலைக்கும் அறக்கடவுள் இழைத்த தண்டனையை எண்ணிப்பார்த்தால், வாழ்வியலைப் பாடுவதுதான் இலக்கியம் என்ற எல்லைக்குள் இளங்கோவடிகள் வந்து நின்று கொள்கிறார். முத்தமிழ் காப்பியமாகவும் தேசிய காப்பியமாகவும் ஒரே நேரத்தில் சுடர் விட்ட பெருமை சிலம்பு தந்த இளங்கோவுக்கு உண்டு.

காவிய அரங்கில் பீடு நடை போட்டு வரும் கம்பனின் இராம காதையில் உயர்ந்த நெறிகளெனப் பேசப்படுகின்ற வாழ்வியல் நெறிமுறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாது அங்கிங்கெனாதபடி கம்பனில் நிறைந்து கிடக்கின்றன. வீடணன் எந்தத் தவறினையும் செய்யாதவன், அடைக்கலம் என வந்தவனை ஏற்றுக்கொள்வதுதான் தகுதியானது என்று ஆஞ்சநேயன் தருகிற விளக்கம் உலகியலின் அடிப்படையாக அமைந்து விட்டது.

‘ உள்ளத்தா உள்ளதை உரையின் முந்துகிற
வெள்ளத்தம் முகங்கே விளம்பும்; ஆதலான்
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருவர்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ?’
என்று சொல்வதன் மூலம் வீடணனின் குற்றமிழைக்காத தன்மை அவன் முகத்தை வைத்துக் கருதப்படுகிறது. நல்ல சிந்தைகளும் உயர்ந்த ஒழுக்கமும் உடைய மரபில் வந்த ஆன்றோர்கள் எத்தகைய நெருக்கடிகள் துன்பங்கள் வாழ்க்கையில் எதிர்பட்டாலும் தளர்ந்து விடாமல் தடந்தோள் தட்டி நலிவும் மெலிவும் தன்னை அணுகாமல் பார்த்துக்கொள்வதும் எந்தச் சூழலிலும் குடும்பத்தைக் காப்பாற்றுகிற பணியில் கைவிட மாட்டார்கள்.  ‘இரும்பை எத்துனையும் பகுத்து எய்தினாலும் குடும்பம் தாங்கும் குடிப்பிறந்தார்’ என்பது கம்பன் பாட்டு. தன் மாசற்ற பூமியின் மகிமையைக் கட்டிக்காத்து தருமத்தை பூமியின் கண் நிலை நிறுத்தி, நில வளம், நீர் வளம், பால் வளம், பயிர் வளம் என்று எந்தக் குறைவும் ஏற்படாமல் கண்ணிமை போல் தன் நாட்டினைக் காப்பாற்றிய மன்னவன் தன் பெருமிதத்தைச் சொல்ல வரும்போது பெண்கள் கற்பினைக் கட்டிக் காப்பதுபோல் தன் தேசத்தை தான் கட்டிக் காத்ததாக குறிப்பிடுவது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

‘ கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மா நிலம்
தன்னை இத்தகைதர தருமம் கைதர
மன்னுயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன்’
எனும்போது பெருமிதம் ஒன்று யானை நடை போட்டு வருவதைப் போல பார்க்கிறோம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் பெற்றவர்களின் பெருமையைப் பேசி மகிழ்கிறான் இராமன். காடேகிய காப்பியத் தலைவன் இராமனைச் சந்தித்து சமாதானம் செய்துவித்து மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று முடி சூட்டி மகிழ்வேன் என்று சொன்னவனாய் பரதன் கானகம் வந்தான். வள்ளல் இராமனைச் சந்தித்து தன்னுடைய தாய் கைகேயி இழைத்த கொடுமையால் நடந்த அனைத்துத் தீமைகளுக்கும் வருந்தினான். அழுதான். வரமாகச் சரமாகத் தந்த தந்தையையும் பெற்ற தன் தாயையும் இழித்தும் பழித்தும் பேசினான். பரதனின் கோப மொழிகளைக் கேட்ட இராமன் நூலறிவும் நல்லறிவும் ஒழுக்கமும் செயல் திறமும் தொழுதற்குறிய கடவுளாகும் ‘ தந்தை தாயார் என்று இவர்கள்தான் அலால் எந்தை கூற வேறு யாரும் இல்லையால்’ என்பதில் தந்தை தாயை விட்டுக்கொடுக்காத தன்மையை கம்பன் கவலையுடனும் கரிசனத்துடனும் பதிவு செய்கிறான். பாடு புலவனுக்கு உலகிலேயே முகமாகவும் முகவரியாகவும் இருக்க வேண்டும் என்று எத்தனை முறை சிந்தித்துப் பார்த்தாலும் வாழ்வியலைப் பாடியதில் வள்ளுவனே முந்துகிறான். அவனுக்கு முதல் இடத்தைக் கொடுப்பதுதான் மரியாதை’’ என்று சொல்லி “அமாவாசை உங்களால்தான் பவுர்ணமியாயிற்று. உங்களின் கால் மலரில் என் கண் மலரை வைத்து வணங்கி விருப்பமில்லாமல் விடை பெறுகிறேன்’’ என்று சொன்னபோது வானமும் (ஆனந்த) கண்ணீர் வடித்தது; கூடவே நானும்தான்!

( முற்றும்)

x