பாப்லோ தி பாஸ் 12: ஒரு பெரிய தவறு..!


சிலருக்கு அரசியல் பிடிக்கும். சிலரை  அரசியல் பிடிக்கும். பாப்லோ, இதில் இரண்டாவது வகை!

மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பிறப்பு முதல் இறப்பு வரை, கண்ணுக்குத் தெரியாமல் அரசியல் நீக்கமற நிறைந்திருக்கிறது. கட்சிகளில் உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் காலை எழுந்தவுடன் ‘பெட் காபி’ கேட்பதும், இரவில் பட்டினியோடு தூங்கச் செல்வதும் கூட ஒரு விதமான அரசியல்தான். அரசியலால் வந்த விளைவு என்று சொன்னாலும் தவறில்லை.

பணம் சம்பாதிக்க, புகழ் பெற, அதிகாரம் கைக்கொள்ள போன்ற காரணங்களுக்காக பாப்லோ, அரசியல் பக்கம் வரவில்லை. பயம்… எங்கே தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுவிடுவோமோ என்கிற பயம்தான் அவனை அரசியலுக்கு இரண்டாவது முறையாக இழுத்து வந்தது.

இரண்டாவது முறை..? ஆம். முதலில் ஒரு துக்கடா வேடம், பிறகு கதாநாயகனின் நண்பன், சிறிது காலத்தில் ஹீரோ புரொமோஷன், அப்புறம் ஏதேனும் ஒரு கட்சியில் சேர்வது அல்லது தனியே கட்சி ஆரம்பித்துத் தேர்தலில் எம்.எல்.ஏ அல்லது எம்.பி. பதவிக்கு நிற்பது, அப்புறம் முதல்வர் பதவிக்குக் கனவு காண்பது என ‘ஃபைட் மாஸ்டர்’ சொல்லித் தரும் ‘ஸ்டன்ட்’களைச் செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கிற ஹீரோக்களுக்கே இப்படியான அரசியல் ஆசைகள் இருந்தால், நிஜமான துப்பாக்கி எடுத்து, நிஜமான போலீஸாருடன் சண்டையிட்டு வளர்ந்து நிற்கிற பாப்லோ போன்றவர்களிடம் அரசியல் கனவு  அல்ல… பதவியே தானாகத் தேடி வரும்.

அப்படித்தான் 1978-ம் ஆண்டு பாப்லோவைத் தேடி மெதஜின் நகரத்துக்கான துணை கவுன்சில் உறுப்பினர் பதவி வந்தது. அந்த நேரத்தில்தான் பெலிசாரியோ பெண்ட்டாகியூர் எனும் அரசியல்வாதி, கொலம்பியாவின் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டார். அவருக்கான தேர்தல் பிரச்சாரத் திட்டங்களை பாப்லோதான் வகுத்தான். பிரச்சாரத்துக்காகத் தனது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வழங்கினான். அதே சமயம், ஜூலியோ துர்பே எனும் இன்னொரு அரசியல்வாதியும் அதே பதவிக்குப் போட்டியிட்டார். அவருக்கும், நிதி உதவி செய்தான் பாப்லோ.

பெண்ட்டாக்கியூர்தான் அதிபராவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிகம் ஏமாந்தது பாப்லோதான். ஆனால் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. துர்பே அதிபராக வெற்றி பெற்று, தன்னைப் போன்ற ‘நார்கோ’க்களை அனுசரித்துச் செல்வார் என்ற பாப்லோவின் கனவிலும் மண் விழுந்தது. அதிபராகப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டே, அதாவது 1979-ல் போதைப் பொருள் கடத்தல்காரர்களை நாடு கடத்த கொலம்பியாவுடன் அமெரிக்கா செய்துகொண்ட உடன்படிக்கையில் துர்பே கையெழுத்திட்டார். பாப்லோவுக்கு அது பெரும் இடியாக விழுந்தது. இத்தனைக்கும் அப்போது யாரும் பாப்லோவை நாடு கடத்தச் சொல்லவில்லை.

முதல்முறை அரசியல் களத்தில் குதித்தபோதும் சரி, இரண்டாவது முறையாக அரசியலிடம் தஞ்சமடைந்தபோதும் சரி… தான் செய்கிற கடத்தல் தொழில் அரசியலில் நுழைவதற்கும் முன்னேறுவதற்கும் தடையாக இருக்குமென்று பாப்லோ ஒருபோதும் நினைத்ததில்லை.

ஊழல் என்பது கொலம்பிய அரசியலின் உயிர்..! பாப்லோவிடமிருந்து தேர்தலுக்காக நிதி வாங்கிய அரசியல்வாதிகளும் உண்டு, பதவியில் அமர்ந்த பிறகு  அவனுக்கு உதவி செய்து அவன் தரும் பணத்தைக் கிம்பளமாக வாங்கிய அரசியல்வாதிகளும் உண்டு. கிட்டத்தட்ட இதேபோன்ற நிலைதான் மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலும் காணப்பட்டது. தவிர, அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜான் கென்னடியின் தந்தைகூட கள்ளச் சாராயம் விற்றுத்தான் பெரிய ஆளாக உயர்ந்தார் என்பதையும் பாப்லோ அறிந்திருந்தான். எனவே, அரசியலில் தான் உயர்வதற்கு, கடத்தல் தொழில் தடைக் கல்லாக இருப்பதைவிடவும், படிக்கட்டாக இருக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

பாப்லோவுக்கும் அவனைப் போன்ற இதர தொழிலதிபர்களுக்கும் இருந்த ஒற்றுமை என்னவென்றால், அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவர்களிடம் ராணுவ ரீதியான பலமோ அல்லது பண பலமோ இருந்தது. பாப்லோவிடம் பணம் இருந்தது.

கொலம்பிய சட்டத்தின் படி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துவிட்டால் தன்னைக் குற்ற வழக்குகளுக்காக விசாரிப்பதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். தவிர, அவ்வாறு தான் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், கொலம்பிய ‘நார்கோ’க்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக மாற்றுவதற்கான பிரச்சாரத்தைத் தன்னால் மேற்கொள்ள முடியும் என்று பாப்லோ நம்பினான். அப்புறம் படிப்படியாக முன்னேறி, நாட்டின் அதிபராகிவிடலாம் என்று கனவு கண்டான்.

அதன் முதல் படியாக, அவன் நாடாளுமன்ற மாற்று உறுப்பினராகப் போட்டியிட முடிவெடுத்தான். கொலம்பிய நாடாளுமன்றம் சற்று வேறுபட்டது. இங்கு ஒரே பதவிக்கு ஒரே கட்சியிலிருந்து இரண்டு பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் ஒருவர் இன்னொருவருக்குத் துணை உறுப்பினர் போலச் செயல்படுவார். அதாவது, முதன்மை உறுப்பினராகத் தேர்வு பெற்றவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது விடுப்பில் இருந்தாலோ அவரது இடத்தில், அவருக்கு மாற்றாக துணை அல்லது மாற்று உறுப்பினர் செயல்படுவார். பாப்லோவால் நேரடியாக முதன்மை உறுப்பினர் பதவிக்கே போட்டியிட்டிருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்தால் தன் மீது தேவையற்ற கவனம் குவியும் என்பதால் அப்படிச் செய்யவில்லை.

கொலம்பியாவில் காலம் காலமாக இருந்து வரும் லிபரல் கட்சியிலிருந்து பிரிந்து வந்து லூயிஸ்  கார்லோஸ் கலான் என்பவர் ‘புதிய லிபரல் கட்சி’ என்ற ஒன்றைத் தொடங்கினார். அந்தக் கட்சியிலிருந்து முதன்மை உறுப்பினர்  பதவிக்கு ஹெய்ரோ ஒர்தேகா ரெம்யூரெஸ் என்பவரும், துணை உறுப்பினர் பதவிக்கு பாப்லோவும் போட்டியிடத் தீர்மானித்தனர். ஆனால், பாப்லோ வெளியில் தன்னை ரியல் எஸ்டேட் அதிபராகக் காட்டிக்கொண்டாலும், அவனுடைய உண்மையான தொழில் என்ன என்பதை கலான் அறிந்திருந்தார். எனவே,  அவர்கள் இருவரும் கட்சிக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து, அவர்கள் ‘பழைய லிபரல்’ கட்சியை அணுகினார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் கட்சி சார்பாக அவர்கள் போட்டியிடப் போவதாக விளம்பரங்கள் செய்யப்பட்டன.

தான் செய்த தவறுகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் சரி செய்துகொள்ள முடியும் என்று நம்பினான் பாப்லோ. ஆனால் அரசியலில் இயங்க, தான் எடுத்த முடிவே ஒரு பெரும் தவறு என்பதை அவன் அப்போது உணரவில்லை…!     

(திகில் நீளும்...)

x