நானொரு மேடைக் காதலன் - 29


பொருள் தேட வேண்டும் என்பதை விட புகழ் தேட வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். அதற்கு மேடைதான் அரண் அமைத்துத் தரும் என்று நம்பினேன். எனது நம்பிக்கை பொய்த்துப் போய்விடவில்லை. சந்திர பிம்பம் போல் அது நாளும் வளர்ந்தது. பறவையின் கழுத்து மட்டுமே கண்ணுக்குத் தெரிந்த அர்ஜுனனைப் போல் மேடை மட்டுமே என் கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்பட்டது. எந்த மேடையிலும் சோடை போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். சில சொற்பொழிவாளர்களுக்கு வட்டார மொழி கை கொடுக்கும். ஆனால், அவர்கள் அந்த வட்டத்தைத் தாண்டி வர முடியாது. ஆனால், பாமரர்கள் வாழும் சின்னஞ்சிறிய கிராமமாக இருந்தாலும் அழுகுத் தமிழில் திறம்படவும் நிறம்படவும் பேசுவது என்பதில் எப்போதும் நான் சமரசம் செய்துகொண்டதில்லை.

தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் பிரச்சாரச் செயலாளராக இருந்தவர் அண்ணன் திருச்சி செல்வேந்திரன். கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே என்னை ஆட்கொண்டவர். எவ்வளவு பெரிய செய்தியாக இருந்தாலும் ஒரு மொட்டு மலராக மலர்வதைப் போல் நயம்படவும் நலம்படவும் லாவகமாகச் சொல்லுகிற அவருடைய பாணி தனித்தன்மை மிக்கது. வளரும் சொற்பொழிவாளர்களைத் தட்டி வைக்கிறவர்களுக்கு மத்தியில் தட்டிக்கொடுத்து தடம் அமைத்துத் தருகிற அபூர்வ மனிதர். அவர் என்னிடம் ஒரு நாள், ’’ஒரு பேச்சாளன் ஒரு ஊரில் பேசுகிறான் என்றால் ஏதாவது விளைவை உருவாக்க வேண்டும். அதுதான் நல்ல பேச்சு தம்பி. அந்த இடத்தில் இப்போது நீதான் இருக்கிறாய்’’ என்று சொன்னபோது நான் மணப்பெண்ணைப் போல் தலை கவிழ்ந்தேன்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் கண் மூடியதற்குப் பிறகு அவர் தலைமை தாங்கி வழி நடத்திய இயக்கம் இரண்டாகப் பிளவுபட்டு நின்ற காலத்தில் 1989 பொதுத்தேர்தல் வந்தது. திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் கணித்த காலம். 13 ஆண்டு கால வனவாசத்துக்குப் பிறகு ஆளப் போகிறார் கலைஞர் என்ற நம்பிக்கையில் கழக மேடைகள் களை கட்டிய காலம். என் போன்றவர்கள் உற்சாகமாய் உலா வந்த நேரம்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு தென் திசை வந்த கலைஞர் ஒரே நாளில் எட்டு இடங்களில் பேசுகிறார் என்று செய்தி வந்தது. தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் பணி தொடங்கியதற்குப் பிறகு பிரச்சார மேடைகளில் திரை நட்சத்திரங்கள்தான் ஜொலிப்பார்கள். கட்சியே உயிர் என்று கருதுகிற பேச்சாளன் அந்தக் காலகட்டத்தில் குப்பைக்கீரை போல மலிவாகிப் போய்விடுவான். கலைஞர் மேடையில் பேசித் தீர்வது என்று முடிவெடுத்தேன். நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை என எட்டு இடங்களில் கலைஞர் உரையாற்றப் போகிறார் என்ற உற்சாகத்தில் நான்கு நண்பர்களுடன் வாடகைக் கார் எடுத்துக்கொண்டு கலைஞர் மேடைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே நாகர்கோவில் மேடைக்குச் சென்றேன். நானே கன்னிப்பேச்சு பேசிவிட்டு கலைஞர் வருவதற்கு முன்னால் உரையாற்றச் சொல்லி தலைமைக் கழகத்தில் சொல்லி அனுப்பினார்கள் என்று ஒரு பொய்யைச் சொன்னேன். இப்படியே திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், விருதுநகர் என உலா வந்து முன்கூட்டியே எல்லா மேடைகளிலும் நிறைவாகப் பேசி அருப்புக்கோட்டை காரியாப்பட்டி போய்ச் சேர்ந்தபோது மணி இரவு 10. 

அப்போதெல்லாம் பத்து மணிக்கெல்லாம் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்று கட்டாயமும் இல்லை. டி.என்.சேஷனும் இல்லை. காரியாப்பட்டி வந்து சேர்ந்தபோது கலைமாமணி விருது பெற்ற முத்துக்கூத்தன் அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை’ என்ற புகழ் பெற்ற பாடலை எழுதியவர் முத்துக்கூத்தன். பொம்மலாட்ட நிகழ்வின் நிறைவுப் பகுதிக்கு வந்தபோது நான் மேடைக்குச் சென்றேன். அருப்புக்கோட்டை தொகுதியின் வேட்பாளரும் மாவட்டச் செயலாளருமான திரு. தங்க பாண்டியன் அவர்கள் என்னைப் பார்த்ததும் என் கரங்களைப் பற்றிக்கொண்டு “வாங்க தம்பி வாங்க. நீங்கதான் ஆபத்சகாயன். இனி நீங்கள்தான் பேசப் போகிறீர்கள். தலைவர் கலைஞர் வருகிறவரை பேசுங்கள்’’ என்றார். “தலைவர் கலைஞர் எப்போது வருவார்?’’ என்று கேட்டேன். “திட்டமாகச் சொல்ல முடியாது தம்பி. விலாவாரியாக விளாசித் தள்ளுங்கள்’’ என்று கரிசல் மொழியில் கட்டளை இட்டார்.

இரவு சரியாக 10 மணிக்கு பேச்சைத் தொடங்கினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலும் திடலும் தோற்கத் திரண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கினேன். ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்கவில்லை. இடையில் பேச்சை எங்கும் நிறுத்தவில்லை. பேசுகிறேன்; பேசுகிறேன்; பேசிக்கொண்டே இருக்கிறேன். கலைஞருக்காகக் காத்திருக்கிற கூட்டத்தைத் தக்கவைக்க நான் பல்வேறு செய்திகளைப் பந்தி வைத்துக்கொண்டே இருக்கிறேன். கண்ணுறக்கத்தை மறந்து கரவொலி எழுப்பி மகுடிக்கு மயங்கும் நாகமென என் பேச்சில் கட்டுண்டு கிடக்கிறது கூட்டம். தலைவர் கலைஞர் அவர்கள் காலை 7: 30 மணிக்குத்தான் ஆரவாரத்துக்கு மத்தியில் மேடையேறினார். சற்றுத் திரும்பி இருக்கையில் அமர்ந்த கலைஞரைப் பார்த்தேன். புன்னகை பூத்தார். இன்று புதிதாய் பிறந்ததாய் எண்ணி பூரித்தேன். “வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு; வாய்ப்பளியுங்கள் தலைவரின் தன்னேரிலாத் தம்பி தங்க பாண்டியனுக்கு’’ எனச் சொல்லி உரைக்குத் திரையிட்டேன். எழுந்த கரவொலியில் என்னை இழந்தேன். தலைவரைத்  தலை குனிந்து வணங்கினேன். அவருக்கே உரித்தான கரகரப்பான கந்தர்வக் குரலில் ``என்ன சம்பத்... எவ்வளவு நேரம் பேசினாய்?’’ என்று கேட்டார். ``நேற்றிரவு பத்து மணிக்குத் தொடங்கினேன் அய்யா’’ என்றேன். பக்கத்தில் இருந்த அண்ணன் தங்க பாண்டியன் ``9 1/2 மணி நேரம்’’ என்றார். ``அப்படியா!’’ என்று கேட்டு கையைத் தூக்கி என் கன்னத்தை வருடினார். பிறவிப்பயன் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் நான்.

தலைவர் கலைஞர் ஒலிபெருக்கி முன் வந்தார். ``9 1/2 மணி நேரம் சர்க்கஸில் வித்தை காட்டலாம். சைக்கிள் மிதிக்கலாம். மாயாஜாலம் செய்யலாம். மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தலாம். ஏன்... புராண இதிகாசங்களைக் கூட பேசிவிடலாம். ஆனால், ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் 9 1/ 2  மணி நேரம் பேசுவது என்பது அரிதினும் அரிதான சாதனை. அந்தச் சாதனையை இந்த வயதில் இங்கே நிகழ்த்திக்காட்டியிருக்கிற தம்பி சம்பத்துக்கு வாழ்த்துகள். இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. செயல்படுங்கள். நன்றி வணக்கம்’’ என்று ஐந்தே நிமிடத்தில் பேச்சை முடித்துக்கொண்டு விடை பெற்றார் கலைஞர்.

அன்று மாலை நாளேடுகளிலும் அடுத்த நாள் காலை நாளேடுகளிலும் அது முக்கியச் செய்தியாக வந்தது கண்டு மகிழ்ந்தேன். கலைமாமணி முத்துக்கூத்தன் அவர்கள் நந்தன் இதழில் ‘ பாதை மாறாத பாட்டுப் பயணம்’ என்று எழுதிய தன் அனுபவத் தொடரில் இதைப் பதிவு செய்தார்கள்.  “அந்தக் காலத்து நெருப்பு கக்கும் மனிதர் நினைவுக்கு வரும் அதே நேரத்தில் குமுறி வெடிக்கும் ஒரு எரிமலைக்கு ஒப்பான இந்தக் காலத்து இளைஞர் ஒருவர் நினைவும் வருகிறது. இவரைப்பற்றி பிற்பகுதியில் எழுதலாம் என்றிருந்தேன். அதுவரை என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாததால் முற்பகுதியிலே எழுதி விடுகிறேன். 1989 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட தங்க பாண்டியனை ஆதரித்து அருப்புக்கோட்டையில் பல இடங்களில் எங்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்திவந்தோம். ஒருநாள் ஒரு தொகுதியில் இன்னும் சற்று நேரத்தில் கலைஞர் அவர்கள் வந்துவிடுவார் என்று தொடர்ந்து அறிவிப்பு செய்துகொண்டே இருக்க, மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை எங்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நீட்டித்துக்கொண்டே இருந்தோம். இன்னும் சற்று நேரத்தில் கலைஞர் அவர்கள் வந்துவிடுவார் என்று அறிவிப்பு செய்துகொண்டே இருந்தார்கள். நான்கு மணி நேரத்துக்கு மேலும் எங்களால் நிகழ்ச்சி நடத்த இயலாததால் 10 மணி அளவோடு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டோம். அறிவிப்பு மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்தது, கூடியிருந்த மக்களைக் கலைந்து போகாமல் நிறுத்தி வைக்க.

எந்நேரம் ஆனாலும் நமது கலைஞர் வந்துவிடுவார் என்று சிறு மாற்றத்தோடு கூடிய அறிவிப்புக்குப் பிறகு இரவு 10 மணி அளவில் ஒரு இளைஞர் ... இல்லை இல்லை ஒரு எரிமலை ஒலி பெருக்கியின் முன்னால் வந்து நின்று வெடிக்கத் தொடங்கியது. அந்த வெடி முழக்கத்தைக் கேட்டு நாங்களும் உட்கார்ந்து  கொண்டோம். மேடையின் முன்னால் இதோ கலைஞர் பக்கத்து ஊருக்கு வந்துவிட்டார் இன்னும் சிறிது நேரத்தில் நம் ஊருக்கு வந்துவிடுவார் என்ற அறிவிப்பு நின்றுவிட்டது. எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்த இளைஞனின் சொற்பொழிவு உச்ச சுருதியில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இரவு 12  மணிக்கு மேல் 1, 2, 3 என்று நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. எரிமலை இளைஞர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். சொன்னதைத் திரும்பச் சொல்லாமல் பேசியதையே மறுபடியும் பேசாமல், தொய்வில்லாமல், தொடர்பு கெடாமல், கழக வரலாற்றையும் உலக வரலாற்றையும் தங்குதடை இல்லாமல், ஒரு சொட்டுத் தண்ணீரோ தேநீரோ அருந்தாமல், ஆரம்பத்தில் பேசத் தொடங்கிய சுருதி குறையாமல் களைப்போ சலிப்போ இல்லாமல், பேசிக்கொண்டே இருந்தார் இளைஞர். பொதுமக்கள் கூட்டம் கலைந்து போகவும் இல்லை. எழுந்து நிற்க நினைக்கவும் இல்லை. எல்லோரும் உணர்ச்சிவயப்பட்டு இருந்தார்கள். ஐயோ இந்த நேரத்தில் கலைஞர் வந்துவிடக் கூடாதே என்று என்னுள் எண்ணிக்கொண்டேன்.

ஒவ்வொரு கணமும் இப்படித்தான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.அப்படி இருந்தது அந்த இளைஞரின் சொற்பொழிவு. முதல் நாள் இரவு 10 மணிக்குத் தொடங்கிய இளைஞரின் பேச்சு கொஞ்சநேர ஓய்வோ இடைவெளியோ இல்லாமல் அடுத்தநாள் விடியற்காலை 5, 6, 7 மணி என்று தொடர்ந்துகொண்டே இருந்தது. எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கிக் கிடந்த நேரத்தில் கலைஞர் வாழ்க கலைஞர் வாழ்க என்ற பெரு முழக்கம் கேட்டது. ஒருவழியாக கலைஞர் மேடைக்கு வந்து சேர்ந்தார். வாழ்த்தொலிகள் முழங்கின. இளைஞர் பேச்சை நிறுத்தினார். அப்போதும் கூட தம் உமிழ்நீரைத் தவிர வேறு ஒரு நீரையும் அருந்தவில்லை. மேலும் ஒரு அரைமணி நேரம் பேசி ... இல்லை இல்லை குமுறி வெடித்து அமைதி கொண்டது அந்த எரிமலை. பொய்யில்லை. வெறும் புகழ்ச்சியில்லை. மெய்யாகவே 9 1/2 மணி நேரம் சோர்வின்றி சூடு தணியாமல் பேசிய இளைஞன் யார் தெரியுமா? அவர்தான் நெருப்பு கக்கும் மனிதரான ஜீவா அவர்கள் பிறந்த மண்ணின் மைந்தன் எரிமலை இளைஞன் சம்பத்” என்று பதிவு செய்திருந்தார் முத்துக்கூத்தன்.

1989 பொதுத் தேர்தலில் ஈரோட்டில் களம் கண்ட அக்கா சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்து ஈரோட்டில் இரவு 11 மணிக்கு ஆரம்பித்து கலைஞர் மேடைக்கு வருகிற அதிகாலை 5 மணி வரையிலும்... தொடர்ந்து பவானி நகரத்தில் திமுக வேட்பாளர் கிட்டுவை ஆதரித்து காலை கலைஞர் மேடைக்கு வருகிற 7 மணி வரையிலும் உரையாற்றியதன் மூலம் நிர்வாகிகளின் நெஞ்சம் கவர்ந்தேன். ஆதாயத்தைக் கருதாமல் ஒரு அங்கீகாரத்துக்கு ஏங்குகிறவனுக்கு 1989 பொதுத் தேர்தல் ஆறுதலை மட்டுமல்ல; மாறுதலையும் தந்தது. கலைமாமணி முத்துக்கூத்தன் நந்தனில் எழுதிய பாதை மாறாத பாட்டுப் பயணத்தை அவரது புதல்வர் கலைவாணன் நூலாக்கி வெளியிட்டார். அந்த நூலில் என்னை பற்றிய இந்தச் செய்தி வராமல் பார்த்துக்கொண்டார். இதுதான் என் நிலைமை.

(இன்னும் பேசுவேன்...)

x