சின்னத்தம்பியை வாழவிடுங்கள்!- ஒரு யானைக்காக உருகும் மக்கள்


கா.சு.வேலாயுதன்

‘சின்னத்தம்பியை வாழவிடுங்கள்’, ‘சேவ் சின்னத்தம்பி’, ‘சின்னத்தம்பி ரசிகர் மன்றம்’ என்று பதாகைகள் வைக்குமளவுக்கு பிரபலமாகிவிட்டது சின்னத்தம்பி என்ற இந்தக் காட்டு யானை.

இந்த சின்னத்தம்பி பற்றி கடந்த 07.10.2018 காமதேனு இதழில் ‘சின்னத்தம்பிக்கு என்ன ஆச்சு? - ஆனைகட்டியில் ஒரு யானை கதாநாயகன்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம். கோவை-கேரள எல்லையோர கிராமங்களில் நீண்டகாலமாக18 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் யானைகள் சுற்றி வந்தன. இவற்றை பெரியதம்பி (பெரிய விநாயகன்), சின்னத் தம்பி (சின்ன விநாயகன்) என்ற செல்லப்பெயர் சொல்லி, தங்களில் ஒருவராகவே ஊர் மக்கள் கருதினர்.

இந்த நிலையில், திடீரென்று பெரியதம்பியைக் காணவில்லை. அதனால் சின்னத்தம்பி ஒரே அழிச்சாட்டியம். அந்த நேரம் பார்த்து, சேம்புக்கரையை சேர்ந்த ஒருவர் யானை மிதித்து இறந்தார். ‘இது சின்னத்தம்பி செய்த கொலை!’ என்றும், ‘இது சின்னத்தம்பி செய்தது அல்ல!’ என்றும் செய்திகள் கிளம்பியதையும் நமது கட்டுரையில் சொல்லி இருந்தோம். கட்டுரை வெளியான பிறகு, தடாகத்தில் வன ஊழியர் ஒருவரும் காட்டுயானை மிதித்து இறந்தார். இதையடுத்து பெரியதம்பியையும் சின்னத்தம்பியையும் பிடிப்பதற்காக கும்கிகளைக் களமிறக்கியது வனத்துறை. கடந்த டிசம்பர் 18-ந் தேதி பெரியதம்பியை பிடித்து முதுமலை வனத்தில் விட்டனர். கடந்த மாத இறுதியில் சின்னத்தம்பியும் பிடிக்கப்பட்டது. அப்போதே பெண் யானை ஒன்று தனது இரண்டு குட்டிகளுடன் வந்து சின்னத்தம்பியை மீட்க ஒரு மணிநேரத்திற்கும் மேல் போராடியது. அதை வெடி வெடித்து விரட்டி விட்டே சின்னத்தம்பியைப் பிடித்தனர்.

x