ஹாட் லீக்ஸ்: நகலுக்குப் பணம்... அசலுக்கு இடம்!


நகலுக்குப் பணம்... அசலுக்கு இடம்!

ஜெயலலிதா இருந்தபோது கட்சி எப்படித் துடிப்பாக இருந்ததோ அதே துடிப்புடன் காட்டிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் ஒவ்வொரு தொகுதிக்கும் ஸீட் கேட்டு 100 பேராவது பணம் கட்டவேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடமிருந்து உத்தரவுபறந்ததாம். அப்படி கோவை மண்டலத்தில் பலருக்கும் பணம் கொடுத்து விருப்ப மனுகொடுக்கவைத்ததே அந்தந்தப் பகுதி அமைச்சர்கள்தான் என்கிறார்கள். ஒரு பக்கம் இப்படி, சும்மா சிவனேனு இருக்கும் கழகத்தினரை எல்லாம் உசுப்பேற்றி உட்காரவைத்துவிட்டு, அண்ணன், தம்பி, மகன்,மாமன், மச்சான் எனத் தங்களது உறவுகளுக்குள் அசல் வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம் பெரும்பாலான அமைச்சர்கள்.

இங்கே நஹி... அங்கெல்லாம் சரி!

உபியில் அகிலேஷ்சிங் யாதவுடன் சேர்ந்துகொண்டு காங்கிரஸை ஒதுக்கினார் மாயாவதி. ஆனால், அவர் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பிஹார் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியில் சேர முடிவு செய்திருக்கிறார். கடந்த டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மபியில் தனித்து நின்றதால் கிடைத்த இழப்பை மாயாவதி அறுவடை செய்தார். அந்த அனுபவமே  இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸுடன் அவரை கைகோக்கும் முடிவுக்குத் தள்ளியிருக்கிறது. மாயாவதி கூட்டணிக்குள் இருந்தால் பார்டரில் வாய்ப்பைத் தவறவிடும் தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என காங்கிரஸும் உள்ளுக்குள் ஒரு கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது.

x