பேசும் படம் - 7: பிரிவினையின் சாட்சி


இந்தியாவின் தேசத்தந்தையான மகாத்மா காந்தியும், பாகிஸ்தானின் தேசத் தந்தையான முகமது அலி ஜின்னாவும் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருக்கும் இந்தப் படம் 1944-ல் எடுக்கப்பட்டது. இந்தியா இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட சோக வரலாற்றின் சாட்சி இந்தப் படம்!

1930-ல் அலகாபாத்தில் கூடிய முஸ்லிம் லீக் மாநாட்டில் இந்தியாவை 2 நாடுகளாகப் பிரித்து இஸ்லாமியருக்காகத் தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முழக்கம் ஒலித்தது. அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த எண்ணத்தில் இருந்து அவர்களைத் திருப்பிவிட முடியும் என்று மகாத்மா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர். ஆனால், முஸ்லிம் லீக் தலைவர்கள் மத்தியிலோ இந்தியாவைப் பிரித்து தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது.

1940-ல் நடந்த லாகூர் மாநாட்டில் தனிநாடு கோரிக்கையை முகமது அலி ஜின்னா வலியுறுத்தினார். முஸ்லிம் லீக் தலைவர்கள் அவர் பின்னால் அணிவகுக்க, மனதளவில் நொறுங்கிப் போனார் காந்தி. “என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” என்று இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த காந்தியடிகள், இந்தியா பிளவுபடாமல் இருக்க தன்னால் இயன்றவரை இறுதிவரை போராடினார்.

 அந்தக் காலகட்டத்தில் மும்பையில் இருந்த ஜின்னாவின் இல்லமான ‘ஜின்னா ஹவுஸ்’ மிகவும் புகழ்பெற்றது. 1936-ம் ஆண்டு ஜின்னா இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பிய காலகட்டத்தில் தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் இந்த வீட்டை வாங்கினார். முதலில் இது ‘சவுத் கோர்ட்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தனிநாடு கோரிக்கையை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த வீட்டில்தான் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் ஜின்னா ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்த மகாத்மா காந்தி விரும்பியபோது, அவர் தனது இல்லத்துக்கு வந்துதான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் ஜின்னா. இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத காந்தி, ஜின்னா ஹவுஸுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

1944-ம் ஆண்டு இரு தலைவர்களுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. 14 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நாட்டைப் பிரிக்கக்கூடாது என்ற காந்தியின் பேச்சை ஜின்னா ஏற்க மறுத்தார். இப்படி இருவரிடையே நடந்த ஒரு பேச்சுவார்த்தையின்போது ஜின்னா ஹவுஸின் முன்பு காந்தியும்- ஜின்னாவும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைத்தான் இங்கே படமாக்கி இருக்கிறார் குல்வந்த் ராய்.

14 சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் ஜின்னாவைத் தன் வழிக்குக் கொண்டுவர முடியாததால் இந்தியாவைப் பிரிக்க ஒப்புக்கொண்டார் மகாத்மா காந்தி. இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக உருவானது.

குல்வந்த் ராய்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியத் தருணங்களைத் தனது கேமராவில் பதிவு செய்தவர் குல்வந்த் ராய் (Kulwant Roy). பஞ்சாபில் உள்ள லூதியானாவில் 1914-ல் பிறந்த இவர், தனது இளமைக் காலத்தில் ராயல் இந்தியா ஏர்போர்ஸில் இணைந்து சேவையாற்றினார். அதிலிருந்து விலகிய பிறகு டெல்லியில் போட்டோ ஏஜென்ஸியைத் தொடங்கி புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினார். மகாத்மா காந்தியின் பயணங்களின்போது அவருடன் பல இடங்களுக்குச் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க படங்களை இவர் எடுத்துள்ளார்.

காந்தியுடன் ஜின்னா விவாதித்துக்கொண்டிருக்கும் இந்தப் படம் ஹல்டன் - கெட்டி ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகத்தான் சமீப காலம் வரை குறிப்பிடப்பட்டு வந்தது. சமீபத்தில்தான் இந்தப் படத்தை எடுத்தவர் குல்வந்த் ராய் என்பது தெரியவந்தது. நேரு, படேல் போன்ற பல முக்கியத் தலைவர்களையும், பல்வேறு தருணங்களில் இவர் படம் பிடித்துள்ளார். இந்தியாவின் புகைப்படக்காரர்களில் ஜாம்பவானாகக் கருதப்பட்ட இவர் 1984-ம் ஆண்டு காலமானார்.

x