பதறும் பதினாறு 28: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு பூஜா சோர்வாக வீடு திரும்பினாள். வந்ததுமே எதுவும் கேட்க வேண்டாம் என அவள் தன் வழக்கமான வேலைகளை முடிக்கும்வரை காத்திருந்தார் பூஜாவின் அம்மா ஹேமா. இரவு சாப்பாடு முடிந்ததும் மகளை அழைத்தார். அவளது மொபைல் போனை வாங்கிப் பார்த்தார். அதில் படங்கள், வீடியோக்கள் எதுவும் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டார். அம்மா எதற்காகத் தன் மொபைல் போனைப் பார்க்கிறார் என்பது பூஜாவுக்குப் புரியவில்லை.

தனக்குத் தெரியாத செயலிகள் பலவற்றை மகள் தரவிறக்கம் செய்திருப்பதை ஹேமா பார்த்தார். ‘டிக் டாக்’ செயலிக்குள் செல்ல முற்பட்டபோது அது பாஸ்வேர்டைக் கேட்டது. பூஜாவுக்கு ஓரளவு விஷயம் விளங்கிவிட்டது. மகளிடம் போனைக் கொடுத்து பாஸ்வேர்டைப் போடச் சொன்னார். பூஜா எதுவும் செய்யாமல் அமைதியாக நின்றாள். மீண்டும் வலியுறுத்தியபோது தயங்கியபடியே பாஸ்வேர்டைப் போட்டாள். உள்ளே நுழைந்ததுமே ஏராளமான வீடியோக்கள். வயது வித்தியாசமே இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலரும் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை அல்லது திறமை எனத் தாங்கள் நினைத்தவற்றை வெளிப்படுத்த உகந்த களமாக இந்தச் செயலியைப் பயன்படுத்துவதை அடுத்துவந்த அரை மணி நேரத்தில் ஹேமா புரிந்துகொண்டார்.

மகள் ரெக்கார்ட் செய்திருந்த வீடியோக்கள் ஒவ்வொன்றும் ஹேமாவுக்கு அதிர்ச்சியளித்தது. இரட்டை அர்த்த வசனங்களுக்கு வாயசைத்து நடித்திருந்தாள். நாட்டுப்புறப் பாடல் தொடங்கி சமீபத்தில் வெளியான திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரை பல பாடல்களுக்கு நடனமாடியிருந்தாள். காதல் வசனத்தை உணர்வு பொங்கப் பேசியிருந்தாள். அவற்றைப் பலரும் பார்த்துவிட்டு கமென்ட் செய்திருந்தனர். தான் பதிவேற்றிய வீடியோக்களை அம்மா பார்ப்பதைக் கண்ட பூஜாவுக்குப் பயமாக இருந்தது. அப்பா, அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது என்ற துணிச்சலில்தால் அவள் பல செயலிகளைத் தரவிறக்கம் செய்திருந்தாள். இப்போது கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பிறகு என்ன செய்வதென அவளுக்குத் தெரியவில்லை. மொபைலை மகளிடமே தந்துவிட்டு அவள் பேசுவதற்காகக் காத்திருந்தார் ஹேமா.

ஹீரோயின் ஆசை

பூஜாவுக்கு அழுகை வந்தது. அம்மாவிடமிருந்து குறைந்தபட்சம் அடியையாவது எதிர்பார்த்தாள். அப்படி எதுவும் நடக்காதது பூஜாவின் கலக்கத்தை அதிகரித்தது. வழக்கமாக எல்லாக் குழந்தைகளும் சொல்வதைப் போல, தெரியாமல் செய்துவிட்டதாகச் சொன்னாள் பூஜா. அதற்கும் ஹேமாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “நான் இப்போ என்ன சொன்னாலும் உனக்கு எரிச்சலாதான் இருக்கும் பூஜா. ஆனா, நாங்க சொல்ற எல்லாமே உன் நன்மைக்குத்தான்னு முதல்ல நீ நம்பணும். பாடம் சம்பந்தமா நிறைய பார்க்கணும்னுதான் நீ ஸ்மார்ட் போன் கேட்டே. நீ ரெக்கார்ட் பண்ணியிருக்கிற வீடியோவெல்லாம் உன் ஸ்கூல் புராஜெக்ட்டா?” என்று அம்மா கேட்க, மகளிடம் அதற்குப் பதில் இல்லை.

“வாழ்க்கையில படிப்பு எவ்வளவு முக்கியமோ நம்மளோட நடத்தையும் ரொம்ப முக்கியம்னு உனக்கு நான் சொல்லித்தான் தெரியணும்னு அவசியம் இல்லை. நீ ரொம்பப் பொறுப்பான பொண்ணு. நல்லது, கெட்டது ரெண்டையும் பிரிச்சுப் பார்க்குற பக்குவம் உன்கிட்ட இருக்கு. ஆனா, இப்படியெல்லாம் வீடியோ போட்டு உன்னை நீயே தரம் தாழ்த்திக்கணுமா? இதெல்லாம் செய்தா ஹீரோயின் ஆகிட முடியுமா? சினிமாங்கறதே பொழுதுபோக்குன்னு உனக்குத் தெரியாதா?” என்று அம்மா அடுத்தடுத்து கேட்க, பூஜாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

புத்தியை மழுங்கச் செய்யும் செயலிகள்

செயலிகள் எப்படியெல்லாம் நம் நேரத்தை வீணடித்து, புத்தியை மழுங்கச் செய்துவிடும் என்பதை மகளுக்குப் பொறுமையாக எடுத்துச் சொன்னார் ஹேமா. முகம் தெரியாதவர்கள் போடுகிற லைக்கிலும் கமென்ட்டிலும் எதுவும் வந்துவிடப் போவதில்லை என்பதையும் சொன்னார். “இந்த மாதிரி சோஷியல் மீடியாவுல கிடைக்குற பாராட்டெல்லாம் உண்மையான பாராட்டு இல்லை. பொதுவாவே பாராட்டுக்கு நாம மயங்கக் கூடாது. அதுவும் நம்மை யாருன்னே தெரியாதவங்க பாராட்டுவாங்கன்னு நம்மை நாமே இப்படிக் காட்சிப்படுத்திக்கறது நல்லதா? இதுல வீணாக்குற நேரத்துல பாடம் சம்பந்தமா ஏதாவது படிச்சிருந்தாலாவது அறிவும் வளர்ந்திருக்கும், மார்க்கும் அதிகமா எடுக்கலாம். அப்புறம் எங்களுக்குத் தெரியாம ஒண்ணைப் பண்ணணும்னு நினைக்கும்போதே அது தப்பானதுன்னு உனக்குத் தெரிய வேணாமா?” என்று அம்மா கேட்டதும் பூஜா தன் தரப்பு நியாயங்களைச் சொன்னாள்.

தன் வகுப்புத் தோழிகளில் பலரும் சமூக வலைதளங்களிலும் செயலிகளும் நேரத்தைச் செலவிடுவதாகச் சொன்னாள். அவையெல்லாமே பருவ வயதில் தோன்றும் ஆசைகளே என்று சொன்ன ஹேமா, இந்த வயதில் சிலவற்றைப் பக்குவமாக அணுகத் தெரிய வேண்டும் என்பதையும் சொன்னார்.

கட்டிப்போடும் மாயவித்தையே

தான் சமீபத்தில் படித்த கட்டுரையைப் பற்றி மகளிடம் பகிர்ந்துகொண்டார் ஹேமா. அந்தக் கட்டுரை மொபைல் போன், செயலிகள் போன்றவற்றுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப் பற்றியது. பத்து வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களில் பலர் அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களது உடல் நலம் மட்டுமல்ல; மன நலமும் பாதிக்கப்படுகிறது. எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைகள்கூட ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குப் பிறகு மனரீதியாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். செயலிகள் எல்லாமே மாயவித்தைக்காரர்களைப் போன்றவை. மனிதர்கள் எந்த இடத்தில் கவனிக்கத் தவறுவார்கள்; அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வித்தைகாட்ட முடியும் என்பதில்தான் மாயவித்தைக்காரர்கள் முனைப்புடன் இருப்பார்கள். இதுபோன்ற செயலிகளை வடிவமைக்கிறவர்களும் கிட்டத்தட்ட இதேபோன்ற கொள்கையோடுதான் அவற்றை வடிவமைப்பார்கள். ஒரு முறை இதுபோன்ற செயலிகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டால் அவற்றை எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. அப்படித்தான் பலரும் பல்வேறு செயலிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவ்வப்போது எரிச்சல் அடைந்தாலும் அம்மா சொன்ன இந்தத் தகவல் அனைத்தும் பூஜாவை யோசிக்கவைத்தன. அம்மாவிடம் அரை மனத்துடன் போனைக் கொடுத்துவிட்டுச் சென்றாள் பூஜா.

கட்டுப்பாடு அவசியம்

மகளின் போனில் இருந்த செயலிகள் அனைத்தையும் அழித்துவிட்டார் ஹேமா. தேவையில்லாத செயலிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் பாதுகாப்புச் செயலிகள் சிலவற்றை அவரது அலுவலகத் தோழி, ஹேமாவுக்குப் பரிந்துரைத்திருந்தார். அவற்றைப் பதிவிறக்கி வைத்தார். இணையத் தொடர்புக்கு பாஸ்வேர்ட் போட்டுவைத்தார். குழந்தைகளுக்குச் சுதந்திரம் தேவைதான்; ஆனால், அவர்கள் அதைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பது அவசியம் என்பதையும் ஹேமா உணர்ந்துகொண்டார். செயலிகளின் பிடியிலிருந்து சில வாரங்களிலேயே பூஜா மீண்டுவிட்டாள். ஹேமாவுக்கு வாய்த்த மாதிரியான சூழல் எல்லாப் பெற்றோருக்கும் கிடைப்பதில்லை. வீட்டுக்கு வெளியே பிள்ளைகள் என்னவெல்லாம் செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதே பல பெற்றோருக்குத் தெரிவதில்லை. கடைசியில் நிலைமை கையை மீறும்போது பதறித் துடிக்கிறார்கள்.

தற்போது பாடப் புத்தகங்களில் பாடம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற QR கோட் கொடுக்கிறார்கள். அவற்றை ஸ்கேன் செய்து படிக்க ஸ்மார்ட் போன் அவசியம் என்பதால் குழந்தைகளின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டுக்குப் பெற்றோர் தடைவிதிப்பதில்லை. ஆனால், சிலவற்றைக் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். தேவையில்லாத செயலிகளை அவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். நமக்கு ஸ்மார்ட் போன் குறித்துத் தெரியவில்லை என்றால் போன் வாங்கும்போதே தெரிந்தவர்களிடம் சொல்லி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒரு நாளில் குழந்தைகள் செல்போனில் செலவிடும் நேரத்தைக் குறைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அதையும் நெறிப்படுத்த வேண்டும்.

(நிஜம் அறிவோம்...)

x