இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்!


மழைக்கு நனைந்து வெயிலுக்குக் காய்ந்து கால்கடுக்க நின்று தங்களது கடமையைச் செய்யும் காவலர்களை நாம் பல இடங்களில் பார்க்கிறோம். அப்படியான கண்ணியமிக்க காவலர்களும் இருக்கும் காவல்துறைக்குள் சில ஈவு இரக்கமற்ற மனிதர்களும் ஊடுருவிக் கிடக்கிறார்கள் என்பது அவ்வப்போது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதற்கான சமீபத்திய உதாரணம்தான் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷை தற்கொலையில் தள்ளிய சம்பவம்.

 ‘நோ பார்க்கிங்’ ஏரியாவில் காரை நிறுத்தினார் என்பதற்காக ராஜேஷை போக்குவரத்துக் காவலர்கள் இருவர் வாய்க்கு வந்தபடி ஏசியிருக்கிறார்கள். காருக்குள் பெண் பயணி ஒருவர் இருக்கிறார் என்பதைக்கூட உணராமல் போலீஸார் உதிர்த்த வார்த்தைகள் ராஜேஷை ஆழமாக பாதித்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் இத்தகைய முடிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

 தற்கொலைக்கு முன்பாக வீடியோவில் ராஜேஷ் பேசியிருப்பதைப் பார்த்தால், இன்னும் சில இடங்களிலும் போக்குவரத்து போலீஸாரின் துன்புறுத்தலுக்கு அவர் ஆளாகி இருக்கிறார் என்பதை உணரமுடிகிறது. என்றாலும், இதையெல்லாம் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவித்துதான் பரிகாரம் தேடியிருக்க வேண்டும். அப்படி அல்லாமல் உயிரை மாய்த்துக் கொள்வது எந்தத் தீர்வையும் தராது என்பதை உணரத் தவறிவிட்டார் ராஜேஷ். இந்த விஷயத்தில் அந்த இரண்டு காவலர்கள் மீது மட்டுமின்றி, வீடியோ பதிவுகளை அழித்து, தடயத்தை மறைக்க முயன்ற ரயில்வே போலீஸார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேசமயம், சமீபகாலமாக போக்குவரத்துப் போலீஸார் இதுபோன்ற தொடர் சர்ச்சைகளுக்கு ஆளாகி வருவதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளாகும் காவலர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அவர்களை அதிலிருந்து மீட்பதற்கு... பணி நேர குறைப்பு, போதுமான ஓய்வு, உரிய கவுன்சலிங் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமக்கு இருக்கிறது என்பதை காவல் துறை தலைமை இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்!

x