கதாபாத்திரங்களை மிளிரச் செய்தவர்!


எத்தனை கண்ணியமான தோற்றம், அதிராத குரலில் எவ்வளவு அக்கறையான விசாரிப்பு, எத்தனை கனிவான சிகிச்சை! எல்லா டாக்டர்களும் இவரைப்போல இருந்துவிட்டால் நோய் குணமாக மருந்தே வேண்டாமே என்று ரசிகர்களை எண்ண வைத்தார் கன்னட நடிகர் கல்யாண்குமார். ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் டாக்டர் முரளியாகத் தோன்றி, ரசிகர்களின் மனதில் இப்படிப் பசையாக ஒட்டிக்கொண்ட அந்தஅழகான நடிகரை, தனது முதல் படமான‘மணி ஓசை’யில் தலைகீழாகப் புரட்டிப் போட்டார் இயக்குநர் பி.மாதவன். கூன்முதுகும் விகாரமான முகத் தோற்றமும் கொண்டநாயகனாக அருணகிரி என்ற கதாபாத்திரத்தில் அவரைத் தோன்றச் செய்தார்.

அறுபதுகளில் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருந்த ஆண்டனி குவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது ‘ஹன்ச்பேக் ஆஃப் நோட்டர்டேம்’ என்ற படம். அதன் தாக்கத்தில் பாசுமணி கதை, வசனம் எழுத கவிஞர் கண்ணதாசனின் சகோதரரான ஏ.எல்.எஸ்.சீனிவாசன் தயாரித்த படம். கூன்முதுகு நாயகன் அருணகிரிக்கும் ஆடு மேய்க்கும் சிறுமிக்குமான நட்பைத் திரைக்கதையில் சேர்த்தார் மாதவன். கல்யாண்குமாருக்கு கூன்முதுகு மேக்-அப் போடப்பட்டு செட்டுக்கு வந்தபோது முதுகில் கூன் இருந்ததே தவிர, அவரது முக அழகு அப்படியே இருந்தது. வலது கண்ணுக்கு மேலே புருவத்தில் ஒரு பெரிய கட்டி இருப்பதுபோல மேக்-அப் போடச்சொன்னார் மாதவன். அதன்பிறகு கல்யாண்குமாரா இவர் என்று படப்பிடிப்புத் தளத்தில் பலரையும் கேட்க வைத்தார். அதுமட்டுமல்ல; “கன்னடத்திலும் தமிழிலும் நீங்கள் இதுவரை நடித்திருக்கும் படங்களில் காட்டிய நடிப்பின் சாயல் இந்தக் கதாபாத்திரத்துக்கு உதவாது” என்று கூறி அவருக்கு அந்தக் கதாபாத்திரத்தின் கூனன் நடிப்பை அப்படியே செய்து காட்டினார் மாதவன்.

சிவாஜி கண்டுபிடித்த மாதவன்

‘மணி ஓசை’ வெளியாகி ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. குறும்பும் விளையாட்டுமாக ஊருக்கே தண்ணீர்க் கொண்டு வந்து தரும் கூன்முதுகு அருணகிரியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். கல்யாண்குமாரை இவ்வளவு அசிங்கமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டாரே என்று இயக்குநரைத் திட்டினார்கள். உறவுகளாலும் ஊர்க்காரர்களாலும் புறக்கணிக்கப்பட்டு பள்ளி ஆசிரியையின் அன்புக்குப் பாத்திரமாகும் கதாபாத்திரம். தங்கை மணக்க இருக்கும் மாப்பிள்ளைக்காக திருட்டுப்பழியை தான் ஏற்றுக்கொண்டு, இறுதியில் தனது கண்களையும் தானமாகக் கொடுத்துவிடும் அருணகிரிதான் தமிழ் சினிமாவின் முதல் கூன்முதுகு நாயகன். படம் தோல்வி அடையாவிட்டாலும் பெரிதாகப் போகவில்லை. ஆனால், ‘மணி ஓசை’ படத்தில் பி.மாதவனின் திறமையை நன்கு கண்டுகொண்டார் நடிகர் திலகம். ‘பாச மலர்’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் அதற்குச் சற்றும் குறையாத ஒரு படத்தைக் கொடுக்க விரும்பி மாதவனை அழைத்தார்.

x