இன்று குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடவும் வீட்டுப்பாடம் எழுதவும் சிறு சிறு வீட்டு வேலைகளைச் செய்யவும் பெற்றோர் வைத்திருக்கும் அஸ்திரம் ஸ்மார்ட் போன்கள். சிறு குழந்தைகள்கூட ஸ்மார்ட் போனுக்குப் பழகியிருக்கின்றனர். பெற்றோரும் குழந்தைகள் தங்களைத் தொந்தரவு செய்யாமலும் வெளியே சென்று விளையாடாமல் ஓரிடத்தில் அமைதியாக உட்காரவும் அவர்களிடம் ஸ்மார்ட் போனைக் கொடுத்துவிடுகின்றனர். குழந்தைப் பருவத்திலேயே அறிமுகமாகிவிடுகிற ஸ்மார்ட் போன் பயன்பாடு, வளர்ந்த பிறகு மீளவே முடியாத புதைகுழிக்குள் தள்ளிவிடுகிறது.
குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவற்றின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கல்லூரி மாணவர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தியது. இந்தியாவில் உள்ள மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பதற்றத்தாலும் நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிடுவோமோ என்ற பயத்தாலும் கல்லூரி மாணவர்கள் ஒரு நாளுக்குக் குறைந்தபட்சம் 150 முறையாவது ஸ்மார்ட் போனைப் பார்த்துவிடுகிறார்கள் என்கிறது 2018-ல் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு. மற்ற ஆய்வுகளைப்போல் ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து மட்டுமே இது நடத்தப்படவில்லை. தொடர்ச்சியான ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் மாணவர்களிடம் ஏற்படுகிற நடத்தை மாற்றத்தை இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகக் கவனித்து அதன் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவு எழுதப்பட்டிருக்கிறது என்பதால் இதை எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
கட்டுக்கடங்காத ஸ்மார்ட் போன் பயன்பாடு
பேசுவதற்கு மட்டுமே ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை இன்று குறைவு. சமூக வலைதளங்களில் இயங்கவும் இணையத்தில் தகவல்களைத் தேடவும் பொழுதுபோக்காகவும் படங்கள் பார்க்கவும் ஸ்மார்ட் போனையே பயன்படுத்துகிறார்கள். இப்படி அதிக நேரத்தை ஸ்மார்ட் போனில் செலவிடுவதால் அவர்களின் வழக்கமான செயல்பாடுகளில் தொய்வு ஏற்படத்தொடங்கிவிடுகிறது. 14 சதவீதத்தினர் மட்டுமே ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று மணி நேரமோ அல்லது அதற்குக் குறைவாகவோ ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறார்கள். 63 சதவீதத்தினர் நான்கு மணி நேரம் முதல் ஏழு மணி நேரம் வரை போனில் மூழ்கிக்கிடக்கிறார்கள். 23 சதவீதத்தினர் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்மார்ட் போனே கதியெனக் கிடப்பதாகச் சொல்லும் அந்த ஆய்வறிக்கை, இது இளம் தலைமுறையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கே கேடு எனவும் குறிப்பிடுகிறது.
ஆரோக்கியத்துக்கும் கேடு
குறிப்பாக, 13 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறார்கள். 60 சதவீத இளைஞர்களுக்கு ஒரு நாளுக்குக்குறைந்தது 125 குறுஞ்செய்திகளாவது வந்துவிடுகிறதாம். 80 சதவீதத்தினர் நொடிக்கொரு தரம் தங்கள்ஸ்மார்ட் போன் திரையைப் பார்ப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஸ்மார்ட் போனில் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பது ஒரு வகை பிரச்சினை என்றால் அவர்கள் இப்படி அதிக நேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கியிருப்பது அவர்களது உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும். தூக்கமின்மை, மன அழுத்தம், குறைவாகச்சாப்பிடுவது, படிப்பில் கவனம் சிதறுவது, பதற்றம், கடமை தவறுதல், அளவுக்கு அதிகமான மூர்க்கம், மறதிஎனப் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகக் கூடும் என்கிறதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் மவுலானா ஆசாத்மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வு.
ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தபோது இப்படியான பாதிப்புகளில் இருந்து மீள்வதை உணர்வதாக 25 சதவீதத்தினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.
பாதைமாற்றும் செயலிகள்
சிறு குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கித் தங்களைத் தொலைக்கிறார்கள் என்றால் வளரிளம் பருவத்தினரோ செயலிகளுக்கு அடிமையாகிக்கிடக்கிறார்கள். பெற்றோருக்குத் தெரியாத தொழில்நுட்ப சூட்சுமங்கள் அனைத்தும் குழந்தைகளுக்குத் தலைகீழ் பாடம். செயலிகள் குறித்தோ அவற்றின் பயன்பாடு குறித்தோ பெற்றோர் தெரிந்துகொள்வதற்குள் குழந்தைகள் அவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். சமூக வலைதளங்கள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் புதுப்புது செயலிகள் பதின் பருவத்தினரைத் திசைமாறச் செய்கின்றன. ஸ்மார்ட்போன் இல்லாதது தகுதிக் குறைவு என்றே பெரும்பாலான பதின்பருவத்தினர் நினைக்கின்றனர். அவற்றின் மீதான மோகம் அவர்களுக்குக் குறைவதே இல்லை. போன் வாங்கித்தரக் கேட்டு அடம்பிடிப்பதில் தொடங்கி, பெற்றோரைத் தாக்குவது வரை ஸ்மார்ட் போன்கள் மீதான மோகம் குழந்தைகளைப் பிடித்து ஆட்டுகிறது.
பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய செயலிகளைப் பதின்பருவக் குழந்தைகளும் தரவிறக்கம் செய்து கொள்கின்றனர். நண்பர்கள் மத்தியில் தங்களைக் கதாநாயகனாகக் காட்ட விரும்பும் அவர்கள் திரைப்படங்களில் கதாநாயகர்கள் பேசுகிற வசனத்தையும் பாடலையும் செயலிகளின் உதவியோடு நடித்து அரங்கேற்றிப் பெருமிதப்படுகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த வகையான மோகம் அதிகரித்திருக்கிறது. இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. ஆண்கள் கதாநாயகர்கள் என்றால் பெண்கள் கதாநாயகிகளாகத் தங்களை நினைத்துக்கொள்கின்றனர். அவர்களைப்போலவே நடை, உடை, பாவனையோடு நடித்து அந்த வீடியோக்களைச் சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர். இன்னும் சில மாணவர்கள் ஒருபடி மேலே போய் பள்ளியிலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
தடுமாறும் இளம் மனங்கள்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியொன்றில் ப்ளஸ் டு படிக்கும் ஆறு மாணவர்கள் வகுப்பறையிலேயே கதாநாயகர்கள்போல் நடித்து வீடியோ வெளியிட்டிருக்கின்றனர். வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை அவர்கள் ஒரு பொருட்டாகக்கூட மதித்ததாகத் தெரியவில்லை. இன்னொரு வீடியோவில் ஒரு மாணவன் சட்டையைக் கழற்றி, அதைத் தலைப்பாகைபோல் கட்டியபடி வகுப்பறையில் அமர்ந்திருக்கிறார். இளம் மனங்களில் தங்களைக் கதாநாயகனாகக் காட்ட முயலும் இப்படியான மோகம் இன்று நிறைந்திருக்கிறது. ஸ்மார்ட் போன் செயலிகளில் தங்களை விதம் விதமாகப் படமெடுத்து அவற்றை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் குழந்தைகளின் செயல்கள் அவர்களின் பெற்றோருக்குத் தெரியுமா? பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இப்படியான செயல்பாடு குறித்து அறியாமல்தான் இருக்கிறார்கள். ஹேமாவுக்கும் அது தாமதமாகத்தான் புரிந்தது.
ஹேமா தன்னுடன் பணிபுரியும் சுந்தரி காட்டிய வீடியோவைப் பார்த்து அதிர்ந்தார். ஒருவேளை நாம் சரியாகப் பார்க்கவில்லையோ எனக் குழம்பி மீண்டும் ஒருமுறை அந்த வீடியோவைப் பார்த்தார். அதில் கொஞ்சி கொஞ்சி வசனம் பேசி, கண்ணடித்துச் சிரித்தவள் ஹேமாவின் மகள் பூஜா. இந்த வீடியோ எப்படி சுந்தரிக்குக் கிடைத்தது எனக் கேட்டார். தனக்கு வாட்ஸ் - அப்பில் வந்ததாக சுந்தரி சொல்ல, ஹேமாவுக்கு மயக்கம் வராத குறைதான். வீட்டுக்குள் பூனைக்குட்டிபோல் அமைதியாக இருக்கும் பூஜாவா இப்படிச் சிரித்துப் பேசி நடித்திருக்கிறாள்? அவள் நடித்தது எப்படி வீடியோவாக மாறியது, அது எப்படி வாட்ஸ் - அப்பில் பரவியது, உறவினர்கள் அனைவரும் இதைப் பார்த்திருப்பார்களா, அக்கம் பக்கத்தினர் பார்த்திருந்தால் பூஜாவைப் பற்றி என்ன நினைப்பர்கள், ப்ளஸ் டு படிக்கும் பெண்ணுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் என்று யோசிக்க யோசிக்க ஹேமாவுக்குக் கோபமும் ஆத்திரமும் வந்தது. சுந்தரிதான் அவரைச் சமாதானப்படுத்தினார். தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவரும் ‘டிக் டாக்’ செயலியைப் பற்றி ஹேமாவுக்குச் சொன்னார் சுந்தரி. அதில் பலரும் வீடியோக்களைப் பகிர்வார்கள் என்றும் அதை அனைவரும் பார்க்கலாம் என்றும் சொன்னபோது ஹேமாவுக்கு ஓரளவு புரிந்தது.
பூஜா ஏன் இப்படிச் செய்தாள்?
பாடம் சம்பந்தமாகத் தகவல்கள் திரட்ட வேண்டும் என்பதால் பூஜாவுக்கு இந்த ஆண்டுதான் புது மாடல் ஸ்மார்ட் போனை வாங்கித் தந்திருந்தார்கள்; அதுவும்அன்லிமிடட் டேட்டா வசதியோடு. மொபைல் வாங்கியசில நாட்களில் பாடம் தொடர்பானவற்றை மட்டும் இணையத்தில் தேடிவிட்டு போனைப் பெற்றோரிடம் கொடுத்துவிடுவாள் பூஜா. சில நாட்கள் கழித்துத் தோழிகள் அனைவரும் பள்ளிக்கு போனை எடுத்துவருகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லி போனைக் கேட்டாள். பள்ளியில் செல்போன் பயன்படுத்த அனுமதியில்லை என்றபோதும் பள்ளிக்கு போனை எடுத்துச் சென்றாள். பள்ளி நேரத்தில் போனை அணைத்துவைத்துவிட்டு, உணவு இடைவேளையில் பயன்படுத்தத் தொடங்கினாள். தோழிகள் வழிகாட்டுதலில் பல்வேறு செயலிகளைத் தரவிறக்கம் செய்துகொண்டாள். வீடு திரும்பிய பிறகு பாடங்களை முடித்த கையோடு போனும் கையுமாக உட்கார்ந்துவிடுவாள்.
மகள் மேற்படிப்பு குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக நினைத்து பூஜாவின் பெற்றோர் அவளது நடவடிக்கைகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சில நேரம் அவளது அறைக்குள்ளிருந்து பாட்டுச் சத்தம் கேட்கும். தொடர்ந்து பாடம் படிப்பதால் இடையிடையே பாடல்கள் கேட்கிறாள் என அதற்கும் பெற்றோர் தாங்களாகவே ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டனர். அப்படி நினைத்தது எவ்வளவு தவறு என்று ஹேமாவுக்கு இப்போது புரிந்தது. இந்த ஒரு செயலியில் மட்டும்தான் பூஜா இப்படி வீடியோக்களைப் பதிவேற்றியிருக்கிறாளா அல்லது நிறைய செயலிகளை டவுன்லோடு செய்திருக்கிறாளா என ஹேமா யோசித்தார். ஆபீஸ் முடிந்து வீடு திரும்பியவர் மகளின் வருகைக்காகக் காத்திருந்தார்.
(நிஜம் அறிவோம்...)