இதுதான் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையா?


கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி சென்னை தீவுத் திடலில் தேர்தல் பிரச்சாரம் செய்த அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் எனது லட்சியம். அந்த லட்சியத்தை நோக்கி தமிழகத் தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்ற வாக்குறுதி அளித்தார். இதை நம்பி அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த பெண்கள் ஏராளம்.

அந்த வாக்குறுதியை அவரும், அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்பவர்களும் படிப்படியாக அமல்படுத்தி இருந்தால் இந்நேரம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலாகி இருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பார்த்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதைவிட மது விற்பனையை அதிகப்படுத்துவதிலேயே ஆட்சியாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

சொன்னதற்காக ஏதோ பேருக்கு இதுவரை இரண்டு கட்டங்களாக சுமார் ஆயிரம் மதுக்கடைகளை மூடினார்கள். அதுவும்கூட சரியான ஓட்டமில்லாத கடைகள் என்கிறார்கள். இந்தக் கடைகளில் சிலவற்றை மாற்று இடங்களில் திறந்த கதையும் உண்டு. அதேபோல், “மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியிருக்கும் மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் சொன்னதுமே பதறிப்போன ஆட்சியாளர்கள், வருமானம் கொழிக்கும் நெடுஞ்சாலை மதுக்கடைகளைக் காப்பாற்ற அத்தகைய சாலைகளை ஊரக சாலைகளாக வகை மாற்றிய அவசரத்தையும் பார்த்தோம்.

இப்படியான சூழலில்... 2,968 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டதாக பட்ஜெட் உரையில் சொல்லியிருக்கும் நிதியமைச்சர் ஓபிஎஸ், கடந்த நிதியாண்டைவிட, வரும் நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் சுமார் 438 கோடி ரூபாய் கூடுதலாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஆக, கடைகளை மூடிவிட்டதாகக் கணக்கு காட்டுபவர்கள், மதுக்கடைகள் கொட்டும் உபரி வருமானத்துக்காக வழிமேல் விழிவைத்து காத்து நிற்கிறார்கள். இதுதான் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையா?

x